TNPSC Thervupettagam

வெப்ப அலை நீண்டகாலச் செயல்திட்டங்கள் தேவை

April 10 , 2024 85 days 92 0
  • 2024ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் ‘வழக்கத்துக்கு மாறாக’ அதிக நாள்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவலை அளிக்கிறது. கோடைக்காலம் முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தென் மாநிலங்கள் எதிர்கொண்டிருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை, உயர்ந்துவரும் உணவுப் பொருள் பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில், வெப்ப அலை குறித்த இதுபோன்ற அறிவிப்புகள் மக்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளன.
  • ஓரிடத்தில் வழக்கத்தைவிட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமான அல்லது 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் நீடிக்கும் சூழல் ‘வெப்ப அலை’ என வரையறுக்கப்படுகிறது. 2022இல், இந்தியாவில் 16 மாநிலங்களில் 280 நாள்கள் வெப்ப அலை நிலவியதாக டெல்லி அறிவியல்–சுற்றுச்சூழலுக்கான மையத்தின் அறிக்கை கூறுகிறது. நீரிழப்பு, தலைச்சுற்றல், சோர்வு, வெப்ப மயக்கம் (heat stroke) போன்ற பாதிப்புகளை மனிதர்களிடம் வெப்ப அலை ஏற்படுத்துகிறது; கடுமையான வெப்ப அலைகளால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்தியாவில் வெப்ப அலைகளால் 2023இல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264.
  • ஏழைகள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினர் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த மக்களை வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, ‘வெப்பச் செயல் திட்டங்கள்’ என்கிற வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. 2010இல் ஏற்பட்ட வெப்ப அலையைத் தொடர்ந்து அகமதாபாத் நகர நிர்வாகம் இந்தியாவில் முதல் வெப்பச் செயல் திட்டத்தை 2013இல் நடைமுறைப்படுத்தியது.
  • வெப்ப அலை ஒவ்வோர் ஆண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில், கோடைக் காலத்தின் உச்சியில் இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பண்டிகைகள், விடுமுறை நாள்கள், நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக் காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டே வாக்குப்பதிவுக்கான தேதிகள் முடிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் அறிவிப்பு குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
  • ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நாட்டின் ஒரு பாதியில் 55%-65% அளவுக்கும், இன்னொரு பாதியில் 65% அளவுக்கும் ‘வழக்கத்தைவிட அதிக’மான வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது; மிகச் சொற்பமான இடங்களில் மட்டுமே வழக்கமான அல்லது வழக்கத்தைவிடக் குறைவான வெப்பநிலை பதிவாகக்கூடும்.
  • கோடைக்காலத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், வெப்ப அலை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத் தேர்தல் அலுவலர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; எனினும் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் மிகவும் பொதுப்படையாக உள்ளன.
  • ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைவாக நிலவும் பிப்ரவரி-மார்ச் அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தலை நடத்துவது குறித்துப் பல ஆண்டுகளாக, மூத்த அரசியல்வாதிகள்கூட வலியுறுத்திவந்தனர். எனினும் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் அந்தப் பேச்சு சுவடில்லாமல் மறைந்துவிடுகிறது.
  • காலநிலை மாற்றத்தின் விளைவுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், வெப்ப அலை போன்றவற்றின் விளைவுகள் உடல்நலத்தில் மிக மோசமாகத் தாக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பது வெளிப்படை. தேர்தலை எதிர்கொள்வதற்கான தற்காலிக ஏற்பாடுகளாக அன்றி, நீண்ட கால நோக்கிலான செயல்திட்டங்களே வெப்ப அலை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து நம்மைக் காக்கும்!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்