TNPSC Thervupettagam

வீட்டு வேலைக்குக் கூலி கிடையாதா?

July 18 , 2024 9 hrs 0 min 6 0
  • இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் பாலினச் சமத்துவமற்ற சமூகங்கள்தான் இன்றுவரை நீடிக்கின்றன. பாலினப் பாகுபாட்டின் அளவும் வடிவமும் இடத்தையும் சூழலையும் பொறுத்து மாறியிருக்கின்றனவே அன்றி, பாலின ஏற்றத்தாழ்வு இல்லாத தொழில், அமைப்பு, நாட்டைக் காண்பது அரிதினும் அரிதாக உள்ளது. எல்லாக் காலங்களிலும் அசமத்துவமான சூழல் நிலவுகிறது. ஆணைவிடப் பெண்ணுக்கு வேலைப்பளு அதிகமாகவே உள்ளது.
  • ஒரு மனிதர் வாழ்வதற்கு வீடு, குடும்பம், வேலை போன்றவை தேவையான அம்சங்கள். குடும்பத்துக்கு வெளியே செய்யப்படும் அனைத்து வேலைகளும் உழைப்பாக அங்கீகரிக்கப்படுகின்றன. வீட்டில் செய்யப்படும் வேலை மட்டும் உழைப்பாக அங்கீகரிக்கப்படுவதில்லை. வீட்டு வேலைகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர்; ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • வெளி வேலைகளில் ஈடுபடும்போது வேலைக்கான சம்பளத்தைப் பெற முடியும். ஆனால், குடும்பத்துக்குள் வேலை செய்யும்போது பெண்களுக்குக் கூலி தரப்படுவதில்லை. வீட்டு வேலை பெண்ணின் கடமை, பெண் குடும்பத்துக்கானவள், ஆண் பொருளாதாரத்தை ஈட்டுபவன் என்கிற வகையில் நிலவும் ஆண் - பெண் ஏற்றத்தாழ்வும், பெண்ணின் உழைப்பு மலிவாகக் கருதப்படுவதுமே, வீட்டு வேலை அங்கீகரிக்கப்படாததற்கு முக்கியக் காரணம்.

அடிமைத்தனத்தின் அடையாளம்:

  • கணவன் - மனைவிக்கு இடையில் சண்டை வந்தால், மனைவி சமைப்பதற்கும், துணி துவைப்பதற்கும் சம்பளம் கேட்பதுபோல் காணொளிகளைச் சமூக வலைதளங்களில் பார்க்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால், இப்படியான காணொளிகளையும் வேடிக்கையானவை என்றே பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கடந்துவிடுகின்றனர்.
  • இவ்வாறான காணொளிகள் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டாலும், அவற்றில் சொல்லப்படும் கருத்துகள் பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமானவை. தண்ணீர் எடுத்து வருவது, விறகு சேமிப்பது, சமைப்பது, குழந்தைகளையும் முதியோரையும் பார்த்துக்கொள்வது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருவது என்பது போன்ற வீட்டு வேலைகளுக்கு மனித வளம் அதிகம் தேவைப்படுகிறது. மனித வளம் அதிகம் தேவைப்படும் வேலைக்குக் கூலி கொடுக்காமல் இருப்பது கிட்டத்தட்ட அடிமைத்தனமே.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு நாளைக்குச் சுமார் 16 பில்லியன் மணி நேரம் கூலியற்ற வீட்டு வேலை - பராமரிப்பு வேலைகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். நாளின் 76% நேரத்தைக் கூலியற்ற வேலைகளில் பெண்கள் செலவழிக்கின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் மனம் - உடல்நலன் பாதிக்கப்படுவதோடு, பொது நீரோட்டத்தில் பெண்கள் பயணிப்பதற்கும் தடையாக உள்ளது.

பாலினப் பாகுபாடு:

  • கூலியற்ற வேலைகளில் பெண்கள் ஈடுபடுவதால் பெண்களின் பொருளாதாரமும், குடும்பத்தின் பொருளாதாரமும் சரிவடைகிறது. சுமார் 42% பெண்கள் குடும்பத்திலுள்ள மூத்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர், குழந்தைகள் ஆகியோரைக் கவனித்துக்கொள்வதற்காகச் சம்பளம் பெற வாய்ப்பிருக்கும் வேலைகளை இழக்கின்றனர்.
  • வளர்ந்த நாடுகளைவிட ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பெண்களே அதிக அளவில் சம்பளமற்ற பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகச் சர்வதேசப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளர்ந்த நாடுகள் பாலினச் சமத்துவத்தில் முன்னேறியிருந்தாலும் அங்குள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாலின அசமத்துவம் குறைந்தபாடில்லை.
  • பொருளாதார ஒருங்கிணைப்பு - வளர்ச்சிக்கான அமைப்பின் தகவலின்படி, வளர்ந்த நாடான அமெரிக்காவில் பெண்கள் வீட்டு வேலையில் 4.5 மணி நேரம் செலவிட்டால், ஆண்கள் 2.8 மணி நேரம்தான் செலவிடுகிறார்கள். கிரேக்க நாட்டில் 4.3 மணி நேரம் பெண்களும் 1.5 மணி நேரம் ஆண்களும் கூலியற்ற வீட்டு வேலையில் ஈடுபடுகிறார்கள்.
  • முற்போக்கான நாடாகச் சொல்லப்படும் ஸ்வீடனிலும் ஆண்களைவிட 50 நிமிடங்கள் கூடுதலாகப் பெண்கள் கூலியற்ற வேலையில் ஈடுபடுகிறார்கள். இப்படிக் கூலியற்ற வேலையில் பாலினப் பாகுபாடு பரவலாகக் காணப்படுகிறது. கூலியற்ற வேலை என்றால், வீட்டு வேலை மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது. பொருளாதாரத்தை ஈட்டும் ஆண்கள் செய்யும் வேலைக்குத் தன்னளவிலான உதவிகளையும் பெண்கள் செய்துவருகின்றனர்.
  • மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு ஏற்றவாறு வலை பின்னுதலிலும் பெண்கள் ஈடுபடுகின்றனர். பழங்குடிப் பெண் தோப்புக் காவலுக்குக் கணவருடன் வயலிலேயே தங்குவதும் உண்டு. காவல் இருப்பதற்குக் கணவருக்குக் கூலி தரப்படும். ஆனால், அவருடன் தங்கியிருக்கும் மனைவிக்குக் கூலி வழங்கப்படாது. சில நேரம் தோப்பின் உரிமையாளரின் வீட்டில் அப்பெண்கள் வேலை செய்கிறார்கள். நிலத்தில் செய்யப்படும் வேலைக்குக் கூலி கிடைக்குமே தவிர, வீட்டில் செய்யும் வேலைக்குக் கிடைக்காது.

