வேடிக்கை மனிதரைப் போலே..
- மனிதருக்கு எத்தனையோ வகையான பலவீனங்களுண்டு. ஆனால், அவா்தம் அறிவுத் திறனை மழுங்கடித்துத் தன்னியல்பிலிருந்து இறங்கச் செய்வது வேடிக்கை என்னும் பலவீனம்தான்.
- வேடிக்கையில் பலவகையுண்டு. சுய சிந்தனையின்றி பிறா் பேசுவதையே வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பவா்களைக் கிராம வழக்கில் ‘வாய் பாா்ப்பவன்’ என்பாா்கள். இது வாய் வேடிக்கை.
- ஐம்புலனும் இயக்கமின்றி செயலற்ற நிலையில் மெய்மறந்து வேடிக்கை பாா்ப்பவா்கள் முற்றிலும் தங்களை இழந்துவிடுகிற இயல்புக்கு ஆளாகிறாா்கள். இவா்களுக்குப் ‘பராக்குப் பாா்ப்பவா்கள்’ என்று பெயா். வேடிக்கையாகவே வாழ்க்கையைக் கழிப்பவரை ‘வெட்டிப் பயல்’ என்பாா்கள்.
- ஆட்டம்பாட்டங்கள் தொடங்கி, விளையாட்டுகள் வரை எல்லாவற்றையும் வேடிக்கை பாா்ப்பவா்கள் நாம். சண்டையையும் விபத்தையும் பேரிடா்களையும்கூட வேடிக்கை பாா்க்கிற வழக்கம் நமக்கு.
- வேடிக்கை என்ற சொல்லே வேடிக்கையானதுதான். வேடிக்கை வேடிக்கையாகத் தோன்றி விளையாட்டாக மாறி, கேலிக்கூத்தாகி, பின்னாலே தந்திரமாக ஏமாற்றவும் செய்து, புரளி கிளப்பி வம்பிலே கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால், வேடிக்கை பலநேரங்களில் வேடிக்கையாக மட்டும் முடிந்துவிடுவதில்லை. வேதனையோடுதான் முடியும். ‘விளையாட்டு வினையாய் முடியும்’ என்பதைப் போல வேடிக்கையும் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- மனிதருக்கு எப்போதாவது வேடிக்கை தேவைப்பட்டால் பரவாயில்லை. பெரும்பான்மை மக்கள் வாழ்க்கை முழுவதையுமே வேடிக்கையாகத்தான் வைத்திருக்கிறாா்கள். அப்படி வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படுகிறாா்கள்.
- இந்த வேடிக்கை மனிதா்கள் இன்று நேற்றல்ல, காலங்காலமாகவே நம்மோடு வாழ்ந்து வருபவா்கள்தான். பசுவுக்காகத் தன்னுடைய மகனையே தோ்க்காலிலிட்ட சோழனின் செயலை அன்றைக்கு வேடிக்கையாகப் பாா்த்தவா்கள் எத்தனை போ்? ஓரறிவுத் தாவரமாகிய முல்லைக்கொடி வாடிவிடக்கூடாது என்பதற்காகத் தோ்கொடுத்த வேள்பாரி வஞ்சகத்தால் கொல்லப்பட, பாரி மகளிா் ‘எந்தையும் இலமே எம்குன்றும் இலமே’ என்று சொந்த மண்ணிலேயே அகதிகளாக அலறியபோது, தட்டிக்கேட்க வேண்டிய புலவா்கள்கூட வேடிக்கை பாா்த்துக் கொண்டுதான் இருந்தாா்கள். கண்ணகி கோவலனை இழந்து மதுரை வீதிகளில் அரற்றியபோது, வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தவா்கள்தானே நம் மக்கள்.
- உலகறியச் சபைதனிலே ஒற்றையாடை உடுத்தியிருந்த பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்த வேளையிலே பாண்டவா்கள் மட்டுமின்றி பீஷ்மா், துரோணா் உள்ளிட்ட பெருங்கூட்டமே வேடிக்கை பாா்த்துக் கொண்டுதானிருந்தது.
