- பள்ளிக்கரணை அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், சென்னை வெள்ளத்தின்போது பொம்மைகளைப் போல் அடித்துச் செல்லப்பட்ட காட்சி, சமூக வலைதளங்களில் பரவிப் பதற்றம் தந்தது. அதேபோல, வேளச்சேரி கட்டுமானத் தலம் ஒன்றின் (site) 50 அடி பள்ளத்தில் விழுந்த இரண்டு பேர் ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட செய்தியும் வேதனை தந்தது. இவை வெள்ளத்தால் நிகழ்ந்தவைதாம். ஆனால், விபத்துக்குள்ளான கட்டுமானங்கள் பொறியியல் விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டவைதானா? இவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகள் போதுமானவையா?
சுற்றுச் சுவர் உடைந்தது
- கார்கள் அடித்துச் செல்லப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை ஒட்டிக் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு 2,000 வீடுகள் இருக்கின்றன. இவை ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அல்ல, விவசாய நிலங்களில் கட்டப்பட்டவை என்று சிலர் சொல்வதைக் கேட்க முடிந்தது.
- இருக்கலாம். எனில், ஏரியை ஒட்டி அமைந்திருக்கும் விவசாய நிலத்தை வாழ்நிலமாக்கும் நிலப் பயன்பாட்டு மாற்றத்தை (change of land use) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) எங்ஙனம் அங்கீகரித்தது? தவிர, ஏரியின் வெள்ளச் சமவெளிகளிலும் குடியிருப்பின் கரங்கள் நீண்டிருப்பதாகத் தெரிகிறது. நீர் பெருக்கெடுக்கும் காலங்களில் ஆறுகளும் ஏரிகளும் கரைகளைத் தாண்டி ஓடுகிற பகுதியை நவீன நீர் மேலாண்மை வெள்ளச் சமவெளி (flood plains) என்றழைக்கிறது.
- நமது பாரம்பரிய வேளாண்மை ஆற்றுப் புறம்போக்கு, ஏரிப் புறம்போக்கு, ஓடைப் புறம்போக்கு என்றழைப்பது இந்தப் பகுதிகளைத்தான். வெள்ளச் சமவெளிகளில் குடியிருப்புகளை அனுமதிக்கலாகாது. இந்தக் குடியிருப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது இ-பிளாக். இந்தப் பகுதிக்கும் ஏரிக்கும் இடையிலான சுற்றுச் சுவர் உடைந்தது. குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது.
- அது தரைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்துச் சென்றது. அதாவது, இந்தச்சுற்றுச் சுவர் அகலமான ஏரிக்கரையையும் (bund) தாண்டி, நீரைத் தொட்டு நிற்குமாறு கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
- ஊடகங்கள் இதைச் சுற்றுச் சுவர் என்று அழைத்தாலும் பொறியியல் அகராதியில் இதற்குத் தக்கவைப்புச் சுவர் (retaining wall) என்று பெயர். தக்கவைப்புச் சுவர் இரண்டு விதமான பாரங்களை எதிர்கொள்ள வேண்டும். முதலாவதாக, சுவர் அணைத்து நிற்கிற நீர் தரும் அழுத்தம். இது பக்கவாட்டிலிருந்து (lateral load) இயங்கும்.
- அடுத்ததாக, சுவரின் சுய எடை (self weight). இது செங்குத்தாக (vertical load) இயங்கும். தக்கவைப்புச் சுவர்கள் இவ்விரண்டு பாரத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும். இதன் நிலைத்தன்மையை உறுதி செய்துகொள்ள சுவரின் அடித்தளம் போதிய தாங்குதிறன் (bearing) கொண்டதாகவும், சுவரின் மீதான அழுத்தம் அதை நிலைகுலையச் செய்யாமலும் (overturning), சரிந்து போகாமலும் (sliding) இருக்குமாறு வடிவமைக்கப்பட வேண்டும்.
- இதே பொறியியல் கோட்பாட்டின்படிதான் அணைக்கட்டுகளும் கட்டப்படுகின்றன. நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள நீரின் எடை பக்கவாட்டிலிருந்தும், அணைக்கட்டின் சுய எடை செங்குத்தாகவும் இயஙகும். பக்கவாட்டு எடைதான் பிரதானமாக இருக்கும். அது கீழ் நோக்கிச் செல்லுந்தோறும் கூடும். அதனால்தான் அணைக்கட்டுச் சுவர்களின் அகலம் மேற்பகுதியில் குறைவாகவும் கீழ்ப்பகுதியில் கூடுதலாகவும் இருக்கும்.
- மேற்படி இ-பிளாக்கின் சுற்றுச் சுவர், நீரின் பக்கவாட்டுப் பாரத்தை எதிர்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்படவில்லை என்று சந்தேகப்பட எல்லா முகாந்திரங்களும் உள்ளன. அவ்விதம் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது நீரின் அழுத்தத்தைத் தாங்கியிருக்கும்; உடைந்திருக்காது. வெள்ளச் சமவெளியும் ஏரிக்கரையும் குடியிருப்புப் பகுதிகளின் நீட்சிகளாகியிருக்கின்றன. இது விதிமீறல். சுற்றுச் சுவரானது தக்கவைப்புச் சுவராக வடிவமைக்கப்படவில்லை. இது கட்டுமான விதிகளின் போதாமை.