பேரிடரும் வேலைச் சுமையும்:

  • கரோனா பேரிடர் காலத்தின்போது முன்பைவிட இரண்டு பாலினத்தவர்களுக்கும் கூலியற்ற பணிகள் அதிகரித்தன. பள்ளிகள் மூடப்பட்டன. வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறை, பராமரிப்புப் பணிகள் போன்றவற்றால் வீட்டு வேலையும் அதிகமானது. இருபாலருக்கும் வேலைப்பளு அதிகரித்தாலும், அது பெண்களையே அதிகம் பாதித்தது.
  • அமைப்பு சார்ந்த அல்லது அமைப்புசாரா வேலைகளில் ஈடுபடும் பெண்கள், வீட்டிலும் வேலை செய்து பணியிடத்திலும் வேலை செய்ய நேர்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் இரட்டை உழைப்பைச் செலுத்துவதால், அவர்களுடைய பொதுநலன் - சமூகத்துக்கான அரசியல் பங்களிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. முற்போக்குக் கொள்கை கொண்ட இயக்கங்களிலும் கட்சிகளிலும்கூடப் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்குக் குடும்பப் பொறுப்புகளின் சுமையே காரணமாக இருக்கிறது.
  • வீட்டில் இருக்கும் பெண்கள் சிரித்த முகமாகவே இருப்பதில்லை. எந்நேரமும் களையின்றி இருக்கிறார்கள் என்பது போன்ற ஏச்சுகளைக் கிராமப்புறங்களில் கேட்கலாம். இதற்கெல்லாம் காரணம், கூலியற்ற வேலைச் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதுதான் என்று 2022ஆம் ஆண்டு வெளியான லான்செட் பொதுச் சுகாதார ஆய்வறிக்கை கூறுகிறது. சுமையையும் கொடுத்துவிட்டுச் சிரிக்கவும் கட்டாயப்படுத்தும் சமூகத்தை என்னவென்று சொல்வது?

மாற்றம் தேவை:

  • கூலியற்ற வேலைகளால் பெண்களின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க அரசும் சமூகமும் சில முன்னெடுப்புகளை எடுத்தாக வேண்டும். வெறும் அரை மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்துவிடும் உணவைச் சமைப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை சமையலறையில் செலவிடுகிறார்கள்.
  • இதற்கு மாற்றாக ‘கம்யூனிட்டி கிச்சன்’ எனப்படும் சமூகச் சமையலறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைகள் பிறப்பது வம்ச விருத்தி மட்டுமல்ல. குழந்தை பிறப்பு என்பது சமுதாயத்துக்குத் தேவையான மனித வளத்தைப் பெருகுவதற்கானது, குழந்தைகள் அடுத்த தலைமுறைத் தொழிலாளர்களே.
  • அடுத்த தலைமுறைத் தொழிலாளர்களைப் பெற்றெடுப்பதும் வேலை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆதலால் தாய்மார்களின் ஊட்டச்சத்து, மனவலிமைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். சமுதாயத்தின் மனித வளத்தைப் பாதுகாப்பதற்காகக் குழந்தை வளர்ப்பைச் சமூகமயமாக்க வேண்டும்.
  • அதேபோல் துணி துவைப்பது போன்ற வேலைகளும் சமூகமயமாக்கப்பட வேண்டும். தனிப்பட்ட குடும்பத்தின் வேலை பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் நிகழும்போது பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டியதில்லை.
  • பெண்களின் சக்தி குடும்ப வருமானத்தைப் பெருக்கவும், சமூக மாற்றத்துக்கும் பயன்படும். எல்லா வீட்டு வேலையும் பொதுவாக்கப்படுவதற்குக் காலமெடுக்கலாம். அதுவரை ஆண்களும் குடும்பப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டால் பெண்ணின் உலகம் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் விரிவடைந்து சமூக மாற்றத்தை நிகழ்த்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்