வெள்ளித் திரை அணிந்த நாடக அரங்குகள்!
- சூரியன் மறையாத அளவுக்குப் பூமிப் பந்தின் பல நாடுகளை அடிமைப் படுத்தி ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். குறிப்பாக, விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் விரிந்த ராஜ்யத்தையும் ஆட்சி செய்த (1837-1901) காலக்கட்டம், உலக அளவில் கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, கல்வி ஆகிய தளங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது வரலாறு.
- ரயில்பாதைகள் அமைப்பு, நகர்மயமாதல் ஆகிய வற்றுடன் பாராளுமன்றம் மற்றும் பத்திரிகைத் துறையிலும் மறு மலர்ச்சி ஏற்பட்டது. விக்டோரிய காலத்தில்தான், ஆங்கிலக் கவிதையில் ‘டிரமாட்டிக் மோனோ லாக்’ (Dramatic monologue) என்கிற நாடகத்தன்மை கொண்ட புதிய வடிவம் பிறந்து, மொழியையும் நிகழ்த்துக் கலையையும் இணைத்தது. நாடக அரங்குகளில் மோனோலாக்குகள் புகழ்பெற்று விளங்கின. நாடகத்தில் ‘மெலோ டிராமா’ என்கிற புதிய அணுகு முறையும் புகழ்பெறத் தொடங்கியது.
- விக்டோரிய காலத்தின் சீர்திருத்தவாதிகள், தொழிலாளர் நலன், பெண் ணுரிமை, சுகாதாரச் சீர்திருத்தங்கள், உலகளாவிய கல்வி ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்காக அரசை வலியுறுத்தினர். இது தொடர்பாகப் பெரும் விவாதங் களையும் முன்னெடுத்தனர். அவை பதிப்பிக்கவும் பட்டன. இந்த மாற்றங்கள், பிரிட்டனின் காலனி நாடுகள் முழுக்க தாக்கத் தையும் பண்பாட்டு அதிர்வுகளையும் உருவாக்கின. குறிப்பாக, விக்டோரிய இலக்கியம், நாடகம் ஆகியவற்றின் பாணி, காலனி நாடுகளுக்கும் இறக்குமதியானது.
- விக்டோரிய நாடக இயக்கத்திலிருந்து தாக்கம் பெற்றே, பார்சி, மராத்தி, வங்காள நாடகக் குழுக்கள் தங்களைச் சீர்திருத்திக் கொண்டன. இது தென்னகத்தையும் வந்தடைந்ததில் ஊக்கம் பெற்ற ஒருவர்தான் தஞ்சை டி.ஆர்.கோவிந்த சாமி ராவ். மராத்தி புராண நாடகங்களைத் தமிழ்ப்படுத்தி தனது மனமோகன நாடகக் கம்பெனி மூலம் தஞ்சையில் மக்களுக்கு நிகழ்த்திக் காட்டிப் புகழ்பெற்றார். தஞ்சையிலிருந்து மதராஸ் ராஜதானியின் பிற நகரங்களுக்குப் பயணித்த முதல் பெட்டி அரங்க நாடகக் குழு இவருடையதே. மதராஸ், ஹைதராபாத்தில் தெலுங்கிலும் நாடகங்களை நடத்தினார்.
சங்கரதாஸ் வந்தார்!
- வெளியூர்களில் கோவிந்த சாமி ராவின் மனமோகனக் குழுவுக்குக் கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து, இதே காலக்கட்டத்தில் கும்பகோணத்தில் நடேச தீட்சிதரால் தொடங்கப்பட்ட கல்யாணராமய்யர் நாடகக் குழுவும் புகழ்பெறத் தொடங்கியது. கோவிந்தசாமி ராவ் வட இந்தியப் புராண நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் என்றால், கல்யாணராமய்யர் நாடகக் குழு, தமிழ் நிலத்தின் பூர்விகக் கதை களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதற்குக் காரணமாக அமைந்தார், அக்குழுவுக்கு வரமாக வந்துசேர்ந்த சங்கர தாஸ் சுவாமிகள்.
- அவர் துறவு பூண்டு சுவாமிகள் என்று அழைக்கப்படும் முன்னர், இக்குழுவுக்கு நடிகராகவும் துணை ஆசிரியராகவும் வந்து சேர்ந்தார். தனது நாடக ஆளுமையின் வயிலாக அவரே அக்குழுவின் நடிகர்களைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி நாடகப் பாடங்களைப் பயிற்றுவிப்பதைப் பார்த்த கல்யாண ராமய்யர், பிராமணரல்லாத சங்கரதாஸைத் தலைமை நாடக ஆசிரியராக உயர்த்தினார்.
- ‘ஆரம்பமே அசத்தல்’ என்பதைப் போல், அதன்பின்னர் தமிழ் நாடக மேடையில் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார் சங்கரதாஸ். அதில் முதலாவது புதிய நாடகப் பனுவல்களை எழுதிக் குவித்தது! அவை கச்சிதமான நாடக வடிவத்தில், சாமானிய மக்களும் புரிந்து மகிழும் வண்ணம் எளிய புழங்குச் சொற்களைக் கொண்டு, உயர்ந்த யாப்பிலக்கணச் சந்தங்களைக் கேட்போரைக் கவரும் தாளகதியுடன் பாடல்களையும் உரையாடல்களையும் அமைத்து எழுதியது தமிழ் நாடக வளர்ச்சிக்குப் புதிய பாதையாக அமைந்தது.
