TNPSC Thervupettagam

வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா

June 20 , 2024 11 days 32 0
  • வேற்றுக்கிரகவாசிகள் எங்கே இருக்கிறார்கள்? பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்? திரைப்படத்தில் காட்டுவதுபோல் குச்சி போன்ற உடலும் நீளமான கண்களும் தலையில் கொம்புகளும் அவர்களுக்கு இருக்குமா? அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா? அவர்கள் எந்தக் கோளில் வாழ்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
  • என் தோட்டத்துக்கு அருகில் பறக்கும் தட்டு வந்தது’, ‘குளத்துக்கு அருகில் வந்தது’, ‘பாலைவனத்தில் வந்து இறங்கியது’ என்றெல்லாம் பலரும் சொல்கிறார்கள். நீங்கள் இதுவரை பறக்கும் தட்டைப் பார்த்திருக்கிறீர்களா ஆர்தர் கிளார்க்? வேற்றுக்கிரகவாசிகள் முழுக்க முழுக்கக் கற்பனை என்றும் பலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • நான் வானத்தை ஆராய்பவன் என்பதால் என்னிடம் இந்தக் கேள்விகளை அடிக்கடி கேட்கிறார்கள். நிறைய படிப்பவன், நிறைய எழுதுபவன் என்பதால் வேற்றுக்கிரக மர்மத்தை என்னால் தீர்த்துவைக்க முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். உண்டு என்றோ இல்லை என்றோ நான் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றோ எனக்குத் தெரியாது என்றோ தயக்கத்தோடு சொன்னால் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
  • அது எப்படி நீங்கள் அப்படிச் சொல்லலாம்? பொழுதெல்லாம் தொலைநோக்கியால் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள். புத்தகங்களைப் படிக்கிறீர்கள். புத்தகங்களை எழுதுகிறீர்கள். உங்களுக்கு எப்படி இந்த அடிப்படையான விஷயம் தெரியாமல் இருக்கும்? ஐந்தையும் ஏழையும் பெருக்கினால் எவ்வளவு என்று ஒரு கணிதவியலாளரிடம் கேட்டால், தெரியாது என்றா அவர் சொல்வார்? ஒரு மருத்துவரிடம் சென்று காய்ச்சலாக இருக்கிறது என்று சொன்னால், என்ன மருந்து கொடுப்பது என்று புரியவில்லையே என்றா அவர் கைவிரிப்பார்? அறிவியல் என்பது துல்லியத்துக்குப் பெயர்போன ஒரு துறை அல்லவா?
  • விளக்குகிறேன். எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து பூமியில் அல்ல, வானத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இல்லை, இல்லை மிதந்துகொண்டிருக்கிறேன். முதல் முறையாக எப்போதுதலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால், குழந்தையாக இருந்தபோது நான் ஆர்வத்தோடு உருவாக்கிய முதல் விளையாட்டுக் கருவி ஒரு தொலைநோக்குக் கருவி. எப்போதும் அது என்னோடு இருக்கும். மினுக் என்று ஒரு நட்சத்திரம் மின்னினால் போதும், ஓடிச்சென்று தொலைநோக்கி வழியாகப் பார்ப்பேன். அது என்னைப் பார்த்துக் கண் அடிக்கிறதா? என்னிடம் ஏதோ சொல்ல வருகிறதா? நான் கீழிருந்து அதைப் பார்ப்பதுபோல் அதுவும் மேலிருந்து என்னைப் பார்க்குமா? அதன் கையிலும் ஒரு தொலைநோக்கி இருக்குமா? முதலில் அதற்குக் கை இருக்குமா?
  • இன்று நான் ஒரு தாத்தா. யாராவது கைபிடித்துத் தூக்கிவிட்டால்தான் என்னால் எழுந்து நிற்க முடியும். இன்றும் அதே வானத்தை அதே ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். என்னிடம் இன்று எல்லாவிதமான நவீனக் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், என் கைகளால் நான் உருவாக்கிய பொம்மைத் தொலைநோக்கிக் கருவியைக் கொண்டு என்னவெல்லாம் தேடினேனோ அவற்றை எல்லாம் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
  • ஒரே ஒரு பகலைக்கூட, ஒரே ஓர் இரவைக்கூட நான் வீணாக்கியதில்லை. காலை கண் விழித்ததும் விடியலை ஆராய்வேன். மதிய நேரம் வந்தால் வெயிலை ஆராய்வேன். வெயில் மறைந்தால் மாலை. மாலை நேரத்து மேகங்களும் காலை நேரத்து மேகங்களும் வெவ்வேறானவை. வெயில் வானம் போல் மழை வானம் இருக்காது. வெளிச்சத்துக்குள் ஒரு கோடி புதிர்கள் விழித்திருக்கும் என்றால் இரவுக்குள் பல கோடி புதிர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்.
  • எல்லாப் புதிர்களையும் கண்டுபிடிப்பதே என் வேலை என்று அறிவியல் ஒருபோதும் சொல்லாது. அது சாத்தியமில்லை என்று அதற்கு நன்றாகத் தெரியும். புதிர்தான் அறிவியலை அழகாக்குகிறது. புதிர்தான் அறிவியலைச் சுறுசுறுப்போடு இயங்க வைக்கிறது. புதிர் வளர, வளர அறிவியலும் வளரும். அறிவியல் சில புதிர்களை மட்டுமே இதுவரை கண்டுபிடித்திருக்கிறது. அந்தச் சிலவற்றுள் உறுதியாகக் கண்டறிந்த உண்மையின் அளவு கடுகைவிடவும் சிறியது. அந்தக் கடுகில் ஒரு துளியை மட்டுமே நான் இவ்வளவு ஆண்டுகளில் கண்டிருக்கிறேன். எப்படி விடைகளைக் கண்டறிவது என்று அல்ல, எப்படிக் கேள்விகள் கேட்பது என்றுதான் அறிவியல் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு விடையைக் கண்டறிய நூறு ஆண்டுகள் ஆகும் என்றால், நொடிக்கு நூறு கேள்விகள் பூக்கள்போல் அடுக்கடுக்காக மலர்ந்துகொண்டே இருக்கும்.
  • பூமி தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா? அவை எப்படிப்பட்டவை? நம்மைப் போன்ற மனிதர்கள் வேறு கோள்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்களா? இந்த வேற்றுக்கிரகவாசிகள் நம்மைப்போல் இருப்பார்களா அல்லது வேறு வடிவங்களில் இருப்பார்களா? அவர்களுக்கு மொழி உண்டா? அவர்களுக்குப் பூமி இருப்பது தெரியுமா? நம்மை அறிவார்களா? அவர்களால் நம் உலகுக்குள் நுழைய முடியுமா? இதற்கு முன்பு நுழைந்திருக்கிறார்களா? நம்மால் அவர்கள் வாழும் கிரகத்தைக் கