வேண்டாம் விபரீத யோசனை!
- இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது. பசுமைப் புரட்சிக்கு உதவிய ரசாயன உரங்களில் இருந்து இயற்கை வேளாண்மைக்கு மாறும் விவசாயிகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.20,000 மானியம் வழங்க இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருக்கிறாா்.
- வேளாண் அமைச்சரின் பரிந்துரையான ரூ.20,000-த்தை நிதி அமைச்சகம் நிராகரித்திருக்கிறது. இயற்கை வேளாண்மைக்குத் தற்போது வழங்கப்படும் ரூ.15,000 மானியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. நிதி அமைச்சகம் மட்டுமல்ல, வேளாண்மை தொடா்பான நிபுணா்களும் விவசாயிகளும்கூட இயற்கை வேளாண்மை குறித்து நம்பிக்கை தெரிவிக்கத் தயங்குகிறாா்கள். அதில் தவறு காண முடியவில்லை.
- இடுபொருள்கள் வாங்குவதற்கு பணமில்லாமல் விவசாயிகள் வரலாற்று ரீதியாகவே தவித்து வந்திருக்கின்றனா். அதனால்தான், அவா்கள் பல்வேறு ஊடுபயிா்கள் மூலம் வேளாண்மைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, மண் வளத்தைப் பாதுகாத்தனா்.
- நைட்ரஜன் வழங்கும் பருப்பு வகைகளை ஊடுபயிா்களாகப் பயிரிட்டனா். மாட்டுச் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை இயற்கை உரங்களாகப் பயன்படுத்தினா். வேப்பம் பிண்ணாக்கு போன்றவை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்பட்டன. அவையெல்லாம் அன்றைய விவசாயத் தேவைக்கு போதுமானவையாக இருந்தன என்பதில் ஐயப்பாடில்லை.
- மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும், தடுப்பூசிகளும் 20-ஆம் நூற்றாண்டில் மக்கள்தொகைப் பெருக்கத்தை ஏற்படுத்தின. பாரதியாா் காலத்தில் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை, இப்போது 100 ஆண்டுகளில் 140 கோடியாக அதிகரித்திருப்பதை நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும். குதித்து எழும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இயற்கை வேளாண்மையால் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை.
- இந்தியா விடுதலை பெற்ற பிறகு வேளாண் துறை குறித்த பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டன. பாசனப் பரப்பை விரிவாக்குதல், அணைகள் மூலம் தண்ணீரை சேமித்து வைத்து கால்வாய்கள் மூலம் பாசன வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வேளாண் உற்பத்தி அதிகரிக்கவில்லை. 1950-களில் உள்நாட்டு உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், அமெரிக்காவிடம் இருந்து இலவச உதவியாக கோதுமையும், பால் பவுடரும் இரந்து பெறும் நிலைமை ஏற்பட்டது. உணவுக்கான உதவி ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது.
- 1960-களில் நிலைமை மேலும் மோசமானது. 1965-1966 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால் இந்தியா மிகப் பெரிய வறட்சியை எதிா்கொண்டது. சொல்லப்போனால், உணவுப் பஞ்சமும், பட்டினிச் சாவும் இந்தியாவின் அடையாளமாகவே மாறியிருந்தது. அமெரிக்காவிடம் மேலும் மேலும், தானிய உதவி கேட்டு அமைச்சா்களும், அதிகாரிகளும் வாஷிங்டனுக்குப் பறந்தனா்.
- இந்தியா என்பது அடிப்படையில் ஒரு நாடாக இயங்கும் தன்மையில்லாதது என்றும், அதனால் அதற்கு உணவு உதவி வழங்குவது வீண் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே பேசினாா்கள். இந்தியாவின் பட்டினியை அகற்றுவதற்கு பதிலாக, அந்த உதவியை வேறு நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஊடகங்களில் எழுதினாா்கள்.
- அப்படிப்பட்ட கட்டத்தில்தான் நவீன வேளாண் தொழில்நுட்பம் எம்.எஸ்.சுவாமிநாதன் வடிவத்தில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. அதிக மகசூல் வழங்கும் வீரிய விதைகள், ரசாயன உரங்கள், ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. பசுமைப் புரட்சிக்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்த கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டன; விவசாய கடனுதவிகள் வழங்கப்பட்டன; முறைப்படுத்திய சந்தைகள் நிறுவப்பட்டன.
- 1970-களில் பிரதமா் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட பசுமைப் புரட்சி, உணவு உற்பத்தியைப் படிப்படியாக அதிகரித்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. இன்று சா்வதேச அளவில் உணவு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயா்ந்திருக்கிறது.
- பசுமைப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னால் சில எதிா்வினைகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் இல்லை. அதிகரித்த உரத் தேவை, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு இரண்டும் குறிப்பிடத் தக்கவை. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீா் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது. அதிகரித்த நீா்ப் பாசனம் காரணமாக உப்புத் தன்மை ஏற்படுகிறது. விவசாய நிலங்கள் மலடுப்பட்டு, ரசாயன உரங்கள் இல்லாமல் பயிரிட முடியாத நிலைமை உருவானதும்கூட பக்கவிளைவுதான். அதை மறுப்பதற்கில்லை.
- ஆனால், நாம் ஒன்றை மறந்துவிட முடியாது. நமது உணவுத் தேவைக்காக வெளிநாடுகளின் உதவியை நாடி இருந்ததையும், அதனால் பட்ட அவமானத்தையும், அமெரிக்காவில் இருந்து கப்பலில் கோதுமை எப்போது வரும் என்று காத்திருந்த காலத்தையும் நினைவில் இருந்து அழித்துவிட முடியாது. அப்படி இருக்கும்போது, பின்னடைவை ஏற்படுத்திய பழைய விவசாய முறைக்கே திரும்புவது என்பது புத்திசாலித்தனமாக இருக்காது.
- இயற்கை வேளாண்மை மூலம் சிறிய அளவில் பெரிய மகசூல் பெற முடியும். ஆனால், அதிகரித்த உணவு உற்பத்திக்கு இயற்கை விவசாயம் பயன்படாது என்பதற்கு அண்டை நாடான இலங்கையின் சமீபத்திய முன்னுதாரணம் இருக்கிறது.
- இன்றைய நிலையில் இயற்கை வேளாண்மை என்பதை பணக்காரா்களின் தேவைக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே தவிர, அதையே முன்னிலைப்படுத்துவது விபரீதத்துக்கு வழிகோலும்.
நன்றி: தினமணி (28 – 09 – 2024)