TNPSC Thervupettagam

வீட்டருகே மேயும் காட்டு மாடுகள்

September 21 , 2024 116 days 138 0

வீட்டருகே மேயும் காட்டு மாடுகள்

  • இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதி. கோடை காலம் எனும் பருவத்தையே மறந்து எப்போதும் மழைச் சாரலோடும் மேகமூட்டத்தாலும் மூடப்பட்டிருக்கும் இயற்கையமைப்பை உடையது. தமிழகத்தின் சிறந்த கோடை வாழிடங்களுள் ஒன்று ஊட்டி. அதன் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கச் செல்லும் சமவெளிவாழ் மக்கள் மலைத்துப்போகின்றனர்; குளிர்ச்சியான நினைவுகளோடு காண்பவற்றையெல்லாம் ஒளிப்படங்களாக்கி எடுத்துச் செல்கின்றனர்.
  • அங்குள்ள அடர்ந்த காடுகளில் காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள், வேங்கைப் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், குரங்குகள், யானைகள் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. அடர்ந்த காடுகளுக்குள் வாழ விரும்பும் இந்த விலங்குகள் சமீபக் காலத்தில் சாலைகளிலும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வந்து போவதை எளிதாகப் பார்க்க முடிகிறது.
  • இது குறித்த படங்கள், காணொளிகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாவதைப் பார்க்கிறோம். அவை வாழும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனித வாழிடங்களாகவும், பயன்பாட்டுத் தலங்களாகவும் மாறிவருவதே இதற்குக் காரணம். அவற்றுக்குக் காட்டுக்குள் இயல்பாகக் கிடைத்துக்கொண்டிருந்த இரை குறைவது மற்றொரு காரணம்.

வீட்டுக்கு மிக அருகில்...

  • சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இம்மலைப் பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த மனிதக் குடியிருப்புகள் இப்போது நெருக்கமான வீடுகளால் நிரம்பிவருகின்றன. சாலைகளும் வாகனங்களும் பெருகி வருவதால், காடுகள் துண்டாக்கப்பட்டு எழில் குன்றிவருகின்றன.
  • ஆனால் அங்குள்ள வனவிலங்குகளுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவை தாங்கள் வாழும் பகுதிகளில் எப்போதும் போலச் சுற்றித் திரிகின்றன. முன்பெல்லாம் காடுகளுக்குள் தங்களது தேவையின் நிமித்தம் செல்பவர்களால் மட்டுமே இத்தகைய விலங்குகளை அரிதாகப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் கூட்டமாகவும் தனியாகவும் யானை, காட்டுப் பன்றி, காட்டு மாடுகள் போன்றவை ஊர்ப் பகுதிகளிலேயே ஆங்காங்கே தென்படுகின்றன.
  • இரவு பகலென்று இல்லாமல் எல்லா வேளைகளிலும் சாலையோரங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், விவசாயப் பணியிடங்களிலும், வீடுகளுக்கு மிக அருகிலும் சர்வசாதாரணமாக இவை இரை தேடி வந்துசெல்கின்றன. இரவு நேரத்தில் வீடுகளின் அருகில் வந்து சென்றதற்கான அடையாளங்களையும் விட்டுச் செல்கின்றன. மனிதர்களான நாம் அவற்றைத் தொந்தரவு செய்யாதவரை அவையும் கண்டுகொள்ளாமல் செல்கின்றன.

அச்சமில்லாத் தொழிலாளர்கள்:

