TNPSC Thervupettagam

வீறுநடை போடும் மகளிர் சுதந்திரம்

March 8 , 2023 514 days 314 0
  • கடந்த ஆண்டு, அரசியலமைப்பு தினத்தை ஒட்டி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விழாவில் இறுதிப் பேருரை ஆற்றியபோது, அனைவருக்கும் நீதி கிடைப்பதன் அவசியம் குறித்துப் பேசினேன். அப்போது, சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின் உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டேன். எனது இதயத்திலிருந்து பேசிய அந்தப் பேச்சுக்கு ஓரளவு தாக்கமும் இருந்தது. இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, அதேபோன்ற உணர்வுடன், எனது இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
  • எனது மழலைப் பருவத்திலிருந்தே, சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை குறித்து குழப்பங்களை அடைந்து வந்தேன். ஒருபுறம், பெண் குழந்தைகள் குடும்பத்தில் மிகவும் செல்லமாகவும் பாசமாகவும் நடத்தப்படுகிறார்கள்; விழாக் காலங்களில் பெண் குழந்தைகளை வழிபடுவதையும் காண முடியும். அதேசமயம் மறுபுறத்தில், சம வயதுடைய ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் பெண் குழந்தைகள் மிக விரைவில் புரிந்துகொள்கின்றனர்.
  • பெண்களின் உள்ளார்ந்த அறிவுக்காக ஒருபுறம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்; குடும்பத்தின் அச்சாணியாகவும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது நலம் பேணுபவளாகவும் பெண் மதிக்கப்படுகிறாள். அதேசமயம், குடும்ப அளவிலோ, ஏன், தன்னளவிலோ கூட அவளால் சுயமான முடிவை எடுத்துவிட முடியாது.
  • எனது கடந்த வாழ்வில், முதலில் மாணவியாக வீட்டைவிட்டு வெளிவந்தேன். பிறகு ஆசிரியரானேன். அதையடுத்து சமூகசேவகியாகப் பணிபுரிந்தேன். அந்த இடங்களிலெல்லாம், இந்த முரண்பாடுகளைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அவற்றை நான் ஒருபோதும் ஏற்றதில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்று தனிப்பட்ட வகையில் கூறுவதைக் கண்டிருக்கிறேன். அதேசமயம், அவர்களே ஒரு முடிவு என்று வரும்போது, சமூகத்தில் பாதியான பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதையும் காண்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்விலேயே, பெண்ணுரிமைக்காகவும், பாலின சமத்துவத்துக்காகவும் குரல் கொடுத்த தனிநபர்கள் பலரைச் சந்தித்திருகிறேன். ஆனால், சமூக அளவில் வரும்போது, பழைய பாரம்பரிய நம்பிக்கைகளும் அவர்கள் சுமக்கும் பழைய பழக்கங்களும் அவர்களை முற்போக்காக இயங்க விடுவதில்லை.
  • இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ள பெண்களின் கதைதான். உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இதுபோன்ற தடைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பலவிதங்களில் சாதனைச் சிகரங்களை எட்டி உள்ளது. ஆயினும், இன்னமும் பல நாடுகள் அரசின் தலைமைப் பீடத்தில் மகளிர் பொறுப்பேற்பதை அனுமதிப்பதில்லை. இதன் துரதிருஷ்டவசமான மற்றொரு காட்சி என்னவென்றால், உலகின் பல நாடுகளில் பெண்கள் சக மனுஷியாகக் கூட மதிக்கப்படாத நிலை நிலவுகிறது; இன்னும் சில நாடுகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதே, வாழ்வா சாவா போராட்டம் போல மாறி இருக்கிறது.
  • ஆனால் எல்லா இடங்களிலும் இதே நிலை நீடிக்காது. இந்தியாவில் பெண்களே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்த காலம் உண்டு. நமது தொன்மையான நூல்களும் வரலாறும், துணிச்சல் மிகுந்த, பேரறிவு படைத்த, நிர்வாகத் திறன் கொண்ட பெண்களைக் குறித்துப் பேசுகின்றன. இன்று, எண்ணற்ற மகளிர் தத்தமது துறைகளில் தங்கள் சிறந்த பங்களிப்பால் தேச வளர்ச்சிக்குக் காரணமாகி வருகிறார்கள். அவர்கள் பெருநிறுவனங்களின் தலைமைப் பதவியை அலங்கரிக்கிறார்கள்; அதேபோல, பாதுகாப்புப் படைகளிலும் பணியாற்றுகிறார்கள்.
