TNPSC Thervupettagam

வெறுங் கையால் விரட்டிவிட்டானே!

October 2 , 2024 55 days 93 0

வெறுங் கையால் விரட்டிவிட்டானே!

  • ஓராயிரம் வருடங்களாக ஓய்ந்து கிடந்த இந்தியா! அயல் மன்னர்களின் இடையறாப் படையெடுப்பு; போர்; சாதிகளின் அடுக்கு; மேல் கீழ் வேற்றுமைகள்!
  • இன்னொருபுறம் உயிரோட்டமுள்ள ஆறுகள்; பனி படர்ந்த இமயம்; அடர்ந்த காடுகள்; கல்லி எடுக்கப்படாத கனிமங்கள்!
  • இவ்வளவு வளமான நாட்டில் மக்களின் ஒட்டிய வயிறுகள்; உலர்ந்த உதடுகள்; அரிசிச் சோறு ஆண்டுக்கொரு முறை பண்டிகை நாளுக்கான உணவு; வறுமையே வாழ்க்கை முறை! அது ஏன் என்று உணரும் திறனற்ற மக்கள்!
  • இதுதான் இந்தியா! துண்டு துண்டு நாடுகள்! இதை ஒரு நாடாக ஆக்க இந்தியாவில் தோன்றிய எந்தப் பேரரசாலும் முடியவில்லை. வெள்ளைக்காரன் அதைச் சாதித்தவன்!
  • இவன் யார் நம்மை ஆள்வதற்கு என்னும் எண்ணம் மேட்டிமையானவர்களிடம் மெதுவாகத் தலைதூக்குகிறது. ஆனாலும், அது வெறும் விண்ணப்ப அரசியல்!
  • அடுத்த கட்டத்தில் வேகம் எடுக்கிறது. அந்தச் சுதந்திரத்தை அடைய எதுவும் வழிமுறைதான் என்னும் எண்ணம் பிறக்கிறது. வேதம் ஓதும் வாஞ்சி ஐயன் வெள்ளைக்காரக் கலெக்டரைச் சுட்டுக்கொல்கிறான்!
  • இப்போது தலைமை திலகருக்குப் போகிறது. திலகருக்கு முன்மாதிரி சிவாசி! ஆகவே இலக்குத்தான் முக்கியமே ஒழிய அதற்கான வழிமுறை அன்று என்னும் எண்ணம் கொண்டவர் திலகர். எண்ட் ஜஸ்டிஃபைஸ் த மீன்ஸ்!
  • திலகர் வடக்குக்கு என்றால் தெற்குக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை. வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா.
  • அந்த மாபெரும் தலைவன் வ.உ.சி.க்கு வெள்ளை அரசு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கிறது. அந்தத் தலைவனைச் செக்கிழுக்கச் செய்கிறது. வ.உ.சி.யை "நூலோர்' என்று போற்றுவான் பாரதி. "நூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ?''
  • இந்திய அரசியலில் இரண்டு பேர் நிகரற்ற தலைவர்கள்! அந்த இரண்டு பேரும் காந்தியை விட்டு விலகி நின்றார்கள்! ஒருவர் சுபாசு சந்திர போசு; இன்னொருவர் வ.உ.சி.
  • "சாப்பிடாதே (உண்ணாநோன்பு)'', "கடையை அடை (பந்த்)'' என்பன போன்ற முறைகளால் ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கிவிட முடியும் என்பதை இருவருமே ஏற்கவில்லை!
  • திலகருக்குப் பின் காந்தி நடத்திய காங்கிரசு மாநாட்டுக்குப் புறப்பட்ட வ.உ.சி.க்கு, காந்தியின் அரசியல் விளையாட்டுத்தனமாக இருக்கிறது; வெள்ளையன் கொடியவன் என்றெண்ணி வ.உ.சி. மாநாட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே திரும்பி விடுகிறார்! நீரோட்டத்தோடு செல்லவில்லை வ.உ.சி.; விலகல் நிகழ்ந்து விடுகிறது!
