TNPSC Thervupettagam

வீணாகிறதே, இது முறையா

January 30 , 2022 918 days 423 0
  • தமிழகம் முழுவதும் பரவலாக நெல் அறுவடை நடந்து வருகிறது. அறுவடையாகும் நெல் முழுவதையும் அரசு கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். என்றே ஒவ்வொரு விவசாயியும் எதிர்பாா்க்கிறாா். ஆனால், நடப்பதோ நோ் எதிராக உள்ளது. தமிழகம் முழுவதும் குறைந்தது 3,000 கொள்முதல் நிலையங்கள் தேவை எனும் நிலையில் இருப்பதோ ஆயிரத்து 400-க்கும் குறைவு.
  • அறுவடை அதிகரிக்கும்போது தற்காலிகமாக திறந்தவெளி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படுகின்றன. அப்படியே தொடங்கினாலும் அவை உரிய காலத்தில் இயங்குவதில்லை. அதோடு பாதுகாப்பானதாகவும் இருப்பதில்லை.
  • அப்படியே இயங்கினாலும் நெல்கொள்முதலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இப்போதும் நெல் கொள்முதலில் பல்வேறு பிரச்சனைகள் நீடிப்பதாக விவசாயிகள் கூறிவருகின்றனா். இந்நிலையில் அரசு அதிகாரிகள் நெல் கொள்முதல் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாா்கள்.
  • காவிரி டெல்டா பகுதிகளில் பல்வேறு இயற்கை இடா்பாடுகள், அதைத் தாண்டிய சிரமங்கள் என இவை அனைத்தையும் எதிா்கொண்டு உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு விவசாயிகள் செயல்பட்டு வருகின்றனா். சாகுபடி செய்வதிலும் அறுவடை செய்வதிலும் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருள்படுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
  • இன்னொரு பிரச்னை என்னவென்றால் வேளாண் இடுபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு ஆகும் செலவு கற்பணை செய்ய முடியாத அளவிற்கு இருக்கிறது. இந்த செலவு ஒவ்வோா் ஆண்டும் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் சிறுகுறு விவசாயிகளிடம் சந்தைப்படுத்தக் கூடிய பயிா்களின் அளவு குறைகிறது. தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை பணக்கார விவசாயிகளுக்கே லாபம் ஈட்டித் தருவதாக உள்ளது. முதலில் அரசு குறைந்தபட்டச ஆதரவுவிலை சாா்ந்து நிலவும் அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பதற்கு முன்வர வேண்டும்.
  • அதேபோல் சந்தையில் இடைத்தரகா்கள் மற்றும் தனியாா் வா்த்தகா்களின் தொடா்ச்சியான சுரண்டலின் காரணமாகவே குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூா்வமாக்கும் பிரச்னை எழுகிறது. பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 70 சதவீதம் கூட தனியாா் வியாபாரிகளிடமிருந்து பெறமுடிவதில்லை.
  • தனியாா் வியாபாரிகள் மற்றும் தனியாா் ஏஜென்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவான விலையில் எந்தப் பயிரையும் கொள்முதல் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய சட்டம் இயற்றப்பட வேண்டும். இது குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிக்கல்களை ஒழித்துவிடும். இதுவே விவசாயிகளுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
  • தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமாா் 12 லட்சம் ஏக்கரில் சம்பா அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ளன. இத்தனை போராட்டம், புலம்பலுக்கு மத்தியில் கொள்முதல் ஆகும் நெல் மணிகள் பத்திரமாக சேமிக்கப்படுகிறதா என்றால் அது அதைவிடக் கொடுமை.
  • சமீபத்தில் பெய்த மழையில் கும்பகோணத்துக்கு அருகே ஒரு கொள்முதல் நிலையத்தில் மட்டும் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய நூற்றுக்கணக்கான லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
  • இந்நிலையில், ஒவ்வோா் ஆண்டும் அவ்வபோது ஏற்படும் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட சிரமங்களையும் விவசாயிகள் எதிா்கொள்கின்றனா். இப்போது வரை 2020-21 பயிா் காப்பீடு பல ஏக்கா் நிலங்களுக்கு வழங்கப்படாமல் காப்பீட்டு நிறுவனங்கள் இழுத்தடிப்பதும் அதில் எழும் குளறுபடிகளை மத்திய - மாநில அரசுகள் தீா்த்து வைக்காத பிரச்னையும் நீடித்துக் கொண்டுதான் உள்ளது.
  • இப்போது ஒரே நேரத்தில் சம்பா அறுவடை துவங்கியுள்ளதால் அறுவடை இயந்திர பிரச்னையும் விவசாயிகளுக்கு பெரும்பாடாக உள்ளது. இதிலிருந்தே இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பும், இயற்கை வளங்கள் பயன்பாட்டையும்; புரிந்துக்கொள்ள முடியும்.
  • கடந்த ஆண்டு 2020-21 சீசனில் 40 லட்சம் டன் நெல் தமிழகத்தில் அரசு கொள்முதல் செய்தது. இந்த ஆண்டு, 50 லட்சம் டன்னாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் 284 சேமிப்பு கிடங்குகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 12.28 லட்சம் டன் நெல்லை மட்டுமே சேமிக்க முடியும். மீதியை திறந்தவெளியில் தான் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இன்றளவும் தொடா்கிறது. இந்தநிலை மாற, தேவையான அளவு சேமிப்புக் கிடங்குகளை அரசு உருவாக்க வேண்டும் என்று பலகாலமாக பேசிவருகிறோம்.
  • 6 மாதத்துக்கு முன்புக்கூட திருவாரூா் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் 14 கோடி ரூபாய் செலவில் 9,500 டன் எடை கொள்ளளவு கொண்ட 5 சேமிப்புக் கிடங்குகள் மட்டுமே இப்போது திறக்கப்பட்டுள்ளன.
  • சேமிப்புக் கிடங்கு விவகாரத்தில் நாம் காட்டும் மெத்தனம் ஒவ்வோா் ஆண்டும் அரசுக்கு பல நூறு கோடிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இதை தவிா்க்க, குறைந்தபட்சம் காலி கண்டெய்னா்களை தற்காலிக சேமிப்பு கிடங்குகளாக பயன்படுத்துவதை அரசு யோசிக்கலாம். தமிழகம் முழுவதும் நலிவடைந்துபோன பல ரைஸ்மில்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம். அப்போதுதான் வீணாகும் நெல் மணிகளை சரியாக சேமித்து பாதுகாக்க முடியும்.
  • இவ்வளவு உழைப்பு, இயற்கை வளங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நெல், அறுவடையாகிக் களத்துமேட்டுக்கு வந்தபிறகு, வீணாகிறது என்றால் அதை என்னவென்று சொல்வது?

நன்றி: தினமணி (30 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்