  • இந்தக் கோடை விடுமுறையில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரிக்கு அருகில் அணையட்டி என்கிற பகுதிக்குச் சென்றிருந்தோம். தேயிலைத் தோட்டத்தில் பகல் நேரத்தில் பணியாளர்கள் தேயிலையைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் சுமார் ஐம்பது, அறுபதடி தொலைவில் காட்டு மாடுகள் பெரிதும் சிறிதுமாக, பத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தபடியே தங்களது பணியில் கவனம் செலுத்தி, செயல்பட்டுக் கொண்டிருந்தனர் அங்கிருந்த தொழிலாளர்கள்!
  • அருகில் ஒரு தேயிலைத் தொழிற்சாலையும் இயங்கிகொண்டிருந்தது. தொலைவிலிருந்து அதனை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் காட்சி அச்சம் கலந்த ஆச்சரியத்தைத் தந்தது.
  • இது குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, “பயம் என்பது ஒரு கட்டத்திற்குமேல் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அவை விலங்குகள்; எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தாக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வு மட்டும் நமக்கு அவசியம்தான். அதேநேரம் அச்சுறுத்தி அவற்றை விரட்ட முயன்றால், நமக்குத்தான் தோல்வி கிடைக்கும்.
  • அவை தங்களுக்குத் தேவையான அளவு இரையை மேய்ந்துவிட்டுதான் இடத்தைக் காலி செய்யும். அதோடு அவையும் நம்மைக் கூர்ந்து கவனிக்கின்றன. அவை விரும்பத்தகாத வகையில் நாம் எதிர்க்கும் பட்சத்தில்... நம்மை மிக மோசமாகத் தாக்கவும் தயங்காது” என்கின்றனர்.
  • விலங்குகள் தங்களது வலிமையை அறிந்திருப்ப தோடு, பெருங்காடுகளாக இருந்த அப்பகுதி தங்களுக்கும் உரியதுதான் என்கிற உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றன. அவை அஞ்சாமல் இருப்பதற்கு இவை ஒரு காரணமாக இருக்கலாம்.

தொந்தரவும் எச்சரிக்கையும்:

  • உயிர் வாழும் தகுதியைப் பெற்றிருக்கும் உயிரினங்கள் அனைத்துமே சூழ்நிலை மாற்றங்களைச் சமாளித்து வாழும் திறனை இயல்பாகவே பெற்றிருப்பதில் வியப்பில்லை! எனவே, சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் அறிவார்ந்த முதிர்ச்சியை மனிதர்களும் ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே சுற்றுச்சூழலுடனான வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றிகொள்ள முடியும்.
  • நம்மைவிட உடல் வலிமை மிக்க வனவிலங்குகளால் நமக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அவற்றின் இயல்புகளை அறிந்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அதே நேரம் அவற்றை விரட்டவோ தாக்கவோ தேவையில்லை.
  • சுற்றுலாப் பயணிகள் அரிய வகை விலங்குளைக் கண்டால் ஒளிப்படம் எடுப்பதும், சத்தம் எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவிப்பதும், ஆபத்தை வரவழைக்கும் செயல் என்பதை அறிவதில்லை. சாலையோரங்களில் இரவு நேரம் இரை தேடலில் ஈடுபடும் காட்டு விலங்குகள் மக்களின் நடமாட்டத்தையோ வாகனங்களின் இரைச்சலையோ பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே அவற்றை மிகக் கவனமாக கடந்து செல்ல வேண்டும்.

இணக்க வாழ்வு:

  • “கவனக் குறைவாக அவற்றின் அருகில் செல்வதும் ஒளிப்படம் எடுக்க முயல்வதும் தவறு. ஒளிப்படக் கருவியிலிருந்து வெளிவரும் அதிக ஒளி அவற்றின் கண்களை அடைவதால், அவை அதனை ஆபத்தாக உணர்ந்து உடனே எதிர்வினையாக மனிதர்களைத் தாக்க முயல்கின்றன” என்கின்றனர் வனப் பாதுகாவலர்கள்.
  • இத்தகைய திடீர் செயல்களால் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று அவை தவறான புரிதலைப் பெறவும் சுற்றுலாப் பயணிகள் வழிவகுக்கின்றனர். இதனால் அப்பகுதியின் விவசாயிகள் அவற்றால் பாதிக்கப்படுவர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நாமும் அவையும் ஒருவருக்கு இன்னொருவர் பாதிப்புகள் அற்ற விதத்தில் வாழ முடியும். அதற்கான வாழ்க்கை முறையைத் திட்டமிட்டுச் செயல்படுத்த, அது சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே சரியான தீர்வாக முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்