  • தற்போதுள்ள கவனிக்க வேண்டிய சிக்கல் ஒன்று மட்டுமே. மகளிர் தங்கள் திறனை ஒரே சமயத்தில் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் நிரூபித்தாக வேண்டி இருப்பதுதான் அந்தச் சிக்கல். இதற்காக அவர்கள் யாரும் சமுதாயத்தைக் குறை கூறுவதில்லை. அதேசமயம், தங்கள் மீதான நம்பிக்கையை சமுதாயம் தக்கபடி வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  • இதுவே தற்போதைய ஆர்வம் மிகுந்த சூழலுக்குக் காரணமாகிறது. நாட்டின் கொள்கையை வடிவமைக்கும் பல்வேறு அமைப்புகளின் அடித்தளத்தில் ஆரோக்கியமான மகளிர் பிரதிநிதித்துவத்தை நாம் கொண்டிருக்கிறோம். ஆயினும் உயர்நிலை அளவில் காணும்போது, மகளிர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக, மிகக் குறைவாக இருப்பதையும் காண்கிறோம். அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், நீதித் துறை,, பெருநிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் இதுவே உண்மை நிலவரம்.
  • கல்வியறிவில் மேம்பட்ட மாநிலங்களிலும் கூட இதே நிலை காணப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அதாவது கல்வி மட்டுமே மகளிரின் நிதி சுதந்திரத்தையோ, அரசியல் தன்னாட்சியையையோ அளித்து விடாது என்பதையே இது வெளிக்காட்டுகிறது.
  • எனவே, சமூக மனமாற்றமே அவசியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமுதாயத்தில் புரையோடி இருக்கும் பாலின சமத்துவத்துகு எதிரான ஆதிக்க மனப்போக்குகள் கண்டறியப்பட்டு துடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வளமான, அமைதியான சமுதாயத்தை அமைக்க முடியும். இதுவரை சமூக நீதிகாகவும் சமத்துவத்துக்காகவும் மனப்பூர்வமான முயற்சிகள் செய்யப்படாமல் இல்லை. ஆனால், பாலின சமத்துவத்துக்கு எடுக்கப்பட்ட போதிய முயற்சிகளை நிரூபிப்பதாக அவை இல்லை. உதாரணமாக, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூகத்தின் சரிபாதியான மகளிருக்கு உரிய பிரதிநித்துவம் இல்லை. அவர்கள் ஆண்களை விட பின்தங்கியே உள்ளனர். இதற்கு பிற காரணங்களை விட சமுதாயத் தாக்கமே பெரும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
  • நாடு முழுவதும் பல பட்டமளிப்பு விழாக்களில் நான் கலந்து கொள்கிறேன். அங்கு நான் கவனித்த வரை, பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமானால் ஆண்களை விடச் சிறப்பாக கல்வியில் சாதனை படைக்கிறார்கள். இதுவே இந்திய சமுதாயத்தில் பெண்களின் வெல்ல முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம். இதனால்தான், பாலின சமத்துவத்துக்கான உலக அளவிலான தொடர் ஓட்டத்தில் முன்கள ஜோதியை ஏந்திச் செல்லும் தகுதியுள்ள நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்ற நம்பிக்கை என்னிடம் எழுந்துள்ளது.
