ஜீயோ டாமின்
- கரோனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருகிறது.
- வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?
- இப்போது வடமாநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள், நம் பகுதிகளில் சாதாரணமாகக் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள்தான்.
- இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை மிகவும் விசித்திரமானது. பொதுவாக, தனித்தனியாக (solitary phase) குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை அல்ல.
- வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு உணவுக்காக வந்துசேர்கின்றன.
- பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது, அவற்றின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருளை அதன் உடல் உற்பத்திசெய்கிறது.
- அப்போதுதான் அவை அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
அச்சுறுத்தும் படிநிலை
- செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலன்களில் பெரும் மாறுதல் ஏற்படுகின்றன. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் வாழும் கூட்டு வாழ்வுக்குத் (gregarious phase) தூண்டப்படுகின்றன.
- அவற்றின் உணவுப் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் திடீரென மாற்றமடைகின்றன. இந்நிலையில், சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும், ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன.
- வறட்சியைத் தொடர்ந்து வரும் மழை அவற்றுக்கு எண்ணிக்கையில் தழைத்துப் பெருக சாதகமான சூழலாய் அமைகிறது.
- பெரும் கூட்டமாக மிகக் குறைந்த கால அவகாசத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன.
- இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடியவை.
- இலைகள் முதல் மரத்தின் மேல் வேர்கள் வரை எல்லாவற்றையும் செரித்துவிடவல்ல இந்த வெட்டுக்கிளிகள் ஒரு கூட்டமாகப் புறப்படுகையில், ஒரு நாளில் ஒரு கிராமத்தின் மொத்தப் பயிர்களையும் நாசமாக்கிவிடுவதோடு, ஒரு வாரத்தில் அந்தக் கிராமத்தின் அத்தனை பயிர்களையும் தின்று தீர்த்துவிட வல்லவை.
- ராஜஸ்தானில் இவை எட்டாயிரம் கோடி ரூபாய் பயிர்களைச் சேதப்படுத்தியிருக்கின்றன. சில ஆண்டுகள்கூட அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் திறன் கொண்டவை.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இப்படி அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை. ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அவை தாமாகவே தமது முந்தைய தனிமை வாழ்க்கைக்கு நகர்ந்து, மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாகவும் மாறிவிடுகின்றன.
உலகம் எப்படிக் கையாள்கிறது?
- இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை, பெரும் பரவல் காரணமாக இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது.
- தற்போதைய சூழலில், வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்குத் தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும் வேதிநச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
- இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும், இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மைசெய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும். அதோடு, அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும்.
- இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் இடம்பெயர்ந்துவிடுவதாலும், பல சதுர கிலோமீட்டர் தொலைவுக்குக் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்தப் பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை.
- அதுமட்டுமின்றி, மண்ணுக்குள் புதைந்திருக்கும் இவற்றின் முட்டைகளைப் பூச்சிக்கொல்லிகளால் அழிக்க முடிவதில்லை.
- இந்நிலையில், இயற்கையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பறவைகள், விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
- ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு, அரேபியாவைக் கடந்து ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள், சாதாரணமாகத் தம் வலசையை ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம்.
- ஆனால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது நம் உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தல்.
- இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும், இவற்றின் இடப்பெயர்ச்சியைச் சரியாக யாராலும் கணிக்க முடியாது.
- இப்போதே துறைசார் நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அவற்றின் இடப்பெயர்ச்சியைக் கண்காணிப்பதோடு ஏதேனும் ஆபத்து ஏற்படின் அதற்கான துரித நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்த நிலையில் இருக்க வேண்டியதும் அவசியம்.
- தொடரும் அச்சுறுத்தல்கள்
- புவி வெப்பமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தையிலும் விரும்பத் தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார்கள்.
- அதிகரிக்கும் வெப்பம் பூச்சிகளின் உணவின் அளவை 20-50% வரை அதிகரிக்கும் என்கிறது ‘கார்டியன்’ இதழ்.
- தனியாக இருக்கும்போது ஆபத்தற்றவையாக இருக்கும் இந்த வெட்டுக்கிளிகளை ஆபத்தான கூட்டு வாழ்க்கைக்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் பருவநிலையுமே.
- நாம் தொடர்ந்து காணும் பேரழிவுகளான இயற்கைச் சீற்றங்களாகட்டும், கரோனா போன்ற நோய்த் தொற்றுகளாகட்டும், இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ஆகட்டும்… எல்லாவற்றையும் ஆழ்ந்து நோக்கினால் இவையெல்லாம் ஒற்றைப் புள்ளியில் இணைகிறது; ‘பருவநிலை மாற்றம்’ என்பதுதான் அது.
- வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி எனப் புதிய புதிய மொழிகளில் இந்தப் பூமி மனிதரிடம் பேச முயல்கிறது.
- கூர்மதியுள்ள மனிதச் சமூகமும் அதை ஆளும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப்போகிறார்களோ? - ஜீயோ டாமின், பூவுலகின் நண்பர்கள்.
நன்றி: தி இந்து (28-05-2020)