TNPSC Thervupettagam

வேதங்கள் ஏன் அவசியமானவை?

November 27 , 2024 8 hrs 0 min 15 0
  • தமிழ் நாகரிகத்தின் உயிர்நாடி திருக்குறள். தமிழர் கலாசாரத்தின் பெருமை சங்க இலக்கியங்கள். தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் இதனை ஏற்றுக்கொள்வர். நமது மரபு இவ்விரு நூல்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இவை தரும் போதனைகளே இந்த மண்ணுக்கானவை. அவை நமது முன்னோர்களின் அறிவுச் செல்வம்.
  • இந்திய மரபில் வேதங்களே முதன்மையானவை. ஒப்புவமை இல்லாத பெருமைக்கு உரியதாக போற்றப்படுபவை. புனிதமானவை என்றும் அறிவார்த்தமானவை என்றும் வாழ்வியலைச் சொல்வன என்றும் வீடுபேற்றுக்கு வழிகாட்டுவன என்றும் அதன் பெருமைகளை அடுக்கிச் சொன்னாலும் இன்றைக்கும் மனித சொல்லுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்திகளை அவை தாங்கி நிற்கின்றன என்று உலக அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • ஏதேனும் நதியைப் பற்றிச் சொல்லும் பொழுது "கங்கையைப் போல புனிதமானது' என்று சொல்வதைப் போல, எந்த ஒரு நூலையும் பெருமைப்படுத்தும் பொழுது அதனை வேதத்துடன் ஒப்பிடுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. தமிழிலும் அத்தகைய வழக்கம் எப்போதும் இருந்திருக்கிறது.
  • அதனால்தான் திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடுகிறோம். நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியை வைணவர்கள் வேதமாகப் போற்றுகின்றனர். சைவர்கள் திருவாசகத்தைத் தமிழ் வேதமாகக் கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள் பைபிளை சத்ய வேதம் என்று கூறுகின்றனர். இப்படி, வேதங்கள் சமயம் மற்றும் சித்தாந்தங்களில் சிறப்புப் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.
  • இந்தியாவில் சமய இலக்கியங்கள் வேதத்தோடு ஒப்பிடப்படுவதும் வேதம் பற்றிப் பேசுவதும் ஆச்சரியமில்லை. தமிழின் பெருமையான திருக்குறளை வேதத்திற்கு சமமானது என்று ஏன் வைத்தார்கள்? சரி, பிறரின் பார்வையில் வேதமாகப் பார்க்கப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும்; திருக்குறள் வேதங்களை எப்படிப் பார்க்கிறது?
  • வேதங்கள் ஒவ்வொரு திசைக்கும் தெய்வங்களைக் கூறுகின்றன. முறையாக அந்த தெய்வங்களுக்கானதாகவே திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு திசைக்கான தெய்வங்களை வணங்கிக் "கடவுள் வாழ்த்து'; மேற்கு திசைக்கான வருணனை வணங்கி "வான் சிறப்பு'; தெற்கு திசைக்கான நீத்தாரை வணங்கி "நீத்தார் பெருமை'; வடக்கு திசைக்கான தர்மதேவனை வணங்கி "அறன் வலியுறுத்தல்' பாடப் பெற்றுள்ளன.
  • திருக்குறள் வேதங்களை மட்டுமல்ல, வேதம் ஓதுபவர்களையும் பெருமையாகவே பேசுகிறது. மதுரையில் சங்கப்பலகை ஏற்றுக்கொண்ட திருக்குறள்,

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

                                                                                                                                           பெருமிறை தானே தனக்கு (குறள் 847)

