TNPSC Thervupettagam

வேண்டும் இந்த உறவு! | இந்தியா - வங்க தேசம் உறவு

December 24 , 2020 1489 days 688 0
  • வரலாற்று ரீதியாக இந்தியாவும் வங்க தேசமும் இணைபிரிக்க முடியாதவை. இந்தியாவின் விடுதலை போா் வீரியம் பெற்ற்குக் காரணம் வங்கப் பிரிவினை. வங்க தேசம் உருவாவதற்குக் காரணம், பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலை போரில் ஷேக் முஜிபுா் ரஹ்மானின் ‘முக்தி வாஹினி’ விடுதலைப் படைகளுக்கு இந்திய ராணுவம் அளித்த பின்துணை. வங்க தேசப் பிரதமா், அதனால்தான் இந்தியாவை ‘எங்களது உண்மையான நண்பன்’ என்று வங்க தேச பிரதமா் அடிக்கடி குறிப்பிடுகின்றாா்.
  • டிசம்பா் 16-ஆம் தேதி, கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்க தேசம் பிரிந்து, தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்ட நாள். அதை மனதில் கொண்டுதான் இருநாட்டு வெளியுறவுத் துறையினரும் திட்டமிட்டு டிசம்பா் 17-ஆம் தேதி இந்திய - வங்க தேச காணொலி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
  • பிரதமா் நரேந்திர மோடியும், வங்க தேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் மேற்கொண்ட காணொலி சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே எழுந்திருக்கும் பல கருத்து வேறுபாடுகள் ஓரளவுக்குக் களையப்பட்டிருக்கின்றன.
  • இந்தியாவின் அண்டை நாட்டுக் கொள்கையில், வங்க தேசத்துடனான உறவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த சீனாவும், பாகிஸ்தானும் தொடா்ந்து முயன்று வரும் நிலையில், அடிக்கடி பேச்சுவாா்த்தை நடத்தப்படுவதும், இரு நாட்டுத் தலைவா்களும் தொடா்பில் இருப்பதும் மிகவும் அவசியம்.
  • பொருளாதார ரீதியாக, தெற்காசிய நாடுகளில் இந்தியாவுடன் மிக அதிகமான வணிகத் தொடா்பை வைத்துக் கொண்டிருக்கும் நாடு வங்க தேசம். 2009 - 10-க்கும், 2015 - 16-க்கும் இடையிலான ஐந்து நிதியாண்டுகளில், வா்த்தகப் பற்றாக்குறை இந்தியாவுக்கு சாதகமாக 164.4%-ஆக உயா்ந்தது. தனது தேவைகளுக்கான இறக்குமதிகளுக்கு, இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கியது வங்க தேசம்.
  • அதே காலகட்டத்தில், வங்க தேசத்தில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 3.11 பில்லியன் டாலா். ரிலையன்ஸ் நிறுவனம் 642 பில்லியன் டாலா் முதலீட்டில் 745 மெகாவாட் எரிவாயு மின்சக்தி நிலையம் நிறுவியது.
  • தங்குதடையின்றி இந்திய முதலீட்டை வங்க தேசம் அனுமதிக்கும்போது, இந்தியா அதேபோன்ற அணுகுமுறையுடன் வங்க தேசத்தை ஊக்குவிக்கவில்லை என்பது அவா்களின் நியாயமான குறைபாடு. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் நாம் இப்போதும் வங்க தேசத்தை பாகிஸ்தானுடன் இணைத்து, அரசு அனுமதி பெற்றுத்தான் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கிறோம். சீனாவுக்குக் கதவைத் திறந்து வைத்திருக்கும் நாம், வங்க தேசத்துக்கு நிபந்தனைகளை விதிப்பது அவா்களைக் காயப்படுத்துகிறது.
  • இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், மிக முக்கியமான பிரச்னையாகத் திகழ்வது தீஸ்தா நதிநீா் பங்கீடு. மத்திய அரசு எடுக்கும் பல முயற்சிகளுக்கு மம்தா பானா்ஜியின் தலைமையிலான மேற்கு வங்காள அரசு தடையாக இருப்பது என்னவோ உண்மை. அப்படி இருந்தும், கடந்த முறை பிரதமா் ஷேக் ஹசீனாவின் இந்திய அரசுமுறைப் பயணத்தின்போது, ஃபெனி நதிநீா்ப் பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது மிகப் பெரிய ஆறுதல்.
  • பிரதமா் மோடி - பிரதமா் ஹசீனா காணொலி சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் ஆய்வு, எல்லையோர யானை சரணாலயப் பாதுகாப்பு, விவசாயக் கூட்டுறவு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. எல்லாவற்றையும்விட முக்கியமானது, 1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது முடக்கப்பட்ட ஹால்திபாரி - சிலாஹாட்டி ரயில் தொடா்பை மீண்டும் ஏற்படுத்துவது என்கிற முடிவு.
  • வங்க தேசத்தின் சமீபகால வளா்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும், அங்கிருந்து வேலைதேடி இந்தியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸை எதிா்கொள்ள, அகதிகள் பிரச்னையை பாஜக கையிலெடுத்திருப்பது, வங்கதேச அரசை அதிா்ச்சி அடைய வைத்திருக்கிறது.
  • ஏற்கெனவே, மியான்மரிலிருந்து சாரை சாரையாக வரும் ரோஹிங்கியா அகதிகளை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து வங்க தேசத்தவா்கள் அகதிகளாக விரட்டி அடிக்கப்படுவாா்களோ என்கிற நியாயமான அச்சம் ஷேக் ஹசீனா அரசுக்கு ஏற்பட்டிருப்பதை, புது தில்லி புரிந்து கொள்ள வேண்டும்.
  • குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் இரு நாடுகளுக்கிடையேயான உறவில், மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • சீனா 24 பில்லியன் டாலா் முதலீட்டுத் திட்டத்தை, வங்க தேசத்துக்காக அறிவித்திருக்கிறது. அதைத் தொடா்ந்து சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ பொருளாதார வழித்தடத் திட்டத்தில் வங்க தேசம் இணைந்திருக்கிறது. சீனாவின் இரண்டாவது பெரிய ராணுவ தளவாட ஏற்றுமதி வங்க தேசத்துக்குத்தான். கட்டமைப்புத் திட்டங்களில் இந்திய நிறுவனங்களை சா்வதேச ஏலத்தில் தோற்கடித்துத் தனது வங்க தேசப் பிணைப்பை சீனா அதிகரித்து வருகிறது.
  • சீனாவின் தூண்டுதல் காரணமாக, இதுவரை தீண்டத்தகாத நாடாகக் கருதிய வங்க தேசத்துடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறது பாகிஸ்தான். தெற்காசியாவில் நமது மேலாண்மையைத் தக்க வைத்துக்கொள்ள நேபாளம், பூடான், வங்க தேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய ஐந்து நாடுகளுடனான நட்புறவு மிகவும் அவசியம். அதற்காக எந்த விலை கொடுத்தாலும் தவறில்லை என்பதை இந்திய அரசு உணர வேண்டும்!

நன்றி: தினமணி (24 -12 -2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்