தற்காலிகச் சுவர் சரிந்தது
- அடுத்து, வேளச்சேரி. இங்குள்ள ஐந்து பர்லாங்கு சாலையில் ஒரு புதிய கட்டுமானத்துக்காக 50 அடிப் பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது, பூமிக்கடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம் கட்டுவதற்காக. அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த இரவில், கட்டுமானத் தலத்தில் அலுவலகமாகப் பயன்பட்டு வந்த கொள்கலன் (container), மின்னியற்றி (generator) அறை, அருகாமை பெட்ரோல் கிடங்கின் தற்காலிகக் கழிவறை ஆகியவை இந்தப் பள்ளத்தில் சரிந்தன. அவற்றிலிருந்த ஐந்து பேர் பள்ளத்தில் விழுந்தனர். மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். இரண்டு பேரை சடலங்களாகத்தான் மீட்க முடிந்தது.
- நெருக்கடியான நகரச் சூழலில் ஆழமான அகழ்வுகள் எவ்விதம் மேற்கொள்ளப்பட வேண்டும்? முதலில் கனமான இரும்புத் தகடுகளை (steel sheet piles) நிலத்தின் மேற்பரப்பிலிருந்து அடித்து இறக்க வேண்டும். தோண்ட வேண்டிய ஆழத்தைவிட அதிகமான ஆழத்துக்கு இந்தத் தகடுகளை உட்செலுத்த வேண்டும். பிறகு, படிப்படியாக நிலத்தை அகழ வேண்டும்.
- அப்போது இந்தத் தகடுகள் மண்ணின் அழுத்தத்தையும் நிலத்தடி நீரின் அழுத்தத்தையும் பக்கவாட்டிலிருந்து எதிர்கொள்ளும். அதை நேரிடும் விதமாகக் குறுக்கு வசத்தில், சுமார் 10 அடி ஆழத்துக்கு ஒருமுறை இரும்பு உத்திரங்கள் (steel girder) நிறுவப்பட வேண்டும். இந்தத் தகடுகள் தக்கவைப்புச் சுவர்களாக இயங்கும்.
- உத்திரங்கள் தக்கவைப்புச் சுவர் வளைந்துவிடாமல் காப்பாற்றும். வேளச்சேரி விபத்தின் படங்களிலும் காணொளிகளிலும் உத்திரம் எதையும் காண முடியவில்லை. கொள்கலனும் மின்னியற்றியும் கழிவறையும் இருந்த பகுதிகளின் மண் இளகியதால் அவை சரிந்து பள்ளத்தில் விழுந்ததாகத் தெரிகிறது.
- வெள்ளத்தின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தகடுகளின் ஒரு பகுதி விழுந்திருக்கக் கூடும். அதைத் தொடர்ந்து மண் சரிந்திருக்கலாம். இந்தத் தகடும் உத்திரமும் தற்காலிகப் பணிகள்தாம் (temporary works). நிலவறைகள் கட்டியதும் இவை அகற்றப்படும். ஆனால், நிரந்தரப் பணிகளுக்கு இணையான முக்கியத்துவம் இந்தத் தற்காலிகப் பணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இப்பணிகளின் வடிவமைப்பைப் பரிசீலித்தால் விபத்துக்கான காரணம் தெரிய வரலாம்.
என்ன செய்யலாம்
- முதலாவதாக, வெள்ளச் சமவெளிகள் விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இரண்டாவதாக, நமது நகரங்கள் பலவற்றில் பிரதானக்கட்டுமானங்களுக்கே பொறியியல் வரைபடங்கள் கோரப்படுவதில்லை. சென்னையில் மெளலிவாக்கம் விபத்தைத் (2014) தொடர்ந்து இந்த வரைபடங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
- ஆனால், இவை சரிபார்க்கப்படுவதோ அங்கீகரிக்கப்படுவதோ இல்லை என்கிறார்கள். அடுத்து, பிரதானக் கட்டுமானத்துக்குப் புறத்தே அமைக்கப்படும் தக்கவைப்புச் சுவர் உள்ளிட்ட எல்லாப் பணிகளுக்கும் பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
- ஆழமான அகழ்வுகளுக்கான தற்காலிகப் பணிகளுக்கும் இந்த விதியை நீட்டிக்க வேண்டும். இந்த வரைபடங்கள் அரசுத் துறைகளால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த வரைபடங்களின்படி கட்டுமானங்கள் கட்டப்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் வேண்டும். கடைசியாக, இவ்விரண்டு விபத்துகளுக்கான காரணங்களைப் பொறியியல்ரீதியாக ஆய்வு செய்து ஓர் அறிக்கை வெளியிட்டால், எதிர்காலத் தவறுகளைத் தவிர்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2024)