  • ஆனால் வ.உ.சி.யோடு சேர்ந்து, அவருடைய தலைமையில் அரசியல் நடத்திய பாரதி காந்தியைப் புரிந்து கொண்டுவிடுகிறார்!
  • காந்தியின் கொள்கையைத் தமிழர்க்கு அறிமுகம் செய்கிறான் பாரதி!
  • "உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை எந்த விடுதலைப் போராட்டமும் கடைப்பிடித்தறியாத புதிய சூழ்ச்சி ஒன்றைப் படைத்து விட்டாய்.''
  • இதுவரை இழிபடு போர், கொலை, தண்டம் என்று பின்னி வளர்ந்திருக்கும் விடுதலைப் போராட்டத்தினை அற வழியில் நடத்தப் புறப்பட்டாயே!
  • "ஒத்துழையாமை' என்னும் புதிய போர்க்கருவியைக் கண்டறிந்து இந்திய விடுதலையை நடத்தத் துணிந்தனையே என்று போர்முறை மாற்றத்தைத் தெளிவாக அறிந்து, அதைப் போற்றுகிறான்! இதுவரை உலகம் நடத்திய அத்தனை போராட்டங்களும் "கொலை வழியின' என்று இகழ்கிறான்!
  • "பெருங்கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய்,
  • நெருங்கிய பயன்சேர் "ஒத்துழையாமை''
  • நெறியினால் இந்தியாவிற்கு...''
  • என்று பாடிக் கொண்டே வந்தவன், "மகாத்மாவாக' காந்தியை அடையாளப்படுத்தி முடிக்கிறான்!
  • காந்தியின் போர் முறையை ஒப்பாத இருபெரும் தவ மக்கள் வ.உ.சி.யும், போசும்தான்!
  • வ.உ.சி. தொடக்கத்திலேயே ஒதுங்கி விட்டார்! போசு நீண்ட நாள் காந்தியுடன் பயணம் செய்து, காந்தி தலைமைப் பதவிக்கு நிறுத்திய பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்து, பிறகு காங்கிரசிலிருந்து விலகி, "அடித்து வாங்குவதுதான் சுதந்திரம்' என்று வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி, "இந்திய தேசிய இராணுவத்தை' சப்பான் துணையோடு கட்டுகிறார் நிகரற்ற வீரர் போசு!
  • அதிலே போசு செய்த தவறு, மனிதகுலமே அருவருப்போடு பார்த்த கொடூரமான கொலைவெறியன் இட்லரை நேரில் சந்தித்து, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டதுதான்! இட்லர் போசை சப்பானிடம் அனுப்புகிறார்!
  • சப்பானின் இராணுவப் பயிற்சியை வைத்து, அவர்களின் வழிகாட்டுதலில் "டில்லி சலோ' என்று புறப்படுகிறார் போசு!
  • சப்பான் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்று, வெள்ளைக்காரன் தோற்றிருந்தால், மாசுமருவற்ற சுபாசு சந்திர போசு தலைமையில் டில்லியில் ஆட்சி அமைந்திருக்கும்!
  • ஆனால் ஆசியாவை அடக்கித் தன் குடைக் கீழ் கொண்டு வரப் புறப்பட்ட சப்பானியன் இந்தியாவைத் தன் கட்டுக்குள் வைத்து கொள்வானா, இல்லை, அதற்குச் சுதந்திரம் அளிப்பானா? அடிமைப்பட்ட நாடுகளுக்கெல்லாம் விடுதலை அளிப்பதா அவன் வேலை?
  • சப்பானியப் பேரரசு ஆட்சியின் கீழ், "நிழல் ஆட்சியாக' போசின் ஆட்சி நீடிக்க முடியும் என்பது எப்படிச் சுதந்திரமாகும்? எசமானர்கள் மாறுவார்கள்! அவ்வளவுதான்!
  • போர் முறையில் விடுதலை பெறுவதற்கு இன்னொரு நாட்டின் ஆதரவு வேண்டும்! நம்மால் தனிப்படை கட்ட முடியாது! பயிற்சி இருக்காது!
