வேண்டுவன அளித்திடும் ‘ஓம் நமோ நாராயணாய’
- ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரம் சொல்லி பரந்தாமனை வழிபட்டால், பல்லாண்டு நலமுடன் வாழலாம் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறியுள்ளனர். இப்பிறவியில் அவனை வணங்கி அவன் அருளைப் பெறுதலே, அடுத்த பிறவிக்கான தேடலாக அறியப்படுகிறது.
- ஒரு சமயம் பாண்டிய மன்னர் வல்லப தேவன் இரவு நேரத்தில் நகர்வலம் மேற்கொண்டார். வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்ட மன்னர், அவரிடம் சென்று, ‘நீங்கள் யார்?’ என்று வினவினார். கங்கையில் நீராடிவிட்டு தான் அங்கு வந்திருப்பதாகவும், இனி சேதுக்கரை நோக்கி பயணிக்க உள்ளதாகவும் பெரியவர் தெரிவித்தார். புனித யாத்திரை மேற்கொள்ளும் அவர் தனக்கு ஏதேனும் அறிவுரை வழங்க வேண்டும் என்று மன்னர் வேண்டினார்.
- பெரிய வரும், ‘மழைக் காலத்தில் (ஆடி முதல் ஐப்பசி) இன்பமாக இருக்க, மீதமுள்ள 8 மாதங்கள் உழைக்க வேண்டும், இரவுக்குத் தேவையானதை பகலில் தேட வேண்டும், முதுமைக்குத் தேவையானதை இளமையில் தேட வேண்டும், அடுத்த பிறவிக்கு வேண்டியதை இந்தப் பிறவியிலேயே தேட வேண்டும்’ என்று மன்னரிடம் கூறினார். மகிழ்ந்த மன்னர் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.
- பெரியவர் சொன்ன 3 விஷயங்களை முடித்து விட்டதை உணர்ந்த மன்னர், இப்பிறவியிலேயே எதைத் தேட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்தார். அதுதொடர்பாக பலரிடம் கேட்டார். ஆனால் யாரும் மன்னரின் சந்தேகத்தைப் போக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தனது சந்தேகத்தை தீர்ப்பவருக்கு பொற்காசுகள் வழங்குவதாக அறிவிக்கிறார்.
- அன்றிரவு ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், மன்னரின் சந்தேகத்தைப் போக்குமாறு பணிக்கிறார். பெரியாழ்வார் உடனே மன்னரின் அரண்மனைக்குச் சென்று, ‘நாராயணனே பரம்பொருள். ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை சொல்லி இப்பிறவியில் அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதுவே அடுத்த பிறவியில் நமக்கு நற்பயனை அளிக்கும்’ என்று தெரிவித்தார். மன்னர் மிகவும் மகிழ்ந்து, பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றார்.
- அதே சமயம் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பெரியாழ்வாருக்கு அருள்பாலித்தார். பெரியாழ்வார் பெருமாளைப் போற்றி, ‘பல்லாண்டு பல்லாண்டு’ எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடினார்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)