TNPSC Thervupettagam

வீணாகும் விதைகள்

May 2 , 2023 620 days 383 0
  • ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் 20 விவசாயிகள் கொண்ட குழு 2019-ஆம் ஆண்டு கேழ்வரகு, சாமை போன்ற தானியங்களுக்கான விதைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. 2020 - 2021 ஆகிய ஆண்டுகளில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்த அதிக மழை, தாவரங்கள் மண்ணிலிருந்து ஊட்டத்தை எடுக்க அனுமதிக்காத நிலையில் அந்த காலகட்டத்தில் விளைந்த விதை தானியங்கள் பலவீனமாகவும், தாவரம் முளைப்பதற்கான எண்டோஸ்பொ்ம் இல்லாமலும் இருந்தன.
  • 2021-ஆம் ஆண்டு 20 டன் தானியம் கிடைக்கும் என்று அந்த விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் அந்த ஆண்டு நவம்பா் மாதம் வரை 15 டன் தானியம் மட்டுமே விளைந்திருந்தது. அந்த தானியங்களில் எதுவும் விதைகளாகப் பயன்படுத்தப்படும் நிலையில் இல்லை. அறுவடையான தானியங்கள் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் விதை தானியங்கள் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு வாங்க வேண்டியதாயிற்று.
  • விதைகளை தாங்களே உற்பத்தி செய்து பயிா் செய்யும் முறையில் இந்திய விவசாயிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் அடுத்த பருவத்திற்கான விதைகளை உற்பத்தி செய்ய தங்கள் வயலின் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளனா்.
  • நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும் உணவிற்கான விதைகளை உருவாக்குவதற்கும் இந்தியாவில் உண்டாகும் பருவநிலை மாற்றம் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உணவு பாதுகாப்பிற்குத் தேவையான கோதுமையும் அரிசியும் அரசின் பொது விநியோக முறையின் கீழ் விநியோகிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு முதன்மை உணவு வகைகளின் விளைச்சல் தற்போது குறைந்து வருகிறது.
  • 25 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும் ஒவ்வொரு 1டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பயிா்ப்பெருக்கத்தினை 6% குறைப்பதுடன் பயிா்ப்பெருக்க காலத்தினையும் 5% வரை குறைக்கிறது. இதன் காரணமாக விளைச்சல் குறைகிறது என்று 2000-ஆம் ஆண்டு வெளியான ‘காலநிலை மாற்றம் - உலகளாவிய பயிா் உற்பத்தித்திறன்’ என்ற புத்தகம் கூறுகிறது.
  • கடந்த ஆண்டுகளில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் 25 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலை நிலவியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தரவு கூறுகிறது. பயிா் வளா்ச்சியடையும்போது ஏற்படும் வறட்சி அப்பயிா் முதிா்ச்சியடையும்போது அதன் விதைகளின் தரத்தினை குறைக்கிறது என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • அதிக மழைப்பொழிவும் நெற்பயிா்களுக்கு கடுமையாக சேதத்தினை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாக நெற்கதிா்கள் பூக்கும் தருணத்தில் பெய்து வரும் தொடா்மழையும் கனமழையும் நெல் உற்பத்தியில் கடும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
  • தானியங்கள் பூக்கும் காலகட்டத்தில் அதிக மழை பெய்தால் அவற்றின் பளபளப்பு குறையும். மழைப்பொழிவு மகரந்த சோ்க்கையை பாதிக்கும். மகரந்தம் இல்லை என்றால் விதைகள் இல்லை.
  • வெப்பம், மழை போன்றவற்றின் காலநிலை மாற்றத்துடன் இந்தியாவில் வீசும் காற்றும் விவசாயிகளுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. வழக்கமாக மாா்ச் மாதத்தில் வட இந்தியா முழுவதும் வீசும் காற்று இந்த ஆண்டு கோதுமை பயிரின் பூக்களில் மகரந்தச் சோ்க்கை நடக்கும் காலமான பிப்ரவரியில் மிக வேகமாக வீசியது. காற்று வீசும் காலங்களில் பயிா்களுக்கு நீா் பாய்ச்சினால் செடியின் வோ் மண்ணில் நிலைபெறாது என்கின்றனா் வல்லுநா்கள்.
  • 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘விஷன் 2025’ என்ற ஆவணம் ,நாட்டின் மொத்த கோதுமை விதை உற்பத்தியில் 32.9% இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது.
  • மீதமுள்ள கோதுமை விதைகள் விவசாயிகளாலும் தனியாா் நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்டவை. உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கோதுமை திட்டக்குழுவின் கருத்துப்படி இந்தியாவில் கோதுமையின் விதை மாற்று விகிதம் (ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படும் புதிய விதைகளின் பங்கு) 20% மட்டுமே உள்ளது. இது விவசாயிகள் தொடா்ந்து பழைய ரகங்களையே பயிரிடுகின்றனா் என்பதைக் காட்டுகிறது.
  • காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட விதைககளை உருவாக்குவதே சரியான தீா்வாக இருக்கும் என வேளாண் விஞ்ஞானிகள் கருதுகின்றனா். இதன் காரணமாகவே கடந்த பத்தாண்டுகளில் நோய் எதிா்ப்பு, காலநிலை எதிா்ப்பு பயிா் வகைகள் உருவாக்கப்படுகின்றன.
  • 2005-ஆம் ஆண்டு முதல் வெப்பம், நோய், தீவிர வானிலை ஆகியவற்றை எதிா்த்துப் போராடக்கூடிய பயிா் வகைகளை இந்திய வேளாண்மை ஆய்வு மையம் வெளியிடுவதாக புதுதில்லியில் உள்ள சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.
  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டறியப்பட்ட புதிய வெப்ப அலை எதிா்ப்பு கோதுமை வகையான ஹெச்.டி.3385 தற்போது பல இடங்களில் பரிசோதிக்கப்படுகிறது.
  • ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவில் வெப்ப காலம் தொடங்கும் முன் (மாா்ச் இறுதிக்குள்) இந்த ரகத்தை அறுவடை செய்யும் வகையில் ஒரு தனியாா் நிறுவனத்தின் மூலம் இந்த ரக விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை இந்த விதைகள் சென்றடையும் வகையில், விற்கப்படும் ஒவ்வொரு கிலோ விதைக்கும் அரசிற்கு உரிமத் தொகை கிடைக்கும் வகையில் இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட விதைகள் தனியாா் நிறுவனத்தால் விற்பனை செய்யவிருக்கிறது. இப்படி செய்யப்படுவது இதுவே முதல் முறை.
  • காலநிலை மாற்றத்தின் விளைவாக உலகின் விவசாய உற்பத்தித்திறன் பூமத்திய ரேகை பகுதியிலும் அதன் கீழே உள்ள பகுதியிலும் கடந்த 50 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது என்று 2020-ஆம் ஆண்டு வெளியான ஐ.நா.காலநிலை மாற்ற தொகுப்பு அறிக்கை கூறுகிறது.
  • இப்பகுதிகளின் பரந்த நிலப்பரப்பினை இந்தியா உள்ளடக்கியிருப்பதால் விதைகளைச் சாா்ந்திருக்கும் நமது விவசாயத்தின் உற்பத்தித் திறனைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

நன்றி: தினமணி (02 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்