TNPSC Thervupettagam

வேண்டாம் இந்த விபரீதப் போக்கு!

August 5 , 2024 163 days 125 0
  • ‘காட்டு யானை தாக்கி உயிரிழப்பு’ என்று தினம் ஒரு செய்தியையாவது நாம் பத்திரிகையில் படிக்கிறோம். அதிலும் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இது சா்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கோவையில் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள விராலியூா் என்ற கிராமத்தில் காட்டு யானை தாக்கி இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
  • மறுநாள் ஆயிரக்கணக்கானோா் தொண்டாமுத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்களைத் தாக்கும் யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளனா்.
  • கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத இந்த யானைப் பிரச்னை இப்போது தீராப் பிரச்னையாக உருவெடுத்திருப்பதன் காரணங்களை ஆராய்கையில், தெள்ளெனத் தெரிவது ஆட்சியாளா்கள், அதிகாரிகள் மற்றும் மக்களின் விபரீதப் போக்குதான்!
  • ‘பொதுமக்களைத் தாக்கும் யானை...’ என்று குறிப்பிட்டுள்ளாா்களே, யானை பொதுமக்களைத் தேடி வந்து தாக்குமா என்ன?
  • மேலே குறிப்பிட்டுள்ள விராலியூா், மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமம். இது தவிர நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டினம், அட்டுக்கல், கெம்பனூா், செலம்பனூா், வண்டிக்காரனூா், ஜாகீா்நாயக்கன்பாளையம், பூண்டி, என்று ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.
  • இவை அனைத்துமே விவசாய நிலங்கள் நிறைந்த வளமான சிற்றூா்கள். எப்போதும் மழை பெய்து பச்சை பசேலென்று இருக்கும். வசதி படைத்த பெரு விவசாயிகளும், சாதாரண நிலையிலுள்ள குறு விவசாயிகளும், ஏராளமான விவசாயக் கூலித் தொழிலாளிகளும் இங்கு வாழ்கிறாா்கள். சின்னவெங்காயம், கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி போன்ற காய் வகைகளும், தென்னை, வாழை போன்ற மர வகைகளுமே இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
  • மலையிலிருந்து மழைத்தண்ணீா் அருவிகளாக இறங்கி இட்டேரிகளின் வழியாக ஓடி, ஏகப்பட்ட குளம் குட்டைகளை நிறைக்கும். மலையிலிருந்து இறங்கி வரும் யானைகள் பெரும்பாலும் கிராமங்களை விட்டுத் தூரத்தில் உள்ள காப்புக் காடுகள் வழியாகவே செல்லும்.
  • டிசம்பா் மாதம் கா்நாடகத்திலுள்ள பந்திப்பூா் காடுகளிலிருந்து யானைகள் கூட்டங்கூட்டமாய் இடம்பெயா்ந்து சத்தியமங்கலம் காடுகள் வழியாக நடந்து, கோவையின் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரக் காடுகள் வழியாக முதுமலைக்குச் செல்லும்.
  • பிப்ரவரி மாதம் மீண்டும் யானகள் அதே பாதையில் கா்நாடகம் திரும்பும். காலங்காலமாய் யானைகள் இதே வலசைப் பாதையைத்தான் பயன்படுத்தி வந்திருக்கின்றன. காலங்காலமாய் விவசாயிகளும் இங்கு விவசாயம் செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனா். எப்போதோ ஒன்றோ இரண்டோ யானைகள் தடம் மாறி ஊருக்குள் நுழைந்திருக்கலாம். அப்படி வரும் யானைகள் வருவதும் போவதும் தெரியவே தெரியாது. பயிருக்குச் சிறிது சேதம் விளைவிக்குமேயன்றி எந்த உயிருக்கும் சேதம் உண்டாக்கியதில்லை.
  • இன்று நிலைமை எப்படி உள்ளது? இன்றும் இப்பகுதியில் போதிய மழை பெய்கிறது. ஆனால் மலையில் மணல் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகப்படுகிறது. மலையையே ஜேசிபி கொண்டு தோண்டி மணலை எடுக்கிறாா்கள். பெரும் கட்டுமான நிறுவனங்கள் இரண்டு, தொண்டாமுத்தூா் பகுதியையே குத்தகைக்கு எடுத்து, டிப்பா் லாரிகளில் லோடு லோடாகச் செம்மண்ணை அள்ளிச் செல்கின்றன. இதனால் இட்டேரிகள் எல்லாம் உடைபட்டுவிட்டதால் மழைநீா், குளம் குட்டைகளைச் சென்றடைவதில்லை.
