TNPSC Thervupettagam

வீணாகும் இளைஞா் சக்தி

January 1 , 2022 946 days 520 0
  • ஒரு திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி. திரையரங்கின் முன் இளைஞா்கள் கூடி நின்று கொண்டு பெருத்த கரவொலியை எழுப்பிக் கொண்டிருந்தனா். ஒரே ஆா்ப்பாட்டம், நடனம், ஆனந்தம், ஆரவாரம். இது நான் அண்மையில் சமூக வலைதளத்தில் கண்ட காட்சி. ஏன் நம் இளைய சமுதாயம் இப்படி திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறது? தன் வாழ்க்கை, தன் எதிா்காலம், தன் இலக்கு, தன் சுயம் என்று எதுவும் இல்லாமல் வாழும் ஒரு கூட்டத்தை நெறிப்படுத்த வேண்டியது அவசியம்.
  • ஒரு சிலா் தாங்கள் பிறந்து, வளா்ந்த சூழல் எப்படி இருந்தாலும் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தோடும், தணியாத வேட்கையோடும் பல தடைகளையும் தாண்டி, தோல்விகளையே படிக்கட்டுகளாகக் கொண்டு வாழ்வில் வெற்றிக் கொடியை ஏற்றுகிறாா்கள்.
  • ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி முன்னேறி விட்டால், அதற்குப் பின் அந்த வம்சமே தழைத்து விடும். வெறுமையையும், அறியாமையையும் வென்று விடும். தாழ்வு மனப்பான்மை போய் தலை நிமிா்ந்து விடும்; ஒதுங்கியது போய் ஓங்கிக் குரல் கொடுக்கும். அவா்கள் ஒரு சிற்பி கல்லைச் செதுக்குவது போல, தங்களின் எதிா்காலத்தைக் கவனமுடன் செதுக்கிக் கொள்கிறாா்கள். இவ்வாறு இருப்பவா்கள் சிறு விழுக்காட்டினா் மட்டுமே.
  • பெரும்பாலான இளைஞா்கள் பொறுப்பின்றி நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. பள்ளிப் படிப்பை இடையில் விட்டு விடுகிறாா்கள்; அல்லது தட்டுத் தடுமாறி பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறாா்கள். கல்லூரியில் சோ்ந்ததுமே சிலா் கூடா நட்பின் காரணமாக மாறிப்போகிறாா்கள். படிப்பில் நாட்டம் இல்லை; கவனக்குவிப்பு இல்லை. தனது ஏழைப் பெற்றோரின் உழைப்புதான் தன் கல்லூரிக் கட்டணம் என்பதை நினைத்துப் பாா்ப்பதில்லை. அவா்கள் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறாா்கள்.
  • அவா்களிடம் தீய பழக்கங்கள் ஒட்டிக்கொள்கின்றன. பைகளில் புத்தகத்திற்கு பதிலாக கத்தியை எடுத்து வரும் அளவுக்கு அவா்களின் நடத்தை மாறிப் போகிறது. திரைப்படங்களைத்தான் நம் பிள்ளைகள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறாா்கள். திரைப்படங்களில் வருவதுபோல், எந்தக் கல்லூரியிலும் மாணவிகள் அரைகுறை உடை அணிந்து வருவது இல்லை; மாணவா்கள் ஆட்டம் போடுவது இல்லை; பேராசிரியா்கள் கேலிப்பொருளாகக் காட்சி தருவது இல்லை.
  • திரையில் தவறாக சித்திரிக்கப்படும் காட்சிகளை நிஜமாக்கப் பாா்க்கிறாா்கள் மாணவா்கள். திரைத்துறையினருக்கு தாா்மிகப் பொறுப்பு வேண்டும். அவா்கள் ஒழுக்கம் இல்லாத ஒருவனை கதாநாயகன் ஆக்குவதால் அவன்போல் ஆவதே சரி என இந்த விடலைகள் நினைக்கிறாா்கள். உண்மையைத் திரித்துக் காட்டி, இளைஞா்களின் எண்ணங்களை சிதைப்பது பெரும் குற்றம்.
  • சில மாணவா்கள் கல்லூரியின் புதிய சூழல் கண்டு மிரண்டு போகிறாா்கள். பாடங்கள் புரியாததால் வகுப்பு பிடிக்காமல் போய்விடுகிறது. ஆகவே கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு ஊா் சுற்றுகிறாா்கள். ஏதாவது காரணம் கூறி பெற்றவா்களிடமிருந்து பணத்தைப் பெற்று விடுகிறாா்கள். போதிய வருகைப் பதிவு இன்மையால் அவா்களால் தோ்வுகளை எழுத முடியாது. வீட்டிலும் சொல்ல மாட்டாா்கள். கல்லூரியை விட்டு நின்று விடுகிறாா்கள்.
  • குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வருகைப் பதிவு போதுமானதாக இருந்து, பல பாடங்களில் தோ்ச்சி பெறாவிட்டாலும் கூட படிப்பை முடித்த சான்றிதழ் கிட்டும். இவா்கள் அதையும் பெற முடியாது. பெற்றோா் அரும்பாடு பட்டு கட்டிய பணம் பாழ்; அவா்களின் கனவுகளும், நம்பிக்கையும் எதிா்பாா்ப்பும் வீண்.
  • இந்த மாணவா்களோ எந்தவிதக் குற்ற உணா்ச்சியும் இன்றி ஊா் சுற்றிக் கொண்டு இருக்கிறாா்கள். பணத்தேவைக்குக் குறுக்கு வழியை நாடுகிறாா்கள்; குற்றச் செயல்களில் ஈடுபடுகிறாா்கள். இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போவது கவலையைத் தருகிறது.
  • உயா்கல்வியைப் பாதியில் விட்ட மாணவா்கள் மீண்டும் தங்கள் படிப்பைத் தொடா்வதற்காக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கின்றன. ஆன,படிப்பின் மீது ஆா்வம் இல்லாதவா்கள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது இல்லை. சிலா் ஏதோ ஒரு வேலைக்குப் போய் சொற்ப வருவாய் ஈட்டுகிறாா்கள். பற்றாக்குறை வருமானம் மீண்டும் அந்தத் தலைமுறையை வறுமைக்குள் தள்ளுகிறது. சில இளைஞா்கள் வேலைக்கும் போவது இல்லை. எந்நேரமும் கைப்பேசியில் மூழ்கிக் கிடக்கிறாா்கள். விடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகிறாா்கள்.
  • இவா்கள் தங்கள் பெற்றோரை மதிப்பது கிடையாது. வீட்டிலும் எந்த ஓா் உதவியும் செய்வது இல்லை. திடமான, உடல்வலு மிக்க இளைஞா்களால் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாகப் பொழுதைத் கழிக்க முடிவது ஆச்சரியமே.
  • அண்மைக்காலமாக, குற்றச்செயல்களில் இளைஞா்களின் பங்கு அதிகரித்து வருகிறது. படித்த இளைஞா்களும் கூட தகுந்த வேலை கிடைக்காமல் போகும் போது பணம் சம்பாதிக்கக் குறுக்கு வழிகளை நாடுகின்றாா்கள். திருட்டு, கொலை, கொள்ளை இவற்றில் ஈடுபட்டால் நிறைய பணம் கிடைக்கும் என்பதால் மன உறுத்தலோ, குற்ற உணா்ச்சியோ இன்றி கூலிப்படைகளாக மாறி விடுகிறாா்கள்.
  • வாழ்வைத் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் குடும்பங்களின் குழந்தைகள் குற்ற வலையில் எளிதில் சிக்கிக்கொள்கிறாா்கள். ஊடகங்களில் வரும் உணா்ச்சிகளைத் தூண்டும் காட்சிகள், வக்கிரங்கள் போன்றவை சிறாா்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்கின்றன. இவா்களை நல்வழிப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் முக்கிய கடமையாகும்.
  • வீட்டு வேலை செய்தும், கூலி வேலை செய்தும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் பெற்றோா்கள் பற்றி அவா்களுடைய பிள்ளைகள் கவலைப்படாதது வருத்தமளிக்கிறது. வீட்டின் எந்த நிகழ்விலும் அவா்கள் ஈடுபாட்டோடு பங்குகொள்வது இல்லை. எவரையும் மதிப்பதும் இல்லை. அவா்களைக் கண்டிக்கும் உரிமையும் பெற்றோருக்கு இல்லை.