  • அரிய மறைபொருளை உணர்ந்து, அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்கிறவர்கள் ஆவர் என்று வேதத்திற்குப் பெருமை சேர்க்கிறது. வேதம் சொல்லும் வழியில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக குறள் அமைந்திருக்கிறது. அதோடு நிற்கவில்லை.
  • நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  • மறைமொழி காட்டி விடும் (குறள் 28)
  • என்கிறது. அதாவது, நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன்மக்களின் உயர்வை அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
  • நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்று தொல்காப்பியமும் பேசுகிறது.
  • அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  • நின்றது மன்னவன் கோல் (குறள் 543)
  • மன்னனின் செங்கோன்மை, அதாவது ஆட்சியானது, அந்தணரின் நூலான வேதங்களுக்கும் அறத்திற்கும் காப்பாக இருக்க வேண்டும். வேதங்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மன்னனுக்கு இருப்பதாகக் குறள் கூறுகிறது.
  • ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
  • காவலன் காவான் எனின் (குறள் 560)
  • ஒரு நாட்டிலே மன்னன் முறையாக ஆட்சி நடத்தாவிட்டால் பசுக்களால் பெருகும் வளம் இல்லாமல் போகும். அறுதொழிலோர் ஆகிய அந்தணர்கள் தங்களது வேத அறிவை மறந்து போவார்கள். இந்தக் கருத்து கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது சிந்திக்கத் தக்கது. அந்தணர்களையும் பசுக்களையும் காக்கத் தவறுவதைக் கொடுமையான ஆட்சி என்று வள்ளுவப் பேராசன் குறிப்பிடுகிறார்.
  • அறுதொழிலோர் என்பதை அந்தணர்கள் இல்லை என்று கருத்துச் சொல்பவர்கள் உண்டு. ஆனால், "ஷட் கர்ம நிரதர்' என்ற சம்ஸ்க்ருதச் சொல்லின் மொழிபெயர்ப்பே அறுதொழிலோர். அந்தணர்களுக்கான, வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகள் செய்வதும், செய்விப்பதும், தானம் தருவது, பெறுவது ஆகிய ஆறு தொழில்களைச் செய்பவர்கள் அந்தணர்கள்.
  • குறளின் கருத்தை உணர்ந்த தமிழகத்தின் அடையாளமான சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் வேதங்களைப் போற்றுகிறவர்களாகவே இருந்திருக்கின்றனர். தொடர்ந்து வேள்விகள் செய்ததைப் பெருமையாக நினைத்தவர்கள் நமது மூவேந்தர்கள்.
  • வேத முறைப்படி வேள்விகள் செய்தவர்கள் என்பதை "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என தங்களுக்கான பட்டங்களாகக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டவர்கள். சேர, சோழ, பாண்டியர்கள் நமது அடையாளம் என்றால் அவர்கள் பெருமையாக நினைத்த வழியில் செல்வதுதானே தமிழராக நமக்கும் பெருமை.
  • "யக்ஞம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு "வேட்டல், வேள்வி' என்ற வார்த்தைகள் தொன்றுதொட்டு தமிழில் இருக்கின்றன. "சயனம்' என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் "பரப்பு' என்ற வார்த்தை இருக்கிறது. காலம்காலமாக வேள்வியும் அது சார்ந்த செயல்பாடுகளும் இந்த மண்ணில் பெருமளவில் இருந்து வந்திருப்பதாலேயே அதற்கான தமிழ்ச் சொற்கள் தோன்றி நிலைபெற்றிருக்கின்றன.
  • பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் தமிழ்த் தெய்வமான முருகனின் ஆறுமுகங்களில் ஒன்று அந்தணர்கள் வேத விதிப் படி நிகழ்த்தும் வேள்வியைக் காப்பதற்காகவே இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்க்கடவுள் வேதம் சொல்லும் வேள்வியைக் காப்பவராக இருக்கிறார் என்றால் நாமும் அதனைக் காக்கக் கடமைப்பட்டவர்கள் தானே!
