TNPSC Thervupettagam

வேண்டும்தான் கடிவாளம் - சட்டப் பிரிவு 124-ஏ

June 10 , 2023 581 days 384 0
  • தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.
  • 22-ஆவது சட்ட ஆணையம் தனது பரிந்துரையை அரசிடம் ஜூன் 2-ஆம் தேதி அளித்தது. தேசத்துரோக சட்டம் என்பது தனித்த ஒரு சட்டம் அல்ல. அது இந்திய தண்டனை சட்டத்தின் (ஐ.பி.சி.) 124-ஏ பிரிவு குறிப்பிடும் நெறிமுறை மட்டுமே.
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இச்சட்டம் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியர்களை அடக்கியாள 1860-இல் மெக்காலே உருவாக்கியதுதான் இந்திய தண்டனை சட்டம். இதில் ராஜதுரோக குற்றச்சாட்டு தொடர்பான சட்டத்திருத்தம் 1870-இல் மேற் கொள்ளப்பட்டது. அந்த சட்டப் பிரிவுதான் 124-ஏ.
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரசு மீது வெறுப்பை உருவாக்கும் வகையில் பேசுவதும் எழுதுவதும் ராஜதுரோகமாகக் கருதப்பட்டது. அதனைச் செய்பவர்களை முன்னறிவிப்பின்றி கைது செய்யவும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் இச்சட்டப் பிரிவு வழி வகுத்தது. பாலகங்காதர திலகர் இருமுறை இச்சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்; சாவர்க்கர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று நாடு கடத்தப்பட்டிருக்கிறார்; மகாத்மா காந்தி,
  • அரவிந்தர், வ.உ.சி. ஆகியோரும் கூட இச்சட்டத்தால் சிறையில் தள்ளப்பட்டவர்களே. இச்சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பலமுறை வழக்குகள் நடந்துள்ளன.
  • நாடு சுதந்திரம் பெற்றபோது, நமக்கான சட்டங்களை நாமே உருவாக்கிக் கொண்டாலும், அவற்றில் பல, பிரிட்டிஷ் அரசு நடைமுறைப்படுத்திய சட்டங்களின் தொடர்ச்சியாகவே அமைந்திருக்கின்றன. இந்திய தண்டனை சட்டம் அவற்றுள் ஒன்று. இந்திய அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பாக பல விவாதங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் கால சட்டங்கள் சில, திருத்தங்களுடன் ஏற்கப்பட்டன.
  • அரசியல் நிர்ணய சபையில் கருத்துரிமை தொடர்பான விவாதத்தின்போது, இந்திய தண்டனை சட்டத்தின் 124-ஏ பிரிவை கடுமையாக எதிர்த்தார் கே.எம். முன்ஷி. தேசபக்தர்களை சிறையில் அடைக்கக் காரணமான இச்சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியபோது, அதை எதிர்த்தவர்கள் சர்தார் வல்லபபாய் படேலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும்.
  • புதிய அரசை வழிநடத்தப்போகும் அவர்களுக்கு, நாடு எதிர்கொள்ளப்போகும் சிரமங்கள் குறித்த தெளிவான பார்வை இருந்தது; உணர்ச்சிவசப்படாமல் சட்டத்தை அணுகும் தன்மையும் இருந்தது. எனவேதான் இச்சட்டப்பிரிவு மிகவும் அவசியம் என்றார் படேல். அம்பேத்கரோ, நியாயமான கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் நீடிக்க வேண்டும் என்றார்.
  • கருத்துரிமை சட்டத்தில் முன்ஷியின் வாதம் ஏற்கப்பட்டபோதும், இந்திய தண்டனை சட்டத்தின் உட்பிரிவுகள் மாற்றப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் இச்சட்டப்பிரிவு ராஜதுரோக சட்டமாக அல்லாமல், தேசதுரோக சட்டமாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மத்திய அரசு மட்டுமல்ல பல்வேறு கட்சிகள் ஆளும் மாநில அரசுகளாலும் இச் சட்டப்பிரிவு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதுதான்.
  • இச்சட்டத்தை எதிர்த்து 1962-இல் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு (கேதார்நாத் சிங் - எதிர்- பிகார் அரசு) ஐ.பி.சி. 124-ஏ பிரிவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. 1995- இல் தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கிலும் (பல்வீந்தர் சிங் - எதிர் - பஞ்சாப் அரசு) இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இச்சட்டப்பிரிவு செல்லும் என்று அறிவித்தது. 
  • 2021-இல் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றும் வேறு சிலரும் இச்சட்டத்தை எதிர்த்து மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதுவே இன்றைய விவாதத்தின் மையப்புள்ளி. 'கருத்துரிமைக்கான விளக்கங்கள் மாறியுள்ள தற்காலத்தில் ஆங்கிலேயர் கால எச்சமான 124-ஏ பிரிவு சமூகச்சூழலுக்கு இணக்கமாக இல்லை; இது அரசை எதிர்ப்போரை தண்டிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்பதே இதனை எதிர்ப்போரின் வாதம்.
  • ஆனால், "ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதே அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவதற்கான காரணமாகி விட முடியாது; காலனித்துவ கால சட்டம் என்பதே அதை நிராகரிப்பதற்கான காரணமாகி விடாது' என்று சட்ட ஆணையம் கூறுகிறது.
  • இதனிடையே, இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, 'அரசு மீதான விமர்சனங்கள் மட்டுமே தேசத்துரோகமல்ல' என்று 2021-இல் கூறிய உச்சநீதிமன்றம், இவ்வழக்கை ஒத்திவைத்திருக்கிறது. அதுவரை இந்த சட்டப்பிரிவில் வழக்கு எதுவும் பதிய வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுவே ஐ.பி.சி. 124-ஏ சட்டப் பிரிவு தொடர்பான பின்புலம்.
  • நாட்டின் இறையாண்மைக்கும், நிலையான ஆட்சிக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எதிராகச் செயல்படுவோருக்கு கருத்துரிமையை வழங்கி வேடிக்கை பார்க்க முடியாது. கருத்து சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கவும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும் பயன்படுவதை அனுமதிக்க முடியாது.
  • அதே நேரத்தில், அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டப்பிரிவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதும் ஏற்புடையதல்ல. எனவே, அரசியல் சாசன சிற்பிஅம்பேத்கரின் கருத்துப்படி, இந்த சட்டப் பிரிவில் நியாயமான கட்டுப்பாடுகளை சட்டத் திருத்தமாக மத்திய அரசு கொண்டு வருவது தான் சரியான தீர்வாக இருக்கும்.

நன்றி: தினமணி (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்