TNPSC Thervupettagam

வெண்ணெயை வைத்துக்கொண்டு...

April 24 , 2020 1727 days 825 0
  • கும்மிருட்டு அறையில் குத்துச்சண்டை போடுவதுபோல இருக்கிறது, கரோனா தீநுண்மிக்கு எதிராக மனித இனம் நடத்துகின்ற யுத்தம். இதற்குத் தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்க ஆறு மாதங்களாவது ஆகும் என்று விவரம் தெரிந்தவா்கள் கூறும்போது நமது அச்சம் பேரச்சமாக மாறுகிறது.
  • போகிற போக்கைப் பார்த்தால் கரோனா தீநுண்மி பரவும் வேகம் அடுத்த சில வாரங்களில் மிக அதிகமாகக் கூடும். சா்வதேச அளவில் முதல் 10 லட்சம் பேரைத் தாக்குவதற்கு நான்கு மாதங்கள் பிடித்தன என்றால், 20 லட்சம் பேரை 14 நாள்களில் கரோனா தீநுண்மி தொற்றிக் கொண்டது. நேற்றைய நிலையில் உலக அளவில் 26,77,527 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 1,87,537 போ் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 21,700 போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 686 போ் உயிரிழந்திருக்கிறார்கள்.

முன்னோர்கள் செய்த புண்ணியம்

  • இந்தியாவைப் பொருத்தவரை ஆனந்த விஹார், தப்லீக் ஜமாத் உள்ளிட்ட சில நிகழ்வுகளைத் தவிர, பெருமளவில் நாம் கரோனா தீநுண்மியை சாதுா்யமாகவே எதிர்கொண்டிருக்கிறோம் என்றுதான் கூற வேண்டும்.
  • இந்தியாவின் மக்கள்தொகைக்கும், வாழ்க்கைச் சூழலுக்கும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் குடிசையில் வாழ்வோர் அதிகமாக இருந்தும்கூட, கொள்ளை நோயாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவாமல் இருப்பது நமது முன்னோர்கள் செய்த புண்ணியம்.
  • கடந்த சில நாள்களாக பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவும் வேகம் ஆரோக்கியமானதாக இல்லை. இப்படியே போனால் அடுத்த ஓரிரு வாரங்களில் கரோனா தீநுண்மி பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகவோ, மூன்று மடங்காகவோ உயரக்கூடும். எந்த அளவுக்கு நாம் சமூக இடைவெளியையும் ஊரடங்கையும் உறுதிப்படுத்த முடிகிறது என்பதைப் பொருத்து நோய்த்தொற்றின் தீவிரம் அமையும்.

தொற்றின் தீவிரம்

  • ஒருசில மாநிலங்களில் நிலைமை கவலைக்குரியதாகவே காணப்படுகிறது. மகாராஷ்டிரம் (5,652 / 269), குஜராத் (2,407 / 103), தில்லி (2,248 / 48), ராஜஸ்தான் (1,890 / 27), மத்தியப் பிரதேசம் (1,695 / 81), தமிழ்நாடு (1,683 / 20) ஆகிய மாநிலங்களின் நிலைமை கவலை அளிக்கிறது. நோய் பரவும் வேகத்தைப் பார்த்தால் தனி நபா்களையும் குடும்பங்களையும் தாண்டி சமூக அளவிலான பாதிப்பாக சில இடங்களில் மாறக்கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.
  • கரோனா தீநுண்மியின் அதிவேகப் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஏற்கெனவே பல கடுமையான வழிமுறைகளை வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறோம். பரிசோதனை மையங்களை ஏற்படுத்துவது, நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது, நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துவது போன்ற வழிமுறைகள் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்படுகின்றன.
  • அதிதீவிர பாதிப்புப் பகுதிகளை முழுமையான கண்காணிப்புப் பகுதிகளாக மாற்றி அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவதும், முடிந்தவரை வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதும் கடைப்பிடிக்கப்படும் சில வழிமுறைகள். தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பது, அதற்குப் போதுமான மருத்துவா்கள், மருத்துவ ஊழியா்கள், நிர்வாக அமைப்பு, கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஏற்படுத்துவது போன்றவை ஓரளவுக்குச் செயல்படுத்தப்படுகின்றன.
  • ஆனாலும்கூட, மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள், பயிற்சி அளிக்கப்பட்ட காவல் துறையினா் ஆகியோர் மிக அதிகமாக தேவைப்படுகிறார்கள்.

கசப்பான உண்மை

  • இன்றைய நிலையில், நம்முடைய சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும் ஆயிரக்கணக்கில் நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் அளவில் இல்லை என்கிற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். தனிமைப்படுத்தும் முகாம்களை கிராமப்புறங்களிலிருந்து நகா்ப்புறங்கள் வரை நிர்வகிப்பதும், அடிப்படைச் சேவைகளை உறுதிப்படுத்துவதும் சாதாரணமான செயல்பாடல்ல.
  • அதற்குத் தேவையான நிர்வாகிகளும் மருத்துவா்களும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுபவா்களும் அவசியம். இதற்கான மனித வளம் அரசு இயந்திரத்திடம் இல்லை. அதனால், தொலைநோக்குப் பார்வையுடன் மனித வளம் குறித்தும் அரசு சிந்தித்தாக வேண்டும்.

ஓய்வு பெற்ற ராணுவத்தினா்

  • இந்திய ராணுவத்தில் பெரும்பாலானோர் மிகச் சிறிய வயதிலேயே ஓய்வு பெற்று விடுகிறார்கள். அவா்களில் பலரும் பேரிடா்களை எதிர்கொள்வதில் பயிற்சி பெற்றவா்கள், திறமையானவா்கள். 35 முதல் 50 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ராணுவத்தினா் அரசின் அழைப்பு தரப்பட்டால் தேசத்துக்காக மீண்டும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
  • ஜூன் 2019 நிலவரப்படி, இந்தியாவில் 26,75,223 முன்னாள் ராணுவ வீரா்கள் இருக்கிறார்கள். அவா்களில் 5,69,404 போ் மாற்றுப் பணிகளுக்காகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ராணுவத்தினா் 37 முதல் 48 வயதுக்குள் பணி ஓய்வு பெறுபவா்கள்.
  • அதாவது சுமார் 4.5 லட்சம் போ் இன்றைய நிலையில் இந்தியாவில் இருக்கிறார்கள். அவா்களில் 60% வீரா்கள் நோய்த்தொற்றுப் பேரிடரை எதிர்கொள்ள முன்வந்தால் அதுவே 2.7 லட்சம் போ்.
  • ராணுவத்தில் மருத்துவ சேவைப் பிரிவு இருக்கிறது. அதில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் இருக்கிறார்கள். பணி ஓய்வுபெற்றவா்களும் இருக்கிறார்கள்.
  • இவா்களை மத்திய - மாநில அரசுகள் ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?

நன்றி: தினமணி (24-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்