TNPSC Thervupettagam

வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள முன்கூட்டிய உத்திகள் முக்கியம்

June 4 , 2020 1512 days 643 0
  • நமக்கு இது பெரிய சவாலான காலகட்டம்தான்போல் இருக்கிறது. நெருக்கடி மேல் நெருக்கடிகள் வருகின்றன. 2020 தொடக்கத்திலிருந்து கரோனா பாதிப்புகளை நாடு எதிர்கொண்டுவரும் நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதி தீவிரமான உம்பன் புயலால் சென்ற வாரம்தான் பாதிக்கப்பட்டது.
  • அடுத்து, நாட்டின் மேற்குப் பகுதி வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதிகரித்துவரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழ்நாடு வரை அச்சத்தை உண்டாக்கியிருக்கும் நிலையில், மிகப் பெரிய வேளாண் பேரழிவுக்கு நாட்டை இட்டுச்செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவலை தரும் விஷயம்

  • சுதந்திர இந்தியாவில் 13 வெட்டுக்கிளிப் படையெடுப்புகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்திருக்கின்றன. பெரிய அளவிலான படையெடுப்பு நிகழ்ந்தால், அது இரண்டு வருடங்கள் வரை நீடிக்கும்.
  • அதற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் அவை அமைதியாக இருக்கும். தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் படையெடுப்பு, சமீப காலத்தில் மிக மோசமான ஒன்றாக இருக்கும் என்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ‘வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு’ (எல்.டபிள்யூ.ஓ.) எச்சரித்துள்ளது.
  • தற்போது பெருகிக்கொண்டிருப்பதும் விவசாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவாகிக்கொண்டிருப்பதுமான வெட்டுக்கிளிகள், இந்தியப் பெருங்கடல் வெப்பமாகிக்கொண்டிருப்பதன் மறைமுகமான விளைவு என்று வானிலை வல்லுநர்களில் சிலர் கூறுகிறார்கள்.
  • கடந்த ஆண்டு பருவமழை குறைவாகப் பெய்யலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது. இதனால், இந்தியாவுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் நல்ல மழை கிடைத்தது.
  • ஆகவே, ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் ஈரப்பதம் அதிகரித்து வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் அதிகரித்தது.
  • கூடவே, மழைமேகங்களைச் சுமந்த காற்று, அந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை அடைவதற்குச் சாதகமாக அமைந்தது. ஒரே ஆறுதல் என்னவென்றால், மேற்கிந்தியாவில் பெரும்பான்மை நிலங்களில் பயிர் அறுவடை முடிந்துவிட்டது.
  • அதேசமயம், விதைப்புக் காலத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பது, வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் சாதகமான சூழல் என்பது கவலை தரும் விஷயமாக இருக்கிறது.
  • வெட்டுக்கிளிகள் படையெடுப்புக்குத் தமிழ்நாடும் இலக்கான வரலாறு உண்டு. பெரும் பஞ்சத்தை அது உண்டாக்கியதையும் வழக்காறுகள் நமக்குச் சொல்கின்றன. வெட்டுக்கிளிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஒருவேளை தமிழ்நாடு இலக்கானால், அதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு தயாராக வேண்டும்.
  • தேசிய அளவிலான ஆலோசனைகளைப் பெறுவதோடு, சர்வதேச அளவில் அடிக்கடி வெட்டுக்கிளி தாக்குதல்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் அனுபவங்களையும் அவர்கள் கைக்கொள்ளும் அணுகுமுறைகளையும் தமிழ்நாடு அரசு கேட்டறிவதும் முன்கூட்டி நாம் உத்திகளை வகுக்க உதவும்.

நன்றி: தி இந்து (04-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்