  • சோழ மன்னனை மனுநீதிச் சோழன் என்பதும் பாண்டிய மன்னன் தன்னை "மனுபவன்' என்று சொல்லிக் கொள்வதும் தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டிய, சிந்திக்க வேண்டிய செய்திகள். தமிழனின் அறிவின் அடையாளமாக அழியா சான்றை ஏற்படுத்தியிருப்பவர் ராஜராஜ சோழன். அவர் அறிவில் தமிழனின் பெருமைக்கும் உயரத்திற்கும் அடையாளமாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உயர்ந்து நிற்பவர். தமிழகத்தின் பொற்காலம் அவரது காலமே. அவர் வேத பாடசாலைகள் அமைத்ததை, வேதம் ஓதுவோரை ஆதரித்ததை, அன்றாடம் வேதங்களை ஓதச் செய்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. தமிழ் மண்ணின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநிறுத்தியவர் காட்டும் வழிதானே நமது வழியாகவும் இருக்க வேண்டும்!
  • சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மூதூர் வேத ஒலியோடு தனது நாளைத் தொடங்கியதைப் பெருமையாகப் பின்வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்ளப் பதிவு செய்து வைத்திருக்கிறதென்றால் அதுவே நமது முன்னோர் நமக்குக் காட்டும் பாதை என்பது தெளிவு.
  • முழுமையான செம்மை வடிவம் கொண்ட மொழிக்கு சொந்தக்காரர்கள், தனது மொழியின் மீது உணர்வுப்பூர்வமான பற்றுதல் கொண்டவர்கள் மற்றொரு மொழியின் இலக்கியமான வேதத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தந்திருப்பார்களா? என்ற வினா எழுகிறது. தனது மொழியை நேசிக்கத் தெரிந்தவன் பிற மொழிகளை இழிவு செய்யவோ வெறுக்கவோ மாட்டான். "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்ற பண்பு கொண்ட பாரம்பரியம் நம்முடையது.
  • அதே நேரத்தில் ஒலி வடிவத்தில் இருக்கும் அறிவின் சாரம் வேதங்கள். எழுத்து வடிவம் அற்றவை ஒலிவடிவில் மட்டுமே தலைமுறை தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருபவை. அவை எந்த மொழிக்கானவையும் அல்ல. அதனால்தான் தமிழர்கள் அதனை "எழுதாக்கிளவி' என்று குறிப்பிட்டார்கள்.
  • சப்தம், ஒலி எல்லாருக்கும் பொதுவானவையே. அச்சு இயந்திரத்தின் வரவுக்குப் பின் அவை புத்தகங்களாக வடிவம் பெற்றன. எழுத்து வடிவம் என்பது காலத்தின் போக்கில் வேதங்களுக்கு ஏற்பட்டதேயன்றி ஒரு மொழியில் தோன்றியதற்கான அடையாளம் அல்ல.
  • வேதங்கள் நில எல்லைகள் அற்றவை; அதன் பொருளும் அப்படியே. "சர்வே ஜனா சுகினோ பவந்து' - சகல ஜனங்களும் சுகமாக வாழட்டும். "அஸ்மின் கிராமஸ்தித ஸர்வேஷாம்' - இந்த கிராமத்தினர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். இப்படி உலகப் பொதுமையை வேதம் முன்வைக்கிறது.
  • "விஸ்வ ஸ்ரேயோ காங்க்ஷ' - அதாவது உலக நன்மையையே விரும்புவது என்ற கொள்கையே வேதத்தின் அடிப்படை. அனைத்து அறிவும் ஆற்றலும் அனைவருக்கும் பலனளிப்பதாக விசாலமான பார்வையைக் கொண்டிருப்பது வேதம்.
  • இந்த மண்ணின் அறத்திற்கு ஆணிவேராக இருப்பவை வேதங்கள். பக்தி, கோயில், யோகம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் வேதங்களே. கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக இருந்தாலும் பெருமரத்தைத் தாங்குவது வேர். அதே போல வேதம் இந்த மண்ணின் அறிவுச் செல்வமாக நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் நமது முன்னோர்களின் அனுபவப் பேரறிவு "மறை' என வேதங்களுக்குப் பெயர் கொடுத்தது.
  • அறிவியல், கணிதம், சூழலியல், வாழ்வியல், ஆத்மாவுக்கான தேடல் என உயிர் வாழ்வுக்கும், அதற்கும் அப்பாற்பட்டும், வழிகாட்டியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே நமது முன்னோர்கள் விரும்பி செயல்படுத்தினார்கள்.
  • ஆகவே, பண்டைத் தமிழகத்தில் போலவே இன்றும் வேதங்களின் ஒலி எங்கும் பரவி நிரம்ப வேண்டும். அவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகள் அறவழிப்பட்ட சமூகத்தை மலரச் செய்ய வேண்டும். அதற்காக வேதங்கள் சூரிய சந்திரர் உள்ள வரை என்றென்றைக்கும் நமக்கு அவசியம்.

நன்றி: தினமணி (27 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்