  • சமுதாயத்தின் சரிபாதியான பெண்களைப் பின்னுக்குத் தள்ளுவதன் மூலமாக மற்றொரு சரிபாதியான ஆண்கள் முன்னேறிவிட முடியாது என்பது உறுதி. மாட்டுவண்டியில் இரு சக்கரங்களும் இணையாக இருக்க வேண்டும். ஒரு சக்கரம் பெரிதாகவும் இன்னொரு சக்கரம் சிறிதாகவும் இருந்தால் வண்டி ஓடாது. அதுபோல ஆண்கள் - பெண்களிடையிலான சமத்துவமின்மை, மனிதத் தன்மையையே காயப்படுத்தி வருகிறது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சுற்றுச்சூழல் செயல்பாடுகளிலும் கூட முடிவுகளைத் தீர்மானிப்பதில் மகளிரின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். உலகில் மனிதத்தன்மையை மேம்படுத்துவதில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டால், உலகம் பெருமளவில் பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
  • உண்மையில் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எனது வாழ்விலேயே, மக்களிடத்திலும் அவர்களின் நடத்தையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்திருக்கிறேன். உண்மையில் இதுவே மனிதகுல வரலாற்றின் கதை. இவ்வாறு இல்லையெனில் நாம் இன்னமும் மலைக் குகைகளில் தான் வாழ்ந்திருக்க வேண்டும்.
  • மகளிர் சுதந்திரம் மெதுவாக நடக்கத் தொடங்கிவிட்டது. அது அவ்வப்போது வலி மிகுந்த நிகழ்வுகளையும் சந்திக்கிறது. ஆயினும் அது தனது வீறுநடையைத் தொடர்கிறது. மகளிர் சுதந்திரத்துக்கான முயற்சிகள் இனி தலைகீழ் திசையில் பின்னோக்கித் திரும்ப வாய்ப்பில்லை. இதுவே எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியது போல, இந்திய சுதந்திரத்தின் அமுதகாலக் கொண்டாட்டம் தொடங்கி நூற்றாண்டு வரையிலான காலகட்டம் இளம்பெண்களுக்கானது.
  • ஒரு தேசமாக, பாலின சமத்துவத்துக்கான வலிமையான அடித்தளத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்பதே எனது இந்த நம்பிக்கைக்குக் காரணம். நூறாண்டுகளுக்கு முன்னர், மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று வீட்டு வாயிற்படியைத் தாண்டி சுதந்திரப் போரில் இந்தியப் பெண்கள் குதித்தனர். அதுவே அவர்களின் வெளியுலகப் பிரவேசத்தைத் தூண்டியது. அன்றுமுதல் நமது சமுதாயம், குறிப்பாக மகளிர் சிறந்த எதிர்காலத்துக்கான கனவுகளைக் கண்டு வந்திருக்கிறார்கள்.
  • பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முன்முடிவுகளும், பழக்க வழக்கங்களும் சட்டத்தின் மூலமாகவோ, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவோ நீக்கப்பட வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் ஆக்கபூர்வமான தாக்கத்தை நாம் உணர வேண்டும். உலகிலேயெ மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசுத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டதை, மகளிர் அதிகாரம் பெற்றதற்கான பொருத்தமான சான்று என்று நான் சொல்லத் தேவையில்லை.
  • தாய்மையில் காணப்படும் இயல்பான தலைமைப்பண்பை வலியுறுத்துவதன் வாயிலாக பாலின சமத்துவத்தை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். "பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' என்பது போன்ற அரசின் திட்டங்கள் மகளிர் மேம்பாட்டை நோக்கிப் பயணிக்கின்றன. இவை சரியான திசையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளே.
  • முற்போக்கு எண்ணங்களுக்குச் செவிமடுத்து அவற்றை ஏற்க நமது சமுதாயங்கள் சிறிது காலமாகும் என்று கூறுவதை நாம் ஏற்றாக வேண்டும். அதேசமயம், இந்த சமுதாயத்தின் சரிபாதி மகளிர்தான். எனவே, இந்த செயல்பாட்டை நம்மில் சரிபாதியான அவர்களே வேகப்படுத்த வேண்டும்.
  • எனவே, இந்நாளில், நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் குடும்பத்திலும், அண்டைவீடுகளிலும், பணியிடத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும். அந்த மாற்றமே பெண் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்; அந்த மாற்றமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அவளது வாய்ப்புகளை அதிகரிக்கும். இதுவே எனது இதயத்தில் ஆழத்திலிருந்து நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.

நன்றி: தினமணி (08 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்