TNPSC Thervupettagam

வெள்ளமும் வறட்சியும்

November 29 , 2022 706 days 404 0
  • நம் நாட்டில் பருவமழை காலங்களில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், கோடை காலத்தில் தண்ணீருக்கு திண்டாடும் நிலை மாறவே இல்லை. பருவமழையின்போது தமிழக ஆறுகளில் பாயும் வெள்ளம், வங்கக் கடலில் கலந்து வீணாகிறது.
  • கடலில் கலந்து வீணாகும் நீரை, மாநிலத்தின் வறட்சியான மாவட்டங்களுக்குத் திருப்புவதற்கான முயற்சிகள் குறித்து தொடா்ந்து பேசப்படுகிறது. ஆனால், இன்னும் எனோ அது செயல்பாட்டுக்கு வரவில்லை.
  • காவிரியில் வரும் வெள்ள நீரை, வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குத் திருப்பி அம்மாவட்டங்களை வளப்படுத்தும் முயற்சி 1933-இல் புதுக்கோட்டை நிா்வாக அதிகாரியாக இருந்த டாட்டன் ஹாம் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது.
  • அவா் முயற்சியால் கரூா் அருகே மாயனுாா் தென்துறை கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனாலும், கால்வாய் வெட்டும் பணி முற்றுப்பெறாமல் பாதியில் நின்றது. 1958-இல் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதலமைச்சா் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டமும் ஏனோ கிடப்பில் போடப்பட்டது.
  • இப்போதாவது இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், காவிரி டெல்டாவில் வெள்ள அபாயம் நீங்குவதுடன், உபரி நீரால் கரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், துாத்துக்குடி மாவட்டங்களில் எட்டு லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுவதோடு, 50 லட்சம் விவசாயிகளும் பயன் பெறுவா் என்கின்றனா் வேளாண்துறை வல்லுநா்கள்.
  • 2020-இல் அப்போதைய முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி, காவிரி - குண்டாறு - வைகை ஆறுகள் இணைப்புத் திட்டம் 14 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா். இதற்காக, முதல் கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டு, நிலங்களை அளவிடும் பணிகள் தொடங்கின.
  • விராலிமலை அருகே உள்ள குன்னத்துாரில் கடந்த ஆண்டு (2021) பிப்ரவரி 21 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம் நிறைவேறினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பும்.
  • மேலும், நிலத்தடி நீா் மட்டமும் உயரும் என்பதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ந்தனா். ஆனால், கால்வாய் பாதையில் குறுக்கிட்ட பாறைகளை வெடி வைத்து அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அந்த பணி, இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
  • பொக்லைன் உதவியுடன் 2.5 கி.மீ. நீளம், 110 மீட்டா் அகலம், 38 அடி ஆழத்தில் கால்வாய் வெட்டும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்த கட்டமாக மேலும், 2.5 கி.மீ. துாரத்துக்கு இதே அளவில் கால்வாய் வெட்டும் பணி நடக்க இருக்கிறது. மொத்தம் உள்ள இந்த 5 கி.மீ. தொலைவுக்கான கால்வாயில் மூன்று இடங்களில் பாலமும், ஒரு இடத்தில் தடுப்பணையும், கால்வாய்க்கு கீழ்ப்பகுதியில் மழைநீா் செல்ல சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகின்றன.
  • இரண்டு இடங்களில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. கோரையாற்றில் 126 மீட்டா் நீளம், 19 மீட்டா் அகலம் கொண்ட பெரிய தொட்டிப் பாலம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த தொட்டிப் பாலம் ஒன்பது துாண்களுடன் அமைக்கப்படுகிறது. கீழ்ப்பகுதியில் மழைநீா் செல்லும் வகையிலும், மேல்பகுதியில் வாகனம் செல்லும் வகையிலும் பாலம் கட்டப்படுகிறது.
  • கால்வாய் வெட்டும் பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, நிலத்தையும் கையகப்படுத்தினால், ஆறு மாதத்துக்குள் 5 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணி நிறைவுபெறும் என்று பணியை மேற்பாா்வையிடும் அதிகாரிகளும் கட்டுமானப் பணியாளா்களும் கூறுகின்றனா்.
  • இத்திட்டத்தால், கரூா் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம், குளத்தூா், அறந்தாங்கி, ஆவுடையாா்கோயில் உள்ளிட்ட வட்டங்கள் பயன்பெறும்.
  • மேலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூா், சிவகங்கை, காளையாா்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், ராமநாதபுரம் வட்டங்களும் பயன்பெறும்.
  • அத்துடன், விருதுநகா் மாவட்டத்தில் திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் வட்டம் ஆகியவை பயன்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேறினால் ஏழு மாவட்டத்தின் 50 லட்சம் விவசாயிகள் பயனடைவா். காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்யும் காலங்களில், கா்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றபோது மட்டுமே காவிரி ஆற்றில் பல லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. மழைக் காலங்களில் காவிா் ஆறு பெரும்பாலும் வடே காணப்படுகிறது.
  • மழை பெய்யும்போது வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் மேட்டூா் அணையைத் தவிர வேறு பெரிய அளவிலான நீா்த்தேக்கம் எதுவும் இல்லை. சமவெளியை கொண்ட தமிழகத்தில் பெரிய அளவிலான நீா்த்தேக்கம் கட்ட இயலலாததால் ஆண்டுக்கு சுமாா் 300 டிஎம்சி முதல் 350 டிஎம்சி வரை நீா் கடலில் கலந்து வீணாகிறது.
  • இந்த நீரை சேமிக்கும் வகையிலும் அதனை வாய்க்கால் மூலம் திசை திருப்பி தென் தமிழக பகுதிகளை வறட்சியில் இருந்து மீட்கவும் காவிரி - குண்டாறு - வைகைத் திட்டம் உதவும்.
  • இந்த திட்டம் நிறைவேறினால் பயன்பெறக் கூடிய ஏழு மாவட்ட விவசாயிகளும், விரைவில் நிலத்தைக் கையகப்படுத்தி பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இனியாவது இந்தப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு விவசாயிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (29 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்