- காவிரி நதிநீர்ப் பங்கீடு அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்குப் போதிய தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்ததையடுத்து, காவிரிப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. குடிநீர்த் தேவைக்கும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கும் தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது தவிர்க்க முடியாத நடவடிக்கையாகியிருக்கிறது.
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, சாதாரண நீர் ஆண்டில், ஜூன் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், 177.25 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். அதன்படி 2023 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை கர்நாடகம் 53.7703 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 15.7993 டிஎம்சிதான் வந்திருக்கிறது.
- தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில் ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தினமும் விநாடிக்கு 15,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக 8,000 கன அடி வீதம் ஆகஸ்ட் 22 வரை மட்டுமே வழங்க முடியும் என்று கர்நாடகம் தெரிவித்ததால் சிக்கல் உருவானது.
- அக்கூட்டத்திலிருந்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்திலும், தமிழ்நாட்டுக்குத் தினமும் விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவிட்டார். ஆனால், தமிழ்நாட்டின் தற்போதைய நீர்த் தேவை அதிகம்.
- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாததால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகம் காரணம் கூறுகிறது. ஆனால், அம்மாநிலத்தின் நான்கு அணைகளையும் சேர்த்து 93.535 டிஎம்சி (மொத்தக் கொள்ளளவான 114.571 டிஎம்சியில் 82%) தண்ணீர் இருக்கிறது என்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். அத்துடன் கர்நாடகத்துக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.
- இதனிடையே தமிழ்நாட்டுக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதை உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்கும் நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 37.97 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 10 டிஎம்சி தண்ணீர் வழங்குவதாகக் கூறுவது கண்துடைப்பு மட்டுமே.
- அணைகள் நிரம்பும்போது தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்ளும் கர்நாடகம், பற்றாக்குறைக் காலத்தில் உரிய பங்கை வழங்க மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப் படுத்துவதாகும். கர்நாடகத்தில் எந்த அரசு அமைந்தாலும் இதே நிலை தொடர்கிறது. இப்போதுகூட, கர்நாடகம் வறட்சியை எதிர்கொண்டிருக்கும் சூழலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.
- நெருக்கடி முற்றுவதால் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் கர்நாடக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் காவிரி நீர் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். தமிழ்நாட்டு அரசும் எதிர்க்கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒற்றுமையாக நின்று தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும்!
நன்றி : இந்து தமிழ் திசை (21– 08 – 2023)