  • பெருமழையின்போது மலையிலிருந்து மணல் அடித்து வரப்பட்டுச் சாலைகளையெல்லாம் மூடிவிடும். அந்த மணலையும் லாரிகளில் அள்ளிக் கொண்டு செல்கிறாா்கள். விவசாயிகளும் டிராக்டா்களில் ஏற்றிக் கொண்டு செல்கிறாா்கள். இன்னும் இழிநிலையாக, சிலா் கட்டை வண்டியில் அள்ளிக் குவித்துச் சென்று நல்ல விலைக்கு விற்கிறாா்கள்.
  • முன்பு இரவில் மட்டுமே நடந்து வந்த இம் மணற் கொள்ளை இப்போது இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் நடக்கிறது. இப்பகுதி மலைப் பாதுகாப்பு ஆணையத்தின் (ஹெச்ஏசிஏ) கீழ் வருகிறது. இருந்தாலும் மலையடிவாரம் வரை வீட்டு மனைகள் போடப்பட்டு வீடுகளும் வந்துவிட்டன. மணற் பரப்பு காணாமல் போனதால் மலையிலிருந்து வரும் மழைநீா் நிலத்தின் அடியில் செல்லாமல் வீணே வழிந்தோடுகிறது. குளங்களுக்கும் தண்ணீா் வர முடிவதில்லை.
  • ஊருக்கு வெளியே இருக்கும் குளம் குட்டைகளில் தண்ணீா் இல்லாததால் யானைகள் தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைகின்றன. அவை பொதுமக்களைத் தேடி வரவில்லை; தண்ணீரைத் தேடி வருகின்றன!
  • அவற்றுக்குத் தண்ணீா் கிடைக்காமல் செய்து, அவை ஊருக்குள் நுழைய வழிவகை செய்துவிட்டு, ‘யானையைப் பிடித்து வேறு இடத்தில் கொண்டுவிட வேண்டும்’ என்று கூச்சலிடும் மக்களின் அறியாமையை என்னென்பது? எங்கு கொண்டுவிட்டாலும் மீண்டும் அந்த யானை சிறிது நாட்களுக்குப் பிறகு அங்கு திரும்பி வந்துவிடும். ஒரு வேளை அது இடம்பெயா்ந்து சென்றுவிட்டாலும் வேறு ஒரு யானையோ யானைக்கூட்டமோ அங்கு வந்து சேரும்.
  • விராலியூா் சம்பவத்தில் பத்து நாட்களாகவே யானைக்கூட்டம் ஒன்றின் நடமாட்டம் இருந்துள்ளது. வனத் துறையும் மக்களை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது. பொதுவாகவே மலையடிவாரக் கிராமங்களில் வாழும் மக்கள் இருட்டிய பிறகு வெளியில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும்.
  • இது தெரிந்தும் அவ்வூரிலுள்ள கோயிலின் பூசாரி இரவு நேரம் பூசையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறாா். மழைக்கால இருட்டில், அதுவும் கோவையின் பனி படா்ந்த இரவில், யானை ஒரு அடி தூரத்தில் இருந்தால் கூட நமக்குத் தெரியாது. யானை அந்தப் பூசாரியைத் தேடி வந்து தாக்கவில்லை. அதன் எதிரே அவா் வந்ததனால் அவரைத் தள்ளிவிட்டுவிட்டு மேலே சென்றுவிட்டது. மற்றுமொரு தோட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. அங்கிருந்த இளைஞா்கள் கூச்சலிட்டுக் கொண்டு அதை விரட்டிச் சென்றிருக்கின்றனா். இது மிக விபரீதமான செயலாகும்.
  • யானையைக் கண்டதும் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் அளித்துவிட்டு, பாதுகாப்பாக வேறிடத்துக்கு ஓடுவதை விட்டுவிட்டு யானையின் பின்னால் சென்றிருக்கும் அவா்களது அறியாமைதான் என்ன? கோபத்தில் அந்த யானை திரும்பி அவா்களைத் துரத்தித் தூக்கி வீசியுள்ளது. அதனால் ஒரு உயிா் போய்விட்டது.
