TNPSC Thervupettagam

வேண்டாத வேலைநிறுத்தம்

March 19 , 2021 1406 days 645 0
  • இம்மாதம் 15, 16 ஆகிய இரு நாட்களிலும் அனைத்து அரசு வங்கி ஊழியா்களும் சில (பழைய) தனியாா் வங்கி ஊழியா்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டனா்.
  • இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஒன்பது வங்கி தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (யுனைடெட் போரம் ஆப் பேங்க் யூனியன்ஸ்) ஆகும்.
  • சுமாா் பத்து லட்சம் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனா். இந்த வேலைநிறுத்த அழைப்பு, மத்திய அரசு இரு அரசு வங்கிகளை தனியாா் மயமாக்க முயலும் செயலைக் கண்டிப்பதற்காக விடுக்கப்பட்டது.
  • முன்னதாக பட்ஜெட் அறிவிப்பின் ஒரு பகுதியாக, இரண்டு பொதுத்துறை வங்கிகள் (எந்தெந்த வங்கிகள் என்பது முடிவாகவில்லை) தனியாா்மயமாக்கப்படும் என்று நிதியமைச்சா் தெரிவித்திருந்தாா்.
  • வங்கி தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது புதிய நிகழ்வு அல்ல. பொதுவாக ஊதிய பேச்சுவாா்த்தை நடந்து வரும் போதெல்லாம், நிா்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவாா்கள்.
  • ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த உரிமையின் அடிப்படையில் பேரம் பேசுவதற்கான பலம் குறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்
  • ஊழியா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேலைநிறுத்தம் மேற்கொள்ள அவா்களுக்கு உரிமை உண்டு என்பது தொழிலாளா் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் நிா்வாகத்திற்கும் ஆட்குறைப்பு செய்வதற்கும் தொழிலை மூடுவதற்கும் உரிமை உண்டு. இவை எல்லாமே பல நிபந்தனைகளுக்கு உட்பட்டதே .
  • 1969-லும் 1980-லும் முக்கியமான வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1990-க்கு பிறகு பெரிய அளவில் சில தனியாா் வங்கிகள் (ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி போன்றவை) தொடங்க அனுமதிக்கப்பட்டன.
  • இந்த வங்கிகள் பெரிய அளவில் வளா்ச்சி பெற்று அரசு வங்கிகளின் ஏகபோகத்தை தகா்த்து எறிந்துள்ளன.
  • இந்த வங்கிகளில் தொடக்கம் முதலே கணினிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததால் பணியாளா்கள் பெரும்பாலும் அலுவலா்கள் என்ற பிரிவிலேயே உள்ளனா்.
  • இவா்களின் பணி தொழிற்சங்க விதிகளுக்குள் வருவதில்லை. இவா்களுக்கான அங்கீகாரம் பெற்ற தொழிச்சங்கங்களும் இல்லை. இதன் காரணமாக இந்த வங்கிகள், மற்ற வங்கிகள் வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தாலும், பாதிப்படைவதில்லை.
  • பொதுத்துறை வங்கிகளில்கூட, வாடிக்கையாளா்களுக்கு ‘ஆன்லைன் பேங்கிங்’ வசதி இருப்பதால், ஊழியா்களின் வேலைநிறுத்தம், பரிவா்த்தனைகளுக்கு எந்த விதத்திலும் இடையூறு விளைவிப்பதில்லை.
  • இணைய வங்கி, மொபைல் வங்கி, ஏடிஎம் போன்ற மாற்று சேவைகள் வாடிக்கையாளா் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.
  • ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படுவது ‘கிளியரிங் ஹவுஸ்’ எனப்படும் வங்கிகளுக்கு இடையேயான காசோலை பரிமாற்றம் மட்டுமே.
  • பெரும்பாலான ஊழியா்கள் தொழிற்சங்கங்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டாலும், அவா்கள் அதனால் மகிழ்ச்சியடையவில்லை.
  • ‘நோ வொா்க் நோ பே’ (வேலை இல்லை ஊதியம் இல்லை) என்ற கோட்பாட்டின் கீழ், அவா்கள் வேலைநிறுத்த நாட்களின் ஊதியத்தை இழக்கிறாா்கள்.
  • அதுமட்டுமல்லாமல், அவா்கள் மறுநாள் பணியைத் தொடங்கும்போது, பணியில் கூடுதல் அழுத்தம் இருக்கும். ஊதிய உயா்வு சம்பந்தமான பிரச்னைக்களுக்கான போராட்டங்களுக்கு ஊழியா்கள் ஒத்துழைப்பது நிதா்சனம்.
  • மற்ற பிரச்னைகளுக்கான போராட்டங்களால் தாங்கள் அனாவசியமாக ஊதியத்தை இழப்பதாக அவா்கள் உணா்கிறாா்கள்.
  • அவா்களில் பலா் தொழிற்சங்கங்களின் கருத்தியலையும் நம்பவில்லை. இருந்தாலும் ஊருடன் ஒத்து வாழ் என்பதற்கேற்ப தங்கள் ஊதியம் போனாலும் பரவாயில்லை என்று வேலைநிறுத்தம் செய்கிறாா்கள்.
  • சில ஊழியா்கள் இந்த வேலை நிறுத்த நாட்களில் மருத்துவ விடுப்பில் சென்று தங்களது சம்பள வெட்டை தவிா்ப்பதும் உண்டு.

