- கரோனா இரண்டாவது அலைக்கு நடுவே மாநில அரசுகள் வார இறுதி ஊரடங்குகளையும் பொதுமுடக்கம் போன்ற நடைமுறைகளையும் அமல்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் வேறொரு பிரச்சினையும் எழுகிறது: முறைசாராத வீட்டு வாடகைச் சந்தையில் ஏற்படும் வாடகைப் பிரச்சினைதான் அது.
- எடுத்துக்காட்டாக, ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரத்தில் வீட்டு வேலை பார்ப்பவர்கள் ராஜஸ்தான் மஹிலா காம்கார் யூனியனில் (ஆர்எம்கேயூ) முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
- “இந்த முறை வாடகைக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது” என்ற ஒற்றை வரியையே வீட்டு உரிமையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
மறுபடியும் அதே துயரம்
- இதற்கிடையே, மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துகொண்டிருப்பது பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன.
- மறுபடியும், 2020-ன் நிகழ்வுகள் தொடர்வது போன்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு நெருக்கடியின்போது உணவு, வருமானம் போன்றவற்றின் மீது இருக்கும் அளவுக்கு வாடகையின் மீது யாருக்கும் கவனம் இருக்காது.
- எனினும், ஜெய்பூரில் உள்ள 500 வீட்டு வேலைத் தொழிலாளர்களிடம் ஆர்எம்கேயூ மற்றும் மனிதக் குடியமர்வுகளுக்கான இந்திய நிறுவனம் (ஐஐஎச்எஸ்) இரண்டும் சேர்ந்து நடத்திய ஆய்வின் முடிவில் ஒரு விஷயம் தெரியவந்தது.
- 2020-ல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் முதல் 5 வாரங்களில் அந்தத் தொழிலாளர்களின் சராசரி செலவில் வீட்டு வாடகை 40% அளவில் இருந்தது.
- பொதுமுடக்கம் முடிந்த பிறகு அவர்களுக்கு இருந்த கடனில் வீட்டு வாடகை பெரும் பங்கு வகித்தது. நகர்ப்புறத் தொழிலாளர்கள் அடைந்த பாதிப்பில் அதுவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.
- இது வீட்டு வேலைகள் பார்க்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல; புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலைகள் வழியாக நடந்தே தங்கள் கிராமங்களுக்குச் செல்ல முடிவெடுத்ததற்கு வாடகைப் பணம் மீதான அச்சமும் ஒரு காரணம் என்று ‘ஸ்ட்ரேண்டெட் வொர்க்கர்ஸ் ஆக்ஷன் நெட்வொர்க்’கின் அறிக்கைகள் காட்டியிருக்கின்றன.
- கடந்த ஆண்டின் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்; முறைசாரா தொழிலாளர்களை வாடகைப் பிரச்சினையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
- இதை எப்படிச் செய்வது? கடந்த ஆண்டு வீட்டு வாடகைப் பிரச்சினை என்னவாயிற்று என்பதைத் தெரிந்துகொள்ள ஜெய்பூரில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் 76 பேரை பிப்ரவரி மாதம் நாங்கள் நேர்கண்டோம். அதிலிருந்து முக்கியமான பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
நடைமுறைச் சிரமங்கள்
- மார்ச் 29, 2020-ல் உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு வெளியிட்டிருந்தது. “புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வாடகை வீட்டில் வசிக்கும் அனைத்துத் தொழிலாளர்களிடமிருந்தும் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை வசூலிக்கக் கூடாது” என்று அந்த உத்தரவு கூறியது. பெரும்பாலும் அந்த உத்தரவை யாருமே பின்பற்றவில்லை.
- அந்த உத்தரவு குழப்பமானதாக இருந்தது (வாடகை செலுத்துவதிலிருந்து விலக்கா, அல்லது பிறகு செலுத்தலாமா?
- அந்த உத்தரவு வீட்டு உரிமையாளர்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை (பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வீட்டு வாடகையையே நம்பி இருப்பவர்கள், அவர்களுக்கும் அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை); வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகையாளர்களுக்கும் எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லாத நிலையில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்த இயலாததாகவே இருந்தது.
- மேலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. பெரும்பாலான சமயங்களில் வாடகைக்குக் குடியிருப்போர்தான் தங்கள் வீட்டு உரிமையாளர்களின் இரக்கத்தைக் கோரிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
- நாங்கள் நேர்கண்டவர்களில் ஒருவரான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரசின் இந்த உத்தரவு பற்றி அவருடைய வீட்டு உரிமையாளரிடம் கூறியிருக்கிறார்; அதற்கு அந்த உரிமையாளர், “இதெல்லாம் நடக்கிற விஷயமில்லை, யாரும் உண்மையில் வாடகையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
- சில வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத, அல்லது இரண்டு மாத வாடகைகளை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள், பிறரோ வாடகையைப் பிறகு தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள். சிலர் எந்த சமரசமும் செய்துகொள்ள முன்வராததோடு நேரத்துக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
- சில சமயம், அச்சுறுத்தலையும் மிரட்டலையும் கையிலெடுத்திருக்கிறார்கள். வீட்டு வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் எந்த அளவுக்குக் கீழே இறங்க வேண்டியிருந்தார்கள் என்பது நாங்கள் செய்த நேர்காணல்கள் மூலம் தெரியவந்தது.
- உணவு, பள்ளிக் கட்டணம் போன்றவற்றுக்காக வைத்திருந்த பணத்தையும் வாழ்நாள் சேமிப்பையும் தாங்கள் குடியிருப்பதற்கென்று ஒரு வீட்டைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வாடகையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். எந்த வருமானமும் இல்லாமல், ஆனால் வாடகையும் பள்ளிக் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலையில் முறைசாரா தொழிலாளர்கள் பலர் கந்துவட்டிக்காரர்கள் போன்றோரிடம் கடன் வாங்க வேண்டி நேர்கிறது.