- இரண்டாவது, ‘தமிழ் மண்ணைப் பூர்விக மாகக் கொண்ட கதை மாந்தர்கள்’ என நாடக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து 40க்கும் அதிகமான நாடகங்களை எழுதியது! இவற்றை ‘சங்கரதாஸ் சுவாமிகள் தந்த நாடகச் செல்வம்’ என்று தனது ‘நாடகக் கலை’ என்கிற நூலில் விரித்து எழுதியிருக்கும் அவ்வை டி.கே.சண்முகம்: “நாடகத்துக்காக அவர் எடுத்தாண்ட கதைகள் பெரும்பாலும் அம்மானைப் பாடல்களாக நம்முடைய தமிழ்த் தாய்மார்கள் சுவையோடு படித்து, பாடி வந்த பழங்கதைகள் தாம்.
- அவை ‘வள்ளி திருமணம்’, ‘கோவலன் சரித்திரம்’, ‘மதுரை வீரன் சரித்திரம்’, ‘சித்திராங்கதை சரித்திரம்’, ‘நல்லத் தங்காள் கதை’ ‘அபிமன்யு சுந்தரி’, ‘பவளக் கொடி’, ‘சீமந்தனி’, ‘சதியநு சூயா’, ‘பிரகலாதன்’, ‘சிறுத்தொண்டர்’, ‘சத்தியவான் சாவித்திரி’, ‘சதி சுலோசனா’ எனப் பல.
- இவை தவிர வடமொழி நாடகமாகிய ‘மிருச்சகடி’யையும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ உள்ளிட்ட சில ஆங்கில நாடகங்களையும் தமிழ் நாடகமாக்கி இருக்கிறார். சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் அரங்கில் ஆயிரக்கணக்கில் நடிக்கப் பெற்றவையென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார் டி.கே.எஸ்.
விரைந்து பரவிய நாடக இயக்கம்:
- கோவிந்தசாமி ராவ் ஊர்ஊராகப் போய் நடத்திய புராண நாடகங்களில், ‘பாதுகா பட்டாபிஷேக’த்தில் பரதனாகவும் ‘ராம்தா’ஸில் நவாபாகவும் அவரே நடித்துப் பெரும் புகழ்பெற்றார். ‘ராம்தாஸ்’ நாடகத்தை இவர் தெலுங்கு மொழியில் ஹைதராபாத்தில் நடத்தியபோது, இஸ்லாமியத் தனவந்தர்கள் ஒன்றுதிரண்டு பாராட்டி அளித்த தங்கப் பதக்கம், ‘கீன்காப்’ என்கிற தங்கச் சரிகையிலான சால்வை எனப் பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ஏற்ற கதாபாத்திரத்தினைச் சிறப்பாகக் கையாண்டு நடித்த காரணத்தால் ‘நவாப்’ கோவிந்தசாமி ராவ் என்று அழைக்கப்பட்டார்.
- நவாப் கோவிந்தசாமி ராவின் மனமோகன நாடகக் குழுவில் ராஜபார்ட் நடிகர்களாக இருந்த கோனேரி ராவ், வீராசாமி ராவ், ஸ்திரீ பார்ட் நடிகர்களாக இருந்த சுந்தர ராவ், குப்பண்ணா ராவ், விதூஷக வேடம் தரித்து வந்த பஞ்சநாத ராவ் ஆகிய ஐந்து பேரும் பிரிந்து போய் தனித்தனியே புதிய நாடகக் குழுக்களைத் தொடங்கினார்கள்.
- அதேபோல் கும்பகோணம் கல்யாண ராமய்யர் குழுவிலிருந்து சங்கரதாஸ் சுவாமிகள், நடேச தீட்சிதர் ஆகியோர் பிரிந்து சென்று புதிய குழுக்களைத் தொடங்கினர். அவற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் விதையூன்றிய ‘பாலர்’ நாடகக் குழு முறையில் (Boys companies) பயின்று புகழ்பெற்ற எண்ணற்ற கலைஞர்கள் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்டனர்.
- பிரிந்து சென்வர்கள் உருவாக் கிய நாடகக் குழுக்கள் வளர்ந்து, ஊர்ஊராகப் பயணம் செய்து முகாமிட்டு நாடகங்களை நடத்தத் தொடங்கினர். நாடகாசிரியர், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர். இதனால், தமிழ் நாடகம் ஒரு வெகுஜனப் பொழுது போக்கு இயக்கமாக மாறியது.
- பெரிய நகரங்களிலும் சிறு நகரங்களிலும் நிரந்தர நாடக அரங்குகள் அமைக்கப்பட்டன. அவற்றில் பல கட்டிடங்களாகவும் பல கீற்றுக் கொட்டகைகளாகவும் இருந்தன. இந்த நாடகக் கொட்டகைகளே பின்னால் சலன சினிமாவும் பின்னர் பேசும் சினிமாவும் செல்வாக்குப் பெற்றபோது, வெள்ளித்திரையை அணிந்து கொண்டு படங்காட்டின!
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2025)