  • பிரபாகரன் ஆயுதப் போராட்டம் என்னும் முடிவை மேற்கொண்ட போதே, இந்தியாவின் துணை தேவைப்பட்டுவிட்டது! பிரபாகரன் உள்ளிட்ட அத்தனை ஈழ இளைஞர்களுக்கும் இந்திரா காந்தி போர்ப் பயிற்சி அளித்தார்.
  • இந்தியா பிரபாகரனுடன் என்னும் நிலைப்பாடு, இலங்கைச் சிங்களவர்களை நடுநடுங்கச் செய்தது! இந்திரா இருந்திருந்தால், ஈழத்தை விடுதலை அடைய வைத்துத் தனக்கு அனுசரணையாக வைத்துக் கொண்டிருந்திருப்பார்!
  • ஆனால், இராசீவ் காந்தியின் காலத்தில் அயல் விவகாரக் கொள்கை வேறு வேறு நிலையினை எடுத்தது.
  • ஒரு கட்டத்தில் பிரபாகரன், பத்து இருபதாண்டுகளுக்கு மேலாக, அறிவிக்கப்படாத விடுதலையின் கீழ், அறிவிக்கப்படாத அரசையே நடத்திக்கொண்டிருந்தார்!
  • ஒரு கட்டத்தில் இந்தியப் பகை ஈழத்திற்கு எமனாய் முடிந்தது. காங்கிரசிலும் தமிழர்கள் அமைச்சர்களாய் இருந்தனர்! தமிழ்நாட்டையே மூச்சாகக் கொண்ட அந்தக் கட்சியினரும் மைய ஆட்சியில் பங்கு பெற்றிருந்தனர்!
  • இந்தியா அளித்த எல்லா உதவிகளும் சிங்களவர்களை முன்நிறுத்தி ஈழத்தை அழித்து விட்டன! இந்தியப் பகை எமனாய் அமைந்தது!
  • ஆயுதம் தாங்கிய போராட்டம் தன்னையும், தன் வீரர்களையும் சார்ந்த தன்னிச்சையான போராட்டம் அன்று.
  • ஆனால் காந்தியின் போராட்டம் தன்னிச்சையானது! அயலாரின் உதவியை எள்ளளவு கூடத் தேடாதது!
  • உலகத்தில் எந்த ஒரு தலைவனாவது, கத்தி எடுக்காமல், யுத்தம் செய்யாமல் ஓராண்டில் விடுதலை பெற்றுத் தருகிறேன் என்று சொன்னதுண்டா?
  • இந்தியா வியப்போடு திரும்பிப் பார்த்தது.
  • "ஓராண்டிலா?''
  • "ஆம்; ஓராண்டில்!'' அடித்துச் சொன்னார் காந்தி!
  • "என்ன செய்ய வேண்டும்?''
  • "உன் பிள்ளையை வெள்ளையனின் பள்ளிக்கு அனுப்பாதே; தேசியப் பள்ளி தொடங்கு; மரத்தடியில் கூட நடத்து!''
  • "வெள்ளைக்காரனின் நீதிமன்றத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காதே! ஏற்படும் பிணக்குகளைப் பஞ்சாயத்து வைத்துத் தீர்த்துக் கொள்!''
  • "எல்லாவற்றையும்விட மிக முக்கியம் வெள்ளை அரசுக்கு வரி கொடுக்காதே''
  • "வரி கொடுக்காவிட்டால், பொருள்கள் "சப்தி' செய்வான்! அந்த சப்திப் பொருள்களை விலை மலிவு கருதி இன்னொரு இந்தியன் ஏலத்தில் எடுப்பது நீசத்தனம்! அது உன் உடன்பிறந்தானின் சொத்து! வெள்ளைக்காரன் இவ்வளவு பொருள்களையும் கப்பலேற்றி அனுப்புவானா?''
  • "கைது செய்தால் சிறைக்குப் போ; இந்தியாவே சிறைதானே! அது சின்னச் சிறை அவ்வளவுதானே!''
  • பொங்குகிறது இந்தியா! வெள்ளைக்காரன் திப்பு சுல்தானைப் பார்த்தவன்; சிப்பாய்க் கலகத்தை ஒடுக்கியவன்!