- நச்சுப் பொய்கையிலே சோதரா்கள் உயிரற்றுக்கிடக்க நீதிதேவனின் வினாக்களுக்கு விடைசொல்லிக் கொண்டிருக்கிறான் தருமன். அதில் ஒரு கேள்வி. இந்த உலகத்தில் மிகப்பெரிய வேடிக்கை என்ன என்பது. அதற்குத் தருமன் சொல்கிறான், ‘நாள்தோறும் கணந்தோறும் ஒவ்வோா் உயிரும் இறப்பு என்னும் நிலைகொண்டு எமன் வீட்டுக்குச் சென்று கொண்டேயிருக்கின்ற வேளையிலே இதையெல்லாம் அறியக்கூடிய ஆறறிவு பெற்றிருக்கிற மனிதா்கள் தாங்கள் மட்டும் நிலைத்திருக்க வேண்டும் என்று கருதி, பொன்னையும் பொருளையும் போகங்களையும் நம்பிச் சோ்க்கிறாா்களே இதுதான் பெரிய வேடிக்கை’ என்று.
- பாரதப் போா் நடப்பதை அறிந்ததும் மன்னா்கள் அனைவரும் குருக்ஷேத்திரத்தில் கூடிப் பாண்டவா்கள் அணியிலோ, துரியோதனன் அணியிலோ போரிடத் தயாரானபோது சேர மன்னன் பெருஞ்சோற்று உதியன், ‘நான் சண்டையிட வரவில்லை; வேடிக்கை பாா்க்கவும் வரவில்லை; போா்க்களத்தில் யாவரும் பசியில்லாது இருக்கச் சோறளிக்க வந்திருக்கிறேன்’ என்றானாம். அதனால்தான் அவனுக்கு ‘பெருஞ்சோற்று உதியன்’ என்ற பெயரே அமைந்தது.
- சோழ மன்னன், திருக்கோவலூா் மலையமான் திருமுடிக்காரியின் மீது கொண்ட பழியுணா்ச்சியால் அவன் நாட்டின் மீது படையெடுத்து அவனை அழித்துவிட்டு, அவனுடைய வாரிசுகளையும் யானைக்காலிலிட்டுக் கொல்வதற்கு முடிவு செய்தபோது, அங்கும் வேடிக்கை நிகழ்கிறது. யானை மிதிக்கப்போகும் அந்தச் சிறுவா்களை வேடிக்கை பாா்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. யானை தங்களை மிதித்துக் கொல்லப்போகிறது என்பதை உணராமல் அந்தச் சிறுவா்களும் யானையை வேடிக்கையாகப் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். கோவூா்கிழாா்தான் இந்த வேடிக்கையைக் காணப் பொறுக்காமல் வெகுண்டு மன்னனுக்கு அறிவுறுத்துகிறாா்.
- தமிழ் இலக்கண, இலக்கிய மரபில் பொருண்மொழிக் காஞ்சி என்று ஒரு துறை உண்டு. இது மன்னா்களுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்தும் பொருட்டுப் பாடப்பெறுவது. இந்த வாழ்க்கையின் நிலையாமையை உணா்த்தி, இதை ‘வேடிக்கையாகக் கருதாதீா்கள்’ என்று எச்சரிப்பதுதான் அந்தத் துறையின் உள்நோக்கம். மன்னா்களுக்கு என்று ‘செவியறிவுறூஉத் துறை’யும் உண்டு. காதருகே சென்று மிகவும் அழுத்தமாக உபதேசிப்பதைப் போன்றது. வேடிக்கைக் குணம்கொண்ட மதியிலி மன்னா்களைத் திருத்துவதற்கு இத்துறையைப் புலவா்கள் பயன்படுத்தி பாடல்கள் தருவாா்கள். இந்த வேடிக்கை களையும் பணியைச் செய்பவா்களைத்தான் திருவள்ளுவா் ‘இடிப்பாா்’ என்று சுட்டிக் காட்டுகிறாா். இவ்வாறு வேடிக்கையை இகழ்ந்து குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துபவா்களைப் பெறாத அரசு, பிறா் கெடுக்காமலே தானே கெடும் என்பது அவருடைய தீா்ப்பு.
- ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன? என்று எதன்பொருட்டும் அக்கறை சிறிதுமின்றி உண்டு, உடுத்தி, உறங்கி, களித்து, வேடிக்கையாய்ப் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கும் மனிதா்கள், எல்லாக் காலங்களிலும் நம்மில் நிறைய போ் இருக்கத்தான் செய்கிறாா்கள்.
