TNPSC Thervupettagam

வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் நிதிப் பத்திரங்கள்

April 1 , 2021 1216 days 524 0
  • தேர்தல் நிதிப் பத்திர விநியோகத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க இயலாமைக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லாத நிலையில் 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தேர்தல் நிதிப் பத்திரங்களுக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லை என்று கூறியுள்ளது.
  • மேலும், ஏப்ரல் 12, 2019 தேதியிட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் சில பாதுகாப்புகளும் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
  • 2019-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாகத் தாங்கள் பெற்றுக்கொண்ட அநாமதேய பங்களிப்புகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் முத்திரையிட்ட உறையில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தது.
  • அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்றுக்கொண்ட பங்களிப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் விவரங்களும்கூட தற்காலிக ஏற்பாடுதான் என்பதையும்கூட தற்போதைய உத்தரவு கவனத்தில்கொள்ளத் தவறிவிட்டது.
  • அதற்கடுத்த முறை தேர்தல் நிதிப் பத்திரங்களை விற்கும்போதும் அத்தகைய விதிமுறை பொருந்தும் என்றும்கூட பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, சில பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
  • தேர்தல் நிதிப் பத்திரங்களுக்கு இடைக்காலத் தடை கோரும் மனுக்களும் அதற்கான அரசமைப்புச் சட்ட காரணங்களும் கருத்தில் கொள்ளப்படாத நிலையே இன்னும் நீடிக்கிறது.
  • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிப்பவர்கள் யார் என்று அறிந்துகொள்வதற்கான வாக்காளர்களின் அடிப்படை உரிமை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • எனினும், தேர்தல் நிதிக்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையிலான பிணைப்பு குடிமக்களிடமிருந்து மறைத்துவைக்கப்படக் கூடியதாகவே இன்றும் தொடர்கிறது.
  • தற்போதுள்ள நடைமுறையில், போலி நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் வங்கிக் கணக்குகள் வழியாகவும் அநாமதேய பங்களிப்புகளைச் செய்ய முடியும்.
  • இந்த முகமற்ற தன்மையைக் களைந்து கட்சிகளின் கணக்குவழக்குகளைத் தணிக்கைசெய்யவும் நிறுவனங்கள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கிய கணக்குகளோடு அவற்றை ஒப்பிட்டுச் சரிபார்க்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தவறானது அல்ல.
  • அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்களின் வாயிலாகப் பெற்ற தொகைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • அதுபோல, ஒவ்வொரு நிறுவனங்களும் தாங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளுக்கு அளித்த மொத்த தேர்தல் நிதி என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்