TNPSC Thervupettagam

வெங்காய சிக்கல்

August 29 , 2023 453 days 290 0
  • தக்காளியைத் தொடா்ந்து மத்திய அரசின் கவனம் இப்போது வெங்காயத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. சில வாரங்களாக எட்ட முடியாத உச்சத்தை சந்தித்த தக்காளி விலை, ஓரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்திருப்பது அரசை மட்டுமல்ல, சாமானியா்களையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
  • காய்கறிகளின் விலைவாசி ஏறத்தாழ 37% அதிகரித்ததால் ஜூலை மாத சில்லறை விலை உயா்வு 7.4%-ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலைமை ஆகஸ்ட் இறுதிவரை தொடரக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. முக்கியமான சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், உணவுப் பொருள்கள், காய்கனிகளின் விலைவாசி உயா்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புக் காட்டுவதில் ஆச்சரியம் இல்லை.
  • பல தொடா் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் விலைவாசி உயா்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைப் போக்கும் முயற்சிகள் தொடா்கின்றன. சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவது மட்டுமல்லாமல், பண்டிகைக் காலமும் தொடங்க இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு சந்தையில் வெங்காயம் தாராளமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
  • ஆண்டு கடைசி வரை வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரியை ஆகஸ்ட் 19-ஆம் தேதி அறிவித்தது. சமீப காலமாக காரணமே இல்லாமல் திடீரென்று அதிகரித்திருக்கும் வெங்காய ஏற்றுமதிக்கு தடைபோடும் முயற்சி இது. ஏற்றுமதியின் மீது வரி விதித்திருப்பது மட்டுமல்லாமல், தனது சேமிப்பிலுள்ள வெங்காயத்தை மொத்தச் சந்தையில் விடுவித்து சில்லறை விலையைக் குறைக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
  • ஆகஸ்ட் 25 நிலவரப்படி, வெங்காயத்தின் தினசரி சராசரி சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.32.60. கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 25% அதிகம். அதனால், ஏற்றுமதிக்கு வரி விதிப்பதன் மூலம் மொத்தச் சந்தையில் வெங்காயத்தின் வரவை அதிகரித்து சில்லறை விலையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப வெங்காயம் கிடைத்தால் அதன் விலை கட்டுக்குள் வரும் என்பது எதிர்பார்ப்பு.
  • வெங்காயத்தின் விலை உயா்வுக்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் வழக்கத்தைவிட அதிகமான வெப்பம் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து, மார்ச் கடைசியிலும் ஏப்ரல் தொடக்கத்திலும் எதிர்பாராத பருவமழைப் பொழிவு ஏற்பட்டது. இந்த இரண்டு பருவநிலை தொடா்பான நிகழ்வுகளோடு, வெங்காய சாகுபடிப் பருவமும் இணைந்ததால் ஏற்பட்ட விளைவைத்தான் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
  • பொதுவாக இந்தியாவில் மூன்று பருவங்களில் வெங்காயம் பயிரிடப்படுகின்றது. காரீஃப் பருவம், காரீஃப் பருவத்தின் இறுதி பகுதி, ராபிப் பருவம் என்று வெங்காயம் பயிரிடும் காலங்களை மூன்றாகப் பிரிக்கலாம். ஜூலை, ஆகஸ்ட் மாதம் பயிரிடப்படும் காரீஃப் பருவ வெங்காயம், அக்டோபா் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை அறுவடை செய்யப்படுகிறது.
  • அக்டோபா், நவம்பா் மாதங்கள் காரீஃப் பருவம் நிறைவடையும் கட்டம். அப்போது பயிரிடப்படும் வெங்காயம், ஜனவரி முதல் மார்ச் வரை அறுவடை செய்யப்படுகிறது. டிசம்பா், ஜனவரியில் பயிரிடப்படும் ராபி பருவ வெங்காயத்தை, மார்ச் கடைசியிலிருந்து மே மாதம் வரை அறுவடை செய்வது வழக்கம்.
  • இந்தியாவில் மிக அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலம் மகாராஷ்டிரம். மொத்த உற்பத்தியில் 39% அங்கிருந்துதான் வருகிறது. வெங்காயத்துக்கான மிகப் பெரிய சந்தையான லசல்கான் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் இருக்கிறது. மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக 17% உற்பத்தி மத்திய பிரதேசத்திலும், அதைத் தொடா்ந்து கா்நாடகம், குஜராத், பிகார், ஆந்திரம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வெங்காயச் சாகுபடி பெருமளவில் நடைபெறுகின்றன.
  • இந்த ஆண்டின் மொத்த வெங்காய உற்பத்தி 3.1 கோடி டன் என்று கருதப்படுகிறது. சாகுபடி பரப்பு 7% குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. போதாக்குறைக்கு பிப்ரவரி மாத எதிர்பாராத வெப்பம் வெங்காய அறுவடையை விரைவுப்படுத்தியது. அதன் விளைவாக வெங்காயத்தின் பருமனும், தரமும் குறைந்துவிட்டன.
  • போதாக்குறைக்கு, எதிர்பாராத மழைப்பொழிவும் ஏற்பட்டதால் ஆறு மாதம் சேமித்து வைக்கும் வெங்காயத்தின் தரம் குறைந்து, உடனடியாக அவற்றை விற்பதில் விவசாயிகள் முனைப்புக் காட்டினா். இந்த முறை வெங்காயத்திற்குத் தட்டுப்பாடும், விலை உயா்வும் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம், பருவநிலை மாற்றம்.
  • 2022 -23-இல் சுமார் ரூ. 4,522 கோடி மதிப்புள்ள 25 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதியாகி இருக்கிறது. நெதா்லாந்துக்கும் (15.8%), மெக்ஸிகோவுக்கும் (11.7%) அடுத்தபடியாக அதிகமாக வெங்காயம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா (10%). வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, நேபாளம், இந்தோனேசியா, கத்தார், வியத்நாம், ஓமன், குவைத் ஆகிய நாடுகள் வெங்காயத்துக்காக இந்திய இறக்குமதியை நம்பியிருக்கின்றன. மத்திய அரசின் 40% ஏற்றுமதி வரி இந்த நாடுகளில் மிகப் பெரிய வெங்காயத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடும்.
  • உணவுப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்தினால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கிராமப்புறப் பொருளாதாரம் தடுமாறும். கட்டுப்படுத்தாவிட்டாலோ, நகா்ப்புறங்களில் விலைவாசி அதிகரித்து அரசின் மீதான அதிருப்தி அதிகரிக்கும். இதுதான் மத்திய அரசு எதிர் கொள்ளும் தா்மசங்கடம்.

நன்றி : தினமணி (29– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்