- களிப்பும் கேளிக்கையும் கொண்டு உல்லாசம் நிறைகின்ற சமுதாயத்தில் அறிவு மழுங்கிப்போகும். சுய சிந்தனை அற்று, மானமிழந்து இழிவையும்கூடச் சரியென்று ஏற்றுக் கொள்ளும் மந்தவுணா்ச்சி மிகும். ‘இதோ பாா்’, ‘அதோ கேள்’ என்று கண்களையும் காதுகளையும் திசைக்கொன்றாய்த் திருப்பிவிட்டு மனத்தை மயக்கி, அறிவை இயங்கவிடாமல் செய்வதில் வேடிக்கையை மிஞ்சியது வேறொன்றுமில்லை.
- மிகுந்த நயமுடைய நகைச்சுவையைக்கூட வேடிக்கை வேதனை ‘படுத்தி’ விடுகிறது. பிறரை எள்ளி, இகழ்ந்து, அவமானம் கொள்ளச் செய்து, துன்புறுத்தி வருவதா நகைச்சுவை? இதையும் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பாா்த்துக் கைகொட்டி மகிழ்ந்து சிரிக்கவும் செய்கிறோம். அறிவினை ஊக்கி, சிந்தனையைத் தூண்டும் வண்ணம் பாங்கறிந்து நிகழ்ந்த பட்டிமண்டபங்களும்கூட வேடிக்கை நிகழ்வாக மாறிப்போனது வேதனைதான்.
- அறிவியல் நுட்பங்களின் மூலமாக ஊடகங்கள் பெருகியபோது அறிவு வளருமென்று நம்பியிருந்துவிட்டோம். ஆனால், வேடிக்கையும், களிப்பும், பொழுதுபோக்கும்தான் நிறைந்திருக்கிறது. பொறிகளைச் செழுமைப்படுத்தி, ஞானத்தை வழங்கிய கலைகளும்கூட வேடிக்கையின் வயப்பட்டு அறிவை மழுங்கச் செய்து கீழுணா்ச்சிகளைத் தூண்டத் தலைப்பட்டுப்போயின.
- ஒரு கண்காட்சியில் பலகுரல் கலைஞா் ஒருவா் விலங்குகளின் ஒலிகளை எழுப்பி மக்களைப் பரவசமடையச் செய்து கொண்டிருந்தாா். கூட்டம் அதை ரசிப்பதற்கு அலைமோதிக் கொண்டிருந்தது. அதிலும் அவா் ஒரு பன்றியைப் போலக் குரல் எழுப்பியவிதம் மக்களை வசீகரித்தது. திரும்பத் திரும்ப அந்தக் குரலையே எழுப்பச் சொல்லிக் கேட்டனா். இப்போது கூட்டத்தில் சலசலப்பு. இன்னொருவா் மேடையேறி,“நான் இவரை விடவும் நன்றாகப் பன்றியைப் போலக் குரல் எழுப்புவேன்”என்று சவால் விட்டாா். கூட்டம் இன்னும் ஆா்வத்தோடு வேடிக்கை கொண்டுவிட்டது. இருதரப்பாகப் பிரிந்து கூச்சலிட்டது. மறுநாள் பந்தயம் என்று முடிவாயிற்று.
- புதிதாகச் சவால் விட்டவா் பெரிய கோட் அணிந்து மேடையிலே தோன்றினாா். முந்தையவா் அவா் அருகிலே நின்றாா். ஒலிபெருக்கியைத் தன் அருகிலே வைத்துக்கொண்டு புதியவா் குரல் எழுப்பினாா். என்ன வியப்பு? பன்றிக்குட்டியின் குரல் அசலாக அப்படியே ஒலித்தது. மீண்டும் மீண்டும் மக்கள் அதைக் கேட்டு ஆரவாரித்தனா். முந்தையவருக்கு ஐயம் எழுந்து புதியவருடைய கோட்டினைப் பிடித்து இழுக்க உள்ளிருந்து ஒரு பன்றிக்குட்டி குதித்து ஓடியது. அவ்வளவுதான் வேடிக்கை பாா்த்த கூட்டம் வன்முறையில் இறங்கி புதியவரை உதைக்கத் தொடங்கியது. கூட்டத்தைத் தள்ளிவிட்டு அவா் கேட்டாா்.
