TNPSC Thervupettagam

வே.ஆனைமுத்து: பெரியாரியப் பாதையில் பெரும் வாழ்வு

April 8 , 2021 1386 days 637 0
  • சிந்தனையாளர் பெரியாரைத் திராவிட இயக்கத்துக்குள்ளேயே எப்படிச் சிறைப்படுத்திவிட முடியாதோ அப்படி அவர் வழியில் தொடரும் பெரியாரியச் சிந்தனையாளர்களையும் அரைடஜன் அமைப்புகளுக்குள் அடைத்துவிட முடியாது.
  • அறிவுச் சிறகை விரித்து அகண்ட வெளியில் அவரவர்க்கு எட்டிய உயரத்தில் பலரும் பறந்து திரிந்திருக்கிறார்கள். பெரியாரின் சிந்தனைகளைத் துறைவாரியாகத் தொகுத்து வெளியிடுவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவரும் சமூகநீதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான வே.ஆனைமுத்துவும் (1926-2021) அத்தகைய வரையறைக்குள் அடங்காத ஆளுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
  • அன்றைய திருச்சி மாவட்டத்தின் பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடியில் பிறந்தவர் ஆனைமுத்து.
  • சிறுவயதில் இறை நம்பிக்கை உள்ளவராய் கிராமத்துத் திருவிழாக்களின்போது நாடகங்களிலும் கூத்துகளிலும் புராணக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.
  • எனினும், தீண்டாமைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான கோபம் அவரது மனதில் பள்ளிநாட்களிலேயே உருவாகிவிட்டது.
  • நாற்பதுகளின் தொடக்கத்தில் அவரது பள்ளி ஆசிரியர் கணபதியால் பெரியாரின் குடியரசு பத்திரிகை அவருக்கு அறிமுகமானது. நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் இறந்தபோது, அதை சமூகத்தில் ஒரு பிரிவினர் கொண்டாடியது ஆனைமுத்துவை அதிரவைத்தது; முழுமையான திராவிட இயக்க உணர்வாளராக அவரை உருமாற்றியது இந்தச் சம்பவம்.

அண்ணாமலை நாட்கள்

  • 1946-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் புகுமுக வகுப்பில் சேர்ந்தார் ஆனைமுத்து. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
  • எனினும், அவரது ஆர்வம் தமிழ் இலக்கியங்களிலும் வரலாற்றிலும்தான் இருந்தது. மானுடம் குறித்த தனது பார்வையை விரிவுபடுத்தியதாகத் திருக்குறளை அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.
  • திராவிட இயக்கத்தில் சேர்ந்து அவர் தீவிரமாக இயங்கத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. அண்ணாமலை நாட்களில் அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றார். தனது இறுதிக்காலம் வரையிலும் ‘சிந்தனையாளன்’ மாத இதழை நடத்திவந்தார். ‘பெரியார் இரா’ (Periyar Era) என்ற ஆங்கில இதழையும் சில காலம் முன்பு வரை நடத்திவந்தார்.
  • ஒரு பத்திரிகையாளராக அவர் இளம் வயதிலேயே உருவெடுத்துவிட்டார் என்றாலும் அது வெற்றிகரமாக அமையவில்லை. திருக்குறளார் வீ.முனுசாமியை ஆசிரியராகக் கொண்டு திருச்சியிலிருந்து ‘குறள்மலர்’ என்ற ஏட்டை நண்பருடன் இணைந்து அவர் நடத்தினார். துணையாசிரியராகவும் அந்த இதழில் பணிபுரிந்தார்.
  • அதற்கு முன்பு, காரைக்குடியிலிருந்து வெளிவந்த ‘குமரன்’ இதழில் அவரது முதல் வெண்பா பிரசுரமாகி, ‘திராவிட நாடு’ இதழில் மறுபிரசுரம் கண்டிருந்தது. தவிர, வன்னியர் சங்கத்தின் ‘பல்லவநாடு’ இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
  • திராவிட இயக்கத்தோடு மட்டுமின்றி வன்னியர் சங்கத்திலும் இணைந்து ஆனைமுத்து செயல்பட்டார். சாதி ஒழிப்போடு பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் குறித்தும் பேசப்பட்ட காலம் அது. அண்ணாவும் பெரியாரை அப்படியொரு செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் சந்தித்தவர்தான்.

