வீடுதோறும் மின் உற்பத்தி!
- சர்வதேச புத்தாக்க எரிசக்தி ஆற்றலில் தாமதமாக நுழைந்தோம் என்றாலும்கூட, இன்று உலகளாவிய அளவில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்தியா பெற்றிருக்கிறது. குஜராத் முதல்வராக இருக்கும்போது புத்தாக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கி ஊக்குவித்த நரேந்திர மோடி, 2014-இல் இந்தியாவின் பிரதமரானதைத் தொடர்ந்து, புத்தாக்க எரிசக்தித் துறை தேசிய முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் விளைவாக 2014-இல் வெறும் 25 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி 2024-இல் 130 ஜிகாவாட்டை எட்டியிருக்கிறது.
- இந்தியாவின் மொத்த மின்சக்தி உற்பத்தியில் புத்தாக்க எரிசக்தியின் பங்கு மூன்று மடங்கு அதிகரித்து 12%-ஐ எட்டியிருக்கிறது. 2023-24 நிதியாண்டில் மட்டும் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி 18 ஜிகாவாட்டை எட்டியதைத் தொடர்ந்து அதன் வளர்ச்சி அசுர வேகம் எடுத்திருக்கிறது.
- 2014 மார்ச்-இல் 2.8 ஜிகா வாட்டாக இருந்த சூரிய மின்சக்தி கடந்த பத்தாண்டுகளில் 30 மடங்கு அதிகரித்து ஜூலை 2024-இல் 87.21 ஜிகாவாட்டை எட்டியது. அதன் மூலம் உலகளாவிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
- 2030-க்குள் சூரிய மின்சக்தி உற்பத்தி 280 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாக்க எரிசக்திக்கான 2030 இலக்கு 500 ஜிகா வாட் எனும்போது, அதில் பாதிக்கு மேல் சூரிய மின்சக்தியின் பங்களிப்பாக இருக்கும்.
- சூரிய மின்சக்தி உற்பத்தியைப்போலவே அதற்குத் தேவையான உபகரணங்களின் உற்பத்தியும் கணிசமாகவே உயர்ந்திருக்கிறது. சூரிய மின்சக்தி உற்பத்தியில் மாட்யூல், செல்ஸ், வேஃபர்ஸ், இன்காட், பாலி சிலிக்கான் உள்ளிட்டவை முக்கியமான பாகங்கள். சீனாவில் இருந்து செய்யப்பட்ட இறக்குமதியில் மாட்யூல் இறக்குமதி 76%, சூரிய மின்தகடு (சோலார் செல்ஸ்) இறக்குமதி 17% குறைந்திருக்கிறது என்றால், இந்தியாவில் அவற்றின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்று பொருள். ஆனாலும்கூட, பல உதிரிபாகங்களுக்கு நாம் இறக்குமதியை நம்பியிருக்கிறோம். இந்தியா உலகளாவிய அளவில் சூரிய மின்சக்தி சாதனங்களின் ஏற்றுமதியாளராக மாறுவதற்குக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட வீடுகளுக்கான சூரிய மின்சக்தித் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கூரை மீதான சூரிய மின்சக்தி கருவியை, நான்காண்டுகளில் ஒரு கோடி வீடுகளில் நிறுவுவதற்கு, ரூ.75,021 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 6,38,352 கூரை மீதான சூரிய மின்தகடுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றில் சுமார் 3,500 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
- 2024-25-இல் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.9,200 கோடியில் இதுவரை ரூ.2,865 கோடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. 2025 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் கூரை மீதான சூரிய மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு அவை ஆறு மாத இடைவெளியில் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
- அரசின் எதிர்பார்ப்பு பேராசையாகத் தெரிந்தாலும்கூட, அது எட்ட முடியாத இலக்கு அல்ல. கடந்த நவம்பர் மாதம் மட்டுமே 18,423 சூரிய மின் இணைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன எனும்போது, மக்கள் மத்தியில் ஆதரவும், வரவேற்பும் பெருகக் கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.
- கூரை மீதான சூரிய மின்தகடுகள் மூலம் 300 யூனிட் வரையிலான இலவச மின்சாரத்தை வீடுகளுக்கு வழங்க முடியும். மின்தகடுகளின் திறனைப் பொருத்து, ஆண்டொன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை குடும்பங்களின் மின்சாரத்துக்கான செலவைக் குறைக்க முடியும்.
- சூரிய மின்சக்தி நிறுவுவதற்கான செலவில் 60% மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு கிலோவாட் திறனுக்கு ரூ.30,000, 2 கிலோவாட்டுக்கு ரூ.60,000, 3 கிலோவாட்டுக்கு ரூ.78,000 நேரடி மானியமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் தயாரித்த சூரிய மின்தகடுகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் நிறுவ வேண்டும் என்பது மானியத்துக்கான நிபந்தனை.
- பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (பிரதமர் ஆவாஸ் யோஜனா) மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக கட்டப்படும் வீடுகளில் இலவசமாகவே சூரிய மின்தகடுகள் நிறுவப்படுகின்றன. குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கு வரப்பிரசாதமாக அமைகிறது கூரை மீதான சூரிய மின்சக்தி மானிய திட்டம்.
- இந்தத் திட்டத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. தேவைக்குக் குறைவாக சூரிய மின்சக்தி கிடைத்தால் மின்வாரிய கட்டண மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைக்கு அதிகமாக உற்பத்தி ஆகும் மின்சாரம் மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டு, அதற்கான விலையை மின்வாரியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
- கூரை மீதான சூரிய மின்சக்தி இணைப்புகளில் 65% குஜராத் (2,87,814), மகாராஷ்டிரம் (1,27,381) ஆகிய இரண்டு மாநிலங்களில் காணப்படுகின்றன. உத்தர பிரதேசம் (53,801), கேரளம் (52,993) ஆகியவற்றையும் சேர்த்தால் 80% இணைப்புகள் அந்த நான்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவின் ஏனைய மாநில அரசுகளும் வீடுகளில் சூரிய மின்சக்தி நிறுவுவதை ஊக்கப்படுத்தினால் மிகப் பெரிய அளவில் மாநில அரசுகளுக்கும், குடும்பங்களுக்கும் சேமிப்பு அதிகரிக்கும்.
- எல்லாத் திட்டங்களையும்போல, சூரிய மின்சக்தி திட்டத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் களைவதில்தான் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது.
நன்றி: தினமணி (19 – 12 – 2024)