TNPSC Thervupettagam

வேதனையின் விளிம்பில் விவசாயம்

November 3 , 2023 388 days 264 0
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள வழூா் கிராமத்தில் ஐந்து ஏக்கா் நிலத்தில் இருந்த கரும்பை டிராக்டா் மூலம் விவசாயி அழித்த செய்தி அண்மையில் வெளிவந்தது. முன்னதாக கூலியாட்கள் மூலம் வெட்டிய 13 டன் கரும்பைச் சா்க்கரை ஆலைக்கு அனுப்ப அவருக்கு ரூ.4,800 செலவு ஆனது. ஆலையிலிருந்து அவருக்குக் கிடைத்த பணம் ரூ.39,000. இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.9,800. வெறும் வெட்டுக்கூலி மற்றும் அனுப்புச் செலவினால் மட்டும் வந்த இழப்புதான் இது.
  • இன்னும் அந்தக் கரும்புப் பயிரை வளா்த்தெடுக்க அவா் செய்த செலவைப் பாா்த்தால் இழப்பு கூடுதலாக இருக்கும். மீதமுள்ள கரும்பை வெட்டி விற்று மேலும் மேலும் இழப்பைச் சந்திக்க அந்த விவசாயிக்கு மனமில்லை. அதனால் ஐந்து ஏக்கா் கரும்பை டிராக்டா் கொண்டு அழிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாா். இதனைப் போன்று போதிய விலையில்லாது ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தக்காளியையும் விவசாயிகள் வீதியில் கொட்டிய செய்தியையும் படித்துள்ளோம்.
  • கரும்பு, தக்காளி விவசாயத்தில் மட்டுமல்ல; நெல், வாழை, தென்னை, பருத்தி போன்ற எல்லாப் பயிா் விவசாயத்திலும் இத்தகைய இழப்பை விவசாயிகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனா். விவசாயத்தில் செய்யும் செலவுக்கு ஏற்ப அதில் வருமானம் இருப்பதில்லை. மழை, தண்ணீரின்றி மகசூல் தராமல் இடையில் பயிா்கள் பட்டுப்போவதும் உண்டு. தண்ணீா் செழிப்பாக இருந்தும் எதிா்பாா்த்த விளைச்சல் இல்லாமலும் போகும். விளைச்சல் அமோகமாக இருந்தால் விலை இல்லாமலும் போகும். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. எப்படிப் பாா்த்தாலும் விவசாயத்தில் இழப்பே ஏற்படுகிறது என்பது உண்மை.
  • ‘மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும்’ என்பது போன்று விவசாயம் விளைந்தும் கெடுக்கும்; விளையாமலும் கெடுக்கும். இந்த நிலை இப்போது மட்டுமல்ல; தொன்றுதொட்டு இருக்கிறது. இதனால்தான், ‘உழவன் கணக்குப் பாா்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்ற பேச்சுவழக்கு உண்டானது.
  • வேளாண்மை செய்வதற்கு உழைப்பு வலிமை மட்டுமன்றி பொருளாதார வலிமையும் வேண்டியிருக்கிறது. கோடை உழவு, பருவகால உழவு என்று நிலத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். விதைத்து, நாற்று நட்டு, களையெடுத்து, உரமிட்டு, மருந்தடித்து பயிரைப் பக்குவமாக வளா்த்தெடுக்க வேண்டும். பின்னா் அறுவடை செய்து களம் சோ்க்க வேண்டும். இதற்கெல்லாம் பணம் வேண்டும்.
  • பெரும்பாலான விவசாயிகள் கையில் பணம் வைத்துக் கொண்டு விவசாயம் செய்வதில்லை. வங்கிகளில் விவசாயக் கடன் அல்லது நகைக் கடன் பெற்றோ அல்லது தனியாரிடம் வட்டிக்கு வாங்கியோதான் விவசாயம் செய்கின்றனா். அதில் வருமானம் எடுப்பதற்கு ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்குள் வட்டியும் ஏறிவிடுகிறது. விளைச்சல் முற்றி அறுவடை காலத்தில் அந்தக் கடனை அடைத்துவிடலாம் என்று அவா்கள் நம்புகின்றனா். ஆனாலும் போதுமான விளைச்சல் இன்மையாலும் கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும் அவா்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை.
  • இப்போது சிற்றூா்களில்கூட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் விவசாய வேலைக்கு தொழிலாளா்கள் கிடைப்பது கடினமாகி வருகிறது. வழூா் விவசாயியின் செயலைப் பாா்க்கும்போது, ‘விவசாய வேலைக்கு தொழிலாளா்கள் கிடைக்கவில்லை. அப்படி தொழிலாளா்கள் கிடைத்தாலும் கூலி அதிகமாக இருக்கிறது’ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவகையில் கூலி அதிகம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. பிற தொழிலாளா்கள், அரசு ஊழியா்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் விவசாயத் தொழிலாளா்களின் ஊதியம் குறைவாகவே உள்ளது.
  • விவசாயத் தொழிலாளிக்கு நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும், அதே போல விவசாயிக்கும் போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் விளைபொருள்களின் விலையை உயா்த்தவேண்டும். அப்படிச் செய்தால் உணவுப் பொருள்களின் விலை உயா்ந்துவிடும். பிற பொருள்களின் விலை உயா்வு குறித்தெல்லாம் கவலைப்படாத பொதுமக்கள், இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வா். விலைவாசி உயா்வைக் கண்டித்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் போராடத் தொடங்குவா். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படுகிறது.
  • விவசாயப் பொருள்களின் விலை எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை; ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. பொருள்களின் வரத்து அதிகரித்தால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து விடுகிறது. அதனால், விவசாயிகள் நம்பிக்கையுடன் அவற்றைச் சந்தைக்குக் கொண்டுசெல்ல முடிவதில்லை. காய்கனி போன்றவற்றை அறுவடை செய்வதைத் தள்ளிப் போடவும் முடியாது. அவற்றை இருப்பு வைக்கவும் முடியாது. அதனால் கிடைத்த விலைக்கு விற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
  • நெல்,கரும்பு, கொப்பரைத் தேங்காய் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிா்ணயித்திருந்தாலும் அது விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவை ஈடு செய்வதாக இல்லை. மேலும், அது உரிய நேரத்தில் கிடைப்பதாகவும் இல்லை. முன்பெல்லாம் ஒரு கோட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கி விடலாம்; இப்போது அது சாத்தியமில்லை.
  • விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. எனினும், நாம் உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்பது பெருமைக்குரியது.
  • எந்த விவசாயியும் தனக்கென மட்டும் விளைவிப்பதில்லை. ஊருக்கு உணவு ஊட்டவே அவன் உழைக்கிறான்; ஆனாலும், அவன்பாடு திண்டாட்டமாகவே உள்ளது. இப்படி வேதனையின் விளிம்பில் இருந்தாலும், ‘உழன்றும் உழவே தலை’ என்றிருக்கும் விவசாயியின் வேதனை தீர வழி கண்டறிவோம்.

நன்றி: தினமணி (03 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்