  • கப்பலேற வேண்டியதுதானே? இதற்கு முன்மாதிரியான போராட்டம் உலகத்தில் எங்கும் கிடையாது. காந்தியின் மண்டையில் சுரந்த சிந்தனை!
  • அப்போது போலீசுக்காரர்கள் சத்தியாக்கிரகிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அமைதியாக போராட்டம் நடத்திய எங்களை ஏன் சுட்டாய் என்று ஆத்திரப்பட்ட சத்தியாக்கிரகிகள் "செüரி செüரா' என்னுமிடத்தில் போலீசு நிலையத்திற்குள் சிலரை எரித்துவிட்டார்கள்!
  • அவ்வளவுதான்; கொதித்துவிட்டார் காந்தி! சுதந்திரப் போராட்டத்தை நிறுத்திவிட்டார்! "கொலைச் சிந்தனையுடையவர்கள் பக்குவப்படும் வரை சுதந்திரம் காத்திருக்கும்'' என்று சொல்லிவிட்டார்!
  • "தந்தையே' என்றழைத்த வாயால், நேரு "மேட்னஸ்' (பைத்தியக்காரத்தனம்) என்றார்!
  • வெள்ளைக்காரன் கலங்கிப் போன வேளையில் போராட்டத்தை யாராவது நிறுத்துவார்களா? காந்தி நிறுத்துவார்; காந்திதான் நிறுத்துவார்!
  • வெள்ளைக்காரன் காந்தியைக் கைது செய்தான்; காங்கிரசு அல்லோகலப்பட்டது; நாடு திக்கற்று நின்றது!
  • இந்தக் கிழவன் பின்னால் போக முடியாது என்று மோதிலால் நேரு போன்றவர்கள் சுயராச்சியக் கட்சி தொடங்குகிறார்கள்! அதில் சத்தியமூர்த்தி சேர்கிறார்!
  • போராட்டம் வெற்றி முகட்டில் நிற்கும்போது, அதை ஒருவன் நிறுத்துகிறான் என்றால் "அகிம்சையின்' மீது அவனுக்கு எவ்வளவு பிடி இருக்க வேண்டும்!
  • மறுபடியும் எல்லாரும் காந்தியின் காலடியில் வீழ்ந்தார்கள்! அவனுடைய ஒரு வரிச் செய்தி இரட்டைக் குழல் துப்பாக்கி அன்று; பீரங்கி அன்று!
  • "ஒரு தீய அரசோடு நாம் ஒத்துழைக்கவில்லை என்றால் அரசு செயலற்றுப் போகும்!''
  • இதுவரை இப்படிச் சிந்தித்தவன் எவனாவது இந்தப் பூமியில் பிறந்திருக்கிறனா?
  • 1919-இல் நுழைகிறான் காந்தி! 1947-இல் தருமக் சக்கரம் பொறித்த தேசியக் கொடியைச் செங்கோட்டையில் ஏற்றுகிறார் நேரு!
  • ஆனால் அந்தக் கொடி பறக்கக் காரணமானவன் தில்லியில் இல்லை!
  • "நான்தான் கோட்டையில் கொடியேற்றுகிற உரிமையைப் பெற்றுக் கொடுத்தேன்'' என்று தன்னுடைய புகழ்ச் சங்கைத் தானே எடுத்து ஊதிக்கொள்ளவில்லை.
  • "அந்த அவன்' எந்தப் புகழுக்கும் சொந்தங் கொண்டாடியதில்லை!
  • காந்தியைப் புகழ்வதற்கு உயர்தனிச் செம்மொழியான தமிழில் உள்ள புகழ்ச் சொற்களை எல்லாம் பயன்படுத்திப் புகழ்ந்தாலும், அப்புறமும் தமிழ் போதாமை உடையது!
  • சூரியன் மறையாத பேரரசை ஆண்ட வெள்ளைக்காரனை வெறுங்கையாலே விரட்டி விட்டானே!

நன்றி: தினமணி (02 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்