- வாடகையைப் பிறகு செலுத்திக்கொள்ளலாம் என்று அவர்களின் வீட்டு உரிமையாளர் கூறினாலும் அதனால் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்குக் கடன் சேர்ந்துகொண்டே வருகிறது.
- அவர்கள் மறுபடியும் வேலை தேடிக்கொள்வதற்கு சில மாதங்கள் ஆகின்றன. வீட்டுவேலைத் தொழிலாளர்களில் சிலர் தாம் வேலை பார்க்கும் வீடுகளிலேயே கடன் வாங்குகிறார்கள்; அடுத்து வரும் சில மாதங்களில் வேலை பார்த்தே அந்தக் கடனைக் கழித்துவிடுகிறோம் என்ற நிபந்தனையின் பேரில். இதனால், வருமானம் என்பது முற்றிலும் வறண்டுபோகிறது.
- தங்களைப் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று கருதிக்கொள்ளாத தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை என்பது முக்கியமானது. நாங்கள் நேர்கண்ட வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவது ஒரு தெரிவாகவே இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள்.
- அந்த நகரங்களில் பல பத்தாண்டுகள் அவர்கள் இருந்துவிட்டார்கள்; பலருக்கும் அங்கேதான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அதேபோல், கிராமங்களில் வேலைவாய்ப்புகளும் இல்லை, அவர்களுக்கு விவசாய வேலைகளும் தெரியாது, மேலும் ஊரோடும் தொடர்பு அறுந்துபோய்விட்டது.
- “எங்கள் பிள்ளைகள் இங்கேதான் படிக்கிறார்கள், ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இங்கேதான் வாழ்கிறோம், எங்களுக்கு விவசாய வேலைகள் ஏதும் தெரியாது, கிராமத்தில் போய் நாங்கள் என்ன செய்வது?” என்று கூறினார் மங்கள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) எந்த விஷயத்தில் அவர்கள் இன்னும் புலம்பெயர் தொழிலாளர்களாக நீடிக்கிறார்கள் என்றால் அரசுத் திட்டங்கள் அனைத்திலிருந்தும் அவர்கள் விலக்கப்படுவது; ஏனென்றால், பல ஆண்டுகளாக முயன்றும் ஒரு ரேஷன் அட்டையைக்கூட அவர்களால் பெற முடிவதில்லை.
- “நாங்கள் வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இல்லை, ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களும் இல்லையென்றால் நாங்கள் பயங்கரவாதிகளா?” என்று கேட்கிறார் சிந்து (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
- அந்தத் தொழிலாளர்கள் உருவாக்கியுள்ள வாழ்க்கைக்கு வாடகையானது நங்கூரமிட்டிருக்கிறது; உணவு, ஊதியத்தைப் போன்று நகர்ப்புற சமூகப் பாதுகாப்பு வலைப் பின்னலில் முக்கியமானதாக வீட்டு வாடகையையும் பார்க்க வேண்டும்.
சில தீர்வுகள்
- முதலில், வாடகையைச் செலுத்துவதைத் தள்ளிப்போட்டுவிட்டு அதை அமலாக்குவதற்குத் தெளிவான இயங்குமுறையை உறுதிப்படுத்த வேண்டும்; வாடகையைப் பிறகு செலுத்துவதற்கும் வாடகையைத் தள்ளுபடி செய்வதற்கும் இடையே தெளிவான வரையறையை உருவாக்க வேண்டும்.
- தொழிலாளர் அமைப்புகளுடனும் சங்கங்களுடனும் இணைந்து செயல்பட்டால் இதை நடைமுறைப்படுத்துவது எளிதாகும். வாடகை இழப்பை ஈடுகட்டுவதற்காக வீட்டு உரிமையாளர்களுக்கு அரசே பகுதியளவு நிவாரணம் வழங்க வேண்டும்.
- இரண்டாவதாக, பல்வேறு மாநில அரசுகள் நிவாரணம் வழங்கும்போது உணவு, வருமானம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதைப் போல வாடகையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வீடுகளுக்கு எவ்வளவு வாடகை வசூலிக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் வாடகை நிவாரணம் வழங்கலாம் (ஜெய்பூரில் நாங்கள் நேர்கண்டவர்களின் சராசரி மாத வாடகை ரூ.2,500 ரூ.3,000). மூன்றாவதாக, மாநிலங்கள் மின்சாரக் கட்டணங்களில் அதுபோன்ற தொழிலாளர்களுக்குத் தளர்வு அளிக்கலாம்.
- நாம் முன்கூட்டியே தயாராக இல்லாததின் விளைவுகளை கரோனா தொற்றின் இரண்டாவது அலை நமக்கு உணர்த்தியிருக்கிறது. முதல் அலையின்போது வருமான இழப்பு, வாடகைப் பிரச்சினை போன்றவை ஏற்பட்டதைப் போல நிச்சயமாக இப்போதும் ஏற்படும்.
- அதையெல்லாம் பற்றி முன்கூட்டியே சிந்திக்காமல் இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே, முன்கூட்டிய திட்டமிடலின் மூலம் நகர்ப்புறப் பாதுகாப்பு வலைப்பின்னலானது உணவு, வருமானம், வாடகை போன்றவற்றை ஒன்றாக்க வேண்டும்.
- உணவா, வீடா என்ற கடினமான தெரிவுகளை யார் முன்னாலும் வைத்துவிடக் கூடாது.
நன்றி: தினமணி (27 – 05 - 2021)