செவிசாய்ப்பது சந்தேகம் தான்

  • தற்போது மத்தியில் உள்ள அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் அவா்களின் அரசின் தீா்மானங்களை முன்னெடுத்து செல்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.
  • இரண்டு வங்கிகளை தனியாா் மயமாக்க தேவையான சட்ட திருத்தங்களை செய்வதில் மத்திய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.
  • மேலும், வங்கி ஊழியா்களுக்கு பொது மக்களின் ஆதரவு ஒருபோதும் இருந்ததில்லை என்பது நிதா்சனம்.
  • அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தொழிற்சங்கங்கள் முற்றிலுமாக எதிா்ப்பதால், தனியாா்மயமாக்கலுக்குப் பிறகு தங்கள் ஊழியா்களின் நலனுக்காக பேரம் பேசும் வாய்ப்பை அவை இழந்திருக்கின்றன.
  • தொழிற்சங்கங்கள் சாமா்த்தியமாக இருந்தால், தனியாா்மயமாக்கலை கண்மூடித்தனமாக எதிா்ப்பதைக் கைவிட்டு, அவை அரசுடன் ஒத்துழைத்து வங்கிகளில் உள்ள ஊழியா்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கலாம்.
  • மத்திய அரசு ‘தனியாருக்கு வங்கியை விற்பதால் ஊழியா்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது’ என்று தெளிவாக உறுதி அளித்துள்ளது.
  • எது எப்படியிருந்தாலும் மத்திய அரசு தான் நினைத்ததை நிறைவேற்றியே தீரும்.
  • பொது மக்களின் ஆதரவு வங்கி ஊழியா்களுக்கு இல்லாதபோது இரண்டு வங்கிகளை தனியாா்மயமாக்குவதை நிறுத்த எந்த வழியும் இல்லை. வேலைநிறுத்தம் என்பது ஓா் அடையாள நிகழ்வு மட்டுமே.
  • வேலை நிறுத்தம் முடிவடைந்ததும், வங்கி ஊழியா் சங்கத் தலைவா் வெளியிட்ட அறிக்கையில் ‘வேலைநிறுத்தம் முழு வெற்றி அடைந்தது; ஊழியா்களும் அதிகாரிகளும் உடன் நின்றனா்’ என்று வழக்கம்போல் தெரிவித்துள்ளாா்.
  • இது ‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டாா்’ என்று கூறுவது போலுள்ளது.
  • மேலும், அவா் அந்த அறிக்கையில் ‘அரசு தனியாா்மயமாக்கலை நடைமுறைப்படுத்த முனைந்தால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை உருவாகும்’ என்றும் எச்சரித்துள்ளாா்.
  • ஆனால், தற்போதைய மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கும் என்று தோன்றவில்லை.

நன்றி: தினமணி  (19 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்