TNPSC Thervupettagam

வெயிலால் அவதியுறும் விவசாயிகள்

June 26 , 2024 204 days 159 0
  • விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் ஓரளவு வருவாய் தருபவை, உறுதுணையாக இருப்பவை கால்நடைகள்தான். மாடு வைத்திருந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை குறிப்பிட்டார். கோடையின் கடும் வெப்பத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மழையைப் போல ஆரவாரமாக இல்லாமல், கண்ணுக்குத் தெரியாமல் அமைதியாக நிகழ்வதால் இந்தப் பாதிப்பு வெளியே தெரிவதில்லை.

கொதிக்கும் வெயில்:

  •  தற்போது தமிழ்நாட்டில் மழை தொடங்கிவிட்டது. ஆனாலும் வெப்பத்தின் கடுமை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம்; வெப்ப அலையால் மே 31 அன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 பேர். சுற்றுச்சூழல் கேடுகளால் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை இந்த ஆண்டு தமிழ்நாடு கண்கூடாகக் கண்டுவிட்டது.
  • ‘வறட்சி அத்தியாயங்கள் கடந்த அரை நூற்றாண்டாக வளர்ந்தவண்ணம் உள்ளன. வளரும் நாடுகளில் மிதமான வறட்சி 39%, மிகை வறட்சி 0.85% வளர்ச்சியைப் பாதிக்கும்’ என உலக வங்கியின் அறிக்கை (2023) தெரிவிக்கின்றது. தமிழ்நாட்டின் 64% நிலப்பரப்பு வறண்ட பகுதிகளைக் கொண்டது. நீர்ப் பற்றாக்குறையால் தென்மேற்குப் பருவமழைக் காலமாகிய காரிப் பருவமே (Kharif) பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழை சராசரியைவிட 5% குறையும் மாவட்டங்கள் 17 எனத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்புச் செய்துள்ளது. 90% தரைமட்ட நீரும், 80% நிலத்தடி நீரும் சுரண்டப்பட்டுவிட்டது (ENV18 2020).

கடுமையான பாதிப்புகள்:

  •  இந்த ஆண்டு மார்ச் முதலே வெப்பம் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து வெந்தணலாய்க் கொதித்தது. அதிகபட்சமாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. உழைப்பாளிகள் ஒரு சிலர் வெப்பத் தாக்குதலுக்கு ஆள்பட்டு உயிரிழந்தனர். ஆடு மாடுகள் அவதிக்கு உள்ளாகின. பெரிய கோழிப் பண்ணைகளில் தினம் ஆயிரம் கோழிகள் வெயிலின் தாக்குதலால் இறந்தன. காற்று பலமாக வீசினால்கூட, மாடுகளில் பால் சுரப்புக் குறைந்துவிடும். இந்தக் கொடும் கோடையில் கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு கடும் கோடையின் தாக்கம் குறித்து ஒரு விவசாயி, “எனக்கு வாழ்வாதாரம் இந்த மாடுகள்தான். நான்கு மாடுகள் கறவை நிலையில் உள்ளன. காலையில் 30 லிட்டர் பால் கறக்கும். ஆனால், வெயில் அதிகமாக இருந்த நாள்களில் காலையில் 6 லிட்டர் மாலையில் 4 லிட்டர் பால் உற்பத்தி குறைந்துவிட்டது. ஒரு நாளைக்குச் சராசரியாகக் காலை மாலை இரண்டு வேளையும் சேர்த்து 430 ரூபாய் நஷ்டம்” என்று வருத்தத்துடன் சொன்னார்.
  • இந்த ஆண்டு ஏப்ரலில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. அதனால், சித்திரை முதல் நாள் பொன்னேர் பூட்டிக் கோடை உழவு செய்ய இயலவில்லை. கோடை உழவு செய்தால் களைகள், பூச்சிமுட்டைகள் அழியும். செலவு குறையும். பயிரும் செழித்து வளரும். மண் பொலபொலவென மென்மையாகும். கோடை மழைநீரை மண் கோத்துக்கொள்வதால் ஆடியில் பயிர் செய்யும்போது, பயிருக்கான நீர்த்தேவை 25% குறையும். சித்திரை முடியும் தறுவாயில்தான் அங்கும் இங்குமாகக் கோடை மழை பெய்யத் தொடங்கியது.
  • கொளுத்தும் கோடையால் பயிர்கள் கருகிப் போகக் காரணம், எல் நினோ வெப்பக் காற்றில் சூடு 38-40 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது, மண்ணில் சூடு 51 டிகிரி செல்சியஸ் ஆகிவிடும். அப்போது பயிர்களின் வேர்ப் பகுதியில் 15-20 செ.மீ. ஆழ மண்ணுக்குள் வெப்பநிலை 125 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும். வெப்பம் தாங்காமல் பயிர்கள் காய்ந்து கருகிவிடுவதால் விவசாயிக்குப் பெருநட்டம் ஏற்படுகிறது.
  • தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் தற்போது நிலவும் கோடைக் கொதிநிலையைத் தாண்டிய இந்த வெப்பம், அடுத்த நூற்றாண்டின் முதல் கால் பகுதிவரை தொடரும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். இனியாவது விழித்துக்கொண்டு சுற்றுச்சூழலைக் காப்போமா?

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்