- வெப்ப அலை குறித்த உரையாடல்களில் ‘உணரப்படும் வெப்பநிலை’ (Real feel temperature or feel like temperature) என்பது கவனம் பெற்றுவருகிறது. வெப்பமானியிலோ, செயலிகளிலோ பதிவாகும் வெப்பநிலையைவிட அதிக மிருப்பதாக உணரப்படும் வெப்பநிலை இது.
- சென்னையில் பதிவாகும் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்; ஆனால் 52 டிகிரி என்கிற அளவுக்கு வெப்பநிலை உணரப்படுகிறது. இது கானல்நீர் போலப் பொய்த் தோற்றம் அல்ல. பாதிப்புக்குள்ளாகும் மக்களின் கற்பனையும் அல்ல.
- வெப்பமானியில் பதிவாகும் உண்மையான வெப்பநிலையே (actual temperature or wind temperature) வானிலை அறிவிப்புகளில் கூறப்படுகிறது. காற்றின் வெப்பத்தைக் கணக்கிடுவதன் மூலம் உண்மையான வெப்பநிலை குறிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அந்த இடத்தில் உண்மையான வெப்பநிலையோடு, உணரப்படும் வெப்பநிலையும் குறிக்கப்படுகிறது. ‘வெட்-பல்ப் குளோப் வெப்பநிலை’ என்ற கருவி மூலம் இது அளக்கப்படுகிறது.
- இக்கருவி, நேரடி சூரிய ஒளியில் உள்ள வெப்ப அழுத்தத்தைக் கணக்கிடுகிறது. காற்றின் ஈரப்பதம், காற்றின் திசை, சூரியனின் கோணம், சூரியக் கதிரியக்கம் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இவற்றை வைத்து, ஓரிடத்தின் உணரப்படும் வெப்பநிலை அறியப்படுகிறது. உண்மையான வெப்பநிலையையும் காற்றின் ஈரப்பதத்தையும் இணைத்து ‘உணரப்படும் வெப்பநிலை’யை அறியலாம்.
- இது ‘வெப்பக் குறியீடு’ (heat index) எனவும் குறிப்பிடப்படுகிறது. கோடைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமிருப்பின், உணரப்படும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். இது கடலோரப் பகுதிகளில் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சூழல் அங்குள்ள மக்களுக்குப் புழுக்கத்தால் நேரும் அசௌகரியத்தைத் தருகிறது.
- மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் உணரப்படும் வெப்பநிலை அதிகமாக இருப்பதில்லை. குளிரூட்டிகள், வெளியே வீசும் காற்றில் உள்ள ஈரப்பதத்தைத் திரட்டி, வீட்டுக்குள் அனுப்புகின்றன. இவற்றின் பயன்பாடு நகரங்களில் மிக அதிகம். கட்டிடங்களின் நெருக்கம் போன்ற காரணிகளாலும், நகர மக்களால் உணரப்படும் வெப்பநிலை அதிகம் வாட்டுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 05 – 2024)