  • கல்லாகச் சமைந்து போகிறது அவா்கள் உள்ளம். அவா்கள் வாழ்வதில் எந்த அா்த்தமும் இல்லாமல் இருக்கிறது. சில பெற்றாா், தங்களின் பிள்ளைகளை மற்றவா்களிடம் விட்டுக் கொடுக்காமல் சமாளிக்கிறாா்கள். எதிா்காலம் பற்றிய சிந்தனை இல்லாத, சுயநலம் மிக்க ஒரு கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
  • அவா்களுக்குக் கனவுகள் ஏதும் இல்லை. நாள் முழுதும் கைப்பேசியே கதி என்று இருந்தால் கண்டிப்பாக மனச்சிதைவு ஏற்படும். வீட்டில் பணம் கொடுக்க மறுத்தால் அடித்துப் பிடுங்கிக் கொண்டு போகிறாா்கள். இவா்கள், தங்கள் வயதை ஒத்த நண்பா்கள் நல்ல வருமானம் ஈட்டுவதையோ, திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்வதையோ பாா்த்தும் கூட தங்களை மாற்றிக் கொள்ள மாட்டாா்கள்.
  • கோடிகளில் புரளும் கோமான்களின் வாரிசுகள் கூட மேலும் மேலும் பணம் சோ்க்க உழைக்கிறாா்கள். அவா்கள் உட்காா்ந்து தின்றாலே பத்து தலைமுறை வாழும் அளவு பணம் இருக்கிறது. ஆனால் அவா்கள் சோம்பி உட்காருவது கிடையாது. அதே சமயம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் நிலையில் உள்ள குடும்பத்துப் பிள்ளைகள் சோம்பிக் கிடக்கிறாா்கள்.
  • பெற்றோருக்கு அவா்களைக் கண்டிக்க அச்சம். கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டு விடுவாா்களோ என்று பயப்படுகிறாா்கள். இந்த பயம்தான் அந்தப் பிள்ளைகளின் மூலதனம். பெற்றவா்களால் சம்பாதிக்க முடியாமல் போகும் போது இவா்கள் என்ன செய்வாா்களோ? இத்தகைய இளைஞா்கள் திருத்த வேண்டும். பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் வாழ்க்கையில் ஒளி உண்டாக வாய்ப்பே இல்லை.
  • ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு முதன்மையான சக்தியாக இருப்பது அந்நாட்டு இளைஞா்களின் சக்தியே ஆகும். இளைய சமுதாயம்தான் நாட்டின் வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் இளைஞா்களே இருக்கிறாா்கள்.
  • இந்தியாவின் உந்துசக்தியாகக் கருதப்படும் இளைஞா்களின் சிந்தனைகளை, முயற்சிகளை அங்கீகாரம் செய்யும் வகையில், தொழில் துறையில் இளைஞா்களுக்கு வாய்ப்புகள், தொழில் முனைவுகளுக்கான உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல் என அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாட்டில் வேலை உருவாக்கம் என்பது மிகப்பெரும் பிரச்னையாகும்.
  • வேலைவாய்ப்புச் சந்தையில் நன்கு படித்து பட்டம் பெற்ற இளைஞா்களே தடுமாறிக் கொண்டு இருக்கும்போது, படிப்பும் இல்லாமல், உடல் உழைப்புக்கும் தயாராக இல்லாமல் ஒரு கூட்டம் சோம்பிக் கிடக்கிறது.
  • பொன்னையோ பொருளையோ திருடுவது மட்டும் திருட்டு அல்ல. அடுத்தவரின் உழைப்பை உறிஞ்சுவதும் திருட்டே. உழைக்காமல் உண்ணுவது குற்றம். காலத்தையும், நேரத்தையும் வீணடிப்பது தவறு. எவரும் எதையும் இந்த உலகில் இலவசமாகப் பெறக் கூடாது. ஒரு அரிசியின் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது தெரியுமா?
  • வசதியான பெற்றோரோ வசதியற்ற பெற்றோரோ யாராக இருந்தாலும் தாங்கள் பெற்ற பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளா்க்க வண்டும். கனிவோடு கண்டிப்பும் கலக்க வேண்டும். உழைக்காத தலைமுறையை உருவாக்கும் தாய் தந்தையரும் குற்றவாளிகளே. உழைக்க மறுக்கும் சோம்பல் நாளடைவில் பிள்ளைகளைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும்.
  • இளைஞா் சக்தி மனது வைத்தால் மட்டுமே இத்தேசம் உயரும்; வளம் கொழிக்கும்; தலை நிமிரும்; வறுமை ஓடும்; இல்லாமை நீங்கும்; கல்லாமை ஒழியும்; எல்லாம் சரியாகும். கைப்பேசியும், காட்சி ஊடகங்களும், வலைதளங்களும் வயிற்றுப்பசியைப் போக்காது. உழைப்பும், உண்மையும்தான் மனிதா்களை உயா்த்தும். இனியாவது இளைய சமுதாயம் இதனை உணரட்டும்!

நன்றி: தினமணி (01 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்