பெரியாருடன் சந்திப்பு

  • 1944-ல் வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பெரியாரைச் சந்தித்தார் ஆனைமுத்து. பெரியாரின் பேச்சை அவர் முதல் தடவை கேட்டதும் அப்போதுதான்.
  • அண்ணாமலை நாட்களும் தீவிர வாசிப்பும் ஆனைமுத்துவைப் பட்டை தீட்டியிருந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்த ஆனைமுத்துவின் பேச்சைக் கேட்ட பெரியார் அவருக்குக் கடிதம் எழுதி வரவழைத்துப் பேசினார். தன்னிடம் பணியில் சேருமாறும் அழைப்புவிடுத்தார். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஒன்றில் பணியில் இருந்த ஆனைமுத்து அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
  • இளைஞர்களைத் தேடித் தேடி இயக்கத்தில் சேர்த்துக்கொண்டிருந்த பெரியார் இரண்டு மடங்கு ஊதியம் தரத் தயாராக இருந்தும் அந்த வாய்ப்பை ஆனைமுத்து ஏற்றுக் கொள்ளவில்லை.
  • பெரியாருடன் நேரடி அறிமுகம் இருந்தாலும் அவர் மீது ஆனைமுத்து பற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருந்தது சிறைவாசக் காலம்தான். அரசமைப்புச் சட்டம் சாதியமைப்பைப் பாதுகாக்கிறது என்று அதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக திருச்சி, வேலூர் சிறைகளில் ஓராண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவித்தவர்களில் ஆனைமுத்துவும் ஒருவர்.
  • அந்தச் சிறைவாச நாட்களில்தான் எட்கர் தர்ஸ்டனின் ‘தென்னிந்திய சாதிகளும் குலங்களும்’ புத்தகத் தொகுதிகளை ஆனைமுத்து படித்தார். அப்போதுதான், பெரியாரின் சாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் தேவையை அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார்.
  • தென்னிந்தியாவைப் பற்றி மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சமூக அமைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பிய அவர் சிறைக்கூடத்தை வாசிப்புக் கூடமாக மாற்றிக்கொண்டார்.
  • கடுங்காவல் சிறைத் தண்டனையில் பைண்டிங் பிரிவில் வேலைபார்த்த ஆனைமுத்து, கல்கத்தா தேசிய நூலகத்திலிருந்து பைண்டிங் செய்ய வந்த தமிழ், ஆங்கிலப் புத்தகங்களையும் தனது வாசிப்புப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார். திருக்குறள், மனுநீதி, பகவத் கீதை ஆகியவற்றை வரிவரியாய், வார்த்தை வார்த்தையாய் அந்நாட்களில் அவர் படித்தார்.

கருப்போடு சிவப்பும்

  • 1976-ல் பெரியார் சம உரிமைக் கழகத்தைத் தொடங்கிய ஆனைமுத்து, 1988-ல் அதற்கு மார்க்ஸிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்று பெயர் மாற்றியதற்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. கருப்பையும் சிவப்பையும் இணைப்பதற்கான விதையும் அவர் மனதில் ஏற்கெனவே விழுந்ததுதான். 1962-ல் கரூரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அழைக்க விரும்பினார் ஆனைமுத்து. அந்த விருப்பத்தைப் பெரியாரிடம் சொன்னார்.
  • சமதர்மத்தின் தீவிர ஆதரவாளரான பெரியாரும் அதற்குச் சம்மதித்தார். ஆனால் அந்த அழைப்பை கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அந்த விருப்பமும் நிறைவேறியது. காலையில் சாதி ஒழிப்பு மாநாடும் மாலையில் சமதர்ம மாநாடுமாக திராவிடர் கழகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அறுபதுகளின் இறுதிவரையிலும் இந்நிலை நீடித்தது.
  • அறுபது, எழுபதுகளில் பெரியார் திருச்சிக்கு வரும்போதெல்லாம் அவரோடு மாலையில் உரையாடும் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக ஆனைமுத்து ஆனார். 1974-ல் ‘பெரியாரின் சிந்தனைகள்’ மூன்று பெரும் தொகுப்புகளாக வெளிவருவதற்கு இந்தச் சந்திப்புகள் காரணமாக அமைந்தன. 2010-ல் 20 தொகுதிகளாக ஏறக்குறைய பத்தாயிரம் பக்கங்களில் விரிவுபடுத்தியும் வெளியிட்டார் ஆனைமுத்து.
  • திருச்சி சந்திப்புகளில் பெரியாரிடம் பல்வேறு விஷயங்களையும் விவாதிக்கும் வாய்ப்பு ஆனைமுத்துவுக்குக் கிடைத்தது. இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று பெரியார் பேசியபோது அதை அவரிடம் மறுத்துப் பேசிய ஆனைமுத்து, பிறந்த மதத்தை விட்டு வெளியேறுவதன் நடைமுறைச் சிக்கல்களைத் தாம் விவாதித்ததாக நினைவுகூர்ந்திருக்கிறார்.
  • சாதியமைப்பைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை நீக்குவதைத் தீர்வாகவும் முன்மொழிந்திருக்கிறார். இது குறித்து 1973-ல் சென்னையில் ஒரு கூட்டத்தில் பெரியார் முன்னிலையில் அவர் பேசி முடித்தபோது, அவரைப் பேரறிஞர் என அழைத்துப் பாராட்டினார் பெரியார்.
  • 96 ஆண்டு கால நிறைவாழ்வின் இறுதிக் காலத்திலும் தன் மீது தாக்கம் ஏற்படுத்திய ஒரே தலைவர் பெரியார் மட்டுமே என்று குறிப்பிட்டவர் ஆனைமுத்து.
  • திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மற்ற தலைவர்களின் சொற்சிலம்பத்தில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. பொதுவாழ்வில் அடியெடுத்து வைக்கும் தலைவர்கள் அனைவருமே தங்களது பெயர்களுக்கு முன்னால் அடைமொழிகளைச் சேர்த்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நாட்களில் ‘தோழர்’ என்பதை மட்டுமே பெருமையாகக் கருதியவர் ஆனைமுத்து. அந்த ஒற்றைச் சொல்லுக்கான உதாரண விளக்கம் அவரது வாழ்க்கை.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்