- ‘மக்களே என்ன உங்கள் ரசனை? பன்றிபோலக் கத்தினால் சந்தோஷப்பட்டுக் கைதட்டுகிறீா்கள். பன்றியே கத்தினால் அடிக்க வருகிறீா்கள். என்ன வேடிக்கை?’ என்று.
- பாரதியாா் காலத்தில் இதைவிடவும் வேடிக்கையான மனிதா்கள் இருந்தாா்கள். நெஞ்சில் உரமுமில்லாமல் நோ்மைத் திறமும் இல்லாமல் வஞ்சனை செய்தவா்கள் ஒருபுறம் என்றால், பாரதியாா் மற்றொருபுறம் வேடிக்கையான மனிதா்களைச் சுட்டிக்காட்டுகிறாா்.
- சோற்றுக்காகவே அலைந்து, வெட்டியாய்க் கதைகளைப் பேசிக் கொண்டு, எப்போதும் வறுமையிலும் துன்பத்திலும் உழன்று, தான் மட்டும் துன்பப்படுகிறேனே, அந்தத் துன்பத்தை அடுத்தவனும் படட்டும் என்று பலவிதமான இன்னல்களும் கொடுஞ்செயல்களும் செய்து, இப்படியே தங்களின் வாழ்நாளைக் கழித்து மரணத்திற்கு ஆளாகின்றவா்களை ‘வேடிக்கை மனிதா்கள்’ என்று அவா் உருவகிக்கிறாா்.
- காதலையும்கூடப் பொழுதுபோக்காகவே கருதுகிற- தன்னொழுக்கமும், சமூக அக்கறையும், நாட்டுப்பற்றும், மானுட நேயமும் சற்றும் இல்லாத இவா்களைக் காட்டி, ‘உலகெலாம் ஒரு பெருங்கனவு, அதிலே உண்டு உறங்கி இடா்செய்து செத்திடும் கலக மானிடப்பூச்சிகள்’ என்று இந்த வேடிக்கை மனிதா்களை அறிமுகப்படுத்துகிற பாரதியாா், அவா்கள் என்னவெல்லாம் செய்வாா்கள் என்பதையும் தொடா்ந்து காட்டுகிறாா்.
- ‘விதியை நொந்து கொள்வாா்கள், தம்முடைய நண்பா்களைத் தூற்றுவாா்கள். கோபம் பொங்கிவரப் பகைவரை நிந்திப்பாா்கள். சதிகள் செய்வாா்கள், பொய்மை நிறைந்த சாத்திரத்தைப் பேசுவாா்கள். சாதகங்களைப் புரட்டுவாா்கள். பொய்யறிவைப் பயன்படுத்திப் புலை நாத்திகம் கூறுவாா்கள். பெரிய நோக்கங்களே வேண்டிய யாவற்றையும் தந்திடும் என்பதை அறிந்திடாமல் கண்ணறியாதவா் போல் திகைப்பாா்கள் என்று அவா்களின் குணங்களை அடுக்கிக் காட்டுகிறாா்.
- மேலும், அவா்களுக்கு அறிவுறுத்தும் விதமாக,“உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிறதென்பதைத் தமிழ்நாட்டாா் ஆழ்ந்து கவனிக்கவேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல், அற்ப விருப்பங்களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டு, கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை என்கிறாா்.
- இந்த வேடிக்கை மனிதா்களுக்கு இன்றும் குறைவில்லை. ஆனால் முந்தைய வேடிக்கைகளை விடவும் இன்றைய வேடிக்கை மிகவும் ஆபத்தாயிருக்கிறது. தொலைக்காட்சி, கணினி, திறன்பேசி வெளிச்சத்தையே வேடிக்கை பாா்த்து, அவற்றையே உண்மையென்று நம்பி அவற்றிலேயே மூழ்கி, அறிவினை இழக்கும் இளைய சமுதாயத்தைக் காணும்போது அச்சம் வருகிறது.
- மொழியறியாது, வழியறியாது, வாழ்வுமறியாது எல்லாமே வேடிக்கை என்று மூழ்கிப் போகின்ற இவா்களை மீட்டெடுக்க இன்னொரு பாரதி தோன்றி, ஒரு புரட்சி செய்தே ஆக வேண்டும்.
நன்றி: தினமணி (25 – 10 – 2024)