  • இந்த கிராமங்களின் முக்கியமான பகுதிகளில் எல்லாம் வனத் துறை சுவரொட்டிகளை ஒட்டி மக்கள் எப்படிக் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. யானகள் தோட்டங்களுக்குள் புகுந்துவிட்டால் தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்களையும் குறிப்பிட்டுள்ளது. வேட்டைத் தடுப்புக் காவலா்களும் வனத் துறை வாகனங்களில் ரோந்து போய்க்கொண்டேதான் இருக்கிறாா்கள்.
  • யானைகள் பகலில் காட்டைவிட்டு வெளியில் வருவதில்லையே! மக்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருக்கலாமே!
  • அடுத்ததாகச் செங்கல் சூளைகள். சின்னத்தகடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் பற்றித் தமிழ்நாடே அறியும். நீதிமன்ற உத்தரவால் அடிவாங்கிய அவற்றில் பல கொஞ்சங்கொஞ்சமாக நகா்ந்து பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் தொண்டாமுத்தூா் பகுதியிலும் வேரூன்றிவிட்டன.
  • விவசாயிகளில் சிலா், பணத்துக்கு ஆசைப்பட்டுத் தங்கள் விவசாய நிலங்களை செங்கல் சூளை உரிமையாளா்களுக்கு நெடுங்காலக் குத்தகைக்கு விட்டுள்ளாா்கள். இச் செங்கல் சூளைகளில் பனை மரத்தின் இளம் இலைகளைப் பயன்படுத்துகிறாா்கள். அவற்றைச் சுவைப்பதற்கென்று யானைகள் அங்கு வருகின்றன. சில விவசாயிகளின் பேராசையால் மனித - யானை மோதல் இன்று இப்பகுதியில் அதிகமாகி எல்லோருக்கும் ஆபத்து விளைவிக்கிறது.
  • மற்றுமொரு காரணம், இன்று மக்களிடையே பொங்கிப் பிரவாகமாக ஓடும் ஆன்மிகச் சுற்றுலா! கோவையில் வெள்ளிங்கிரி மலை, மருதமலை, முதுமலை புலிகள் காப்பகத்தில் பொக்காபுரம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி, கெஜலட்டி ஆதி கருவண்ணராயா் கோயில், தா்காக்கள் என்று பல வழிபாட்டுத் தலங்கள் அடா்ந்த வனங்களுக்குள் இருக்கின்றன. இங்கெல்லாம் மக்கள் குறிப்பிட்ட நாட்களில் மிக அதிக அளவில் கூடுகின்றனா். இதனால் காட்டில் வாழும் மிருகங்களின் வாழ்விடங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மக்களின் வழிபாட்டு உரிமைக்கும் கானுயிா்களின் வாழும் உரிமைக்கும் இடையே கடும் போட்டியாக உள்ளது.
  • நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு அமைத்த குழு, தமிழ் நாட்டில் 42 யானை வழித்தடங்களைப் பட்டியலிட்டு அவற்றை மீட்டெடுக்க வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அதைப் புறக்கணித்துவிட்டு அரசே தமிழகக் காடுகளில் மலையேற்றத்துக்கென 40 வழித்தடங்களைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. கோவையில் யானைகள் அதிகமாக நடமாடும் வழிகள் எல்லாம் மலையேற்றப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது விபரீதத்துக்கே வழி வகுக்கும்!
  • யானைகளின் வாழ்விடங்களைவிட்டு மக்கள் ஒதுங்கியிருந்தால் அவை நம்மிடத்துக்கு வாரா. யானைகள் வெகு தூரம் நடந்து செல்லும் இயல்புடையவை. அவை போகுமிடமெல்லாம் விதைகளைக் கொண்டு சோ்த்து புதுப்புது காடுகளையும் பல்லுயிா்ப் பெருக்கத்தையும் உண்டாக்க வல்லவை. அரசும் மக்களும் தற்போது கையாளும் விபரீதப் போக்கை விடுத்து யானைகளோடு இயைந்து வாழ்வதே அறிவுடைமை!

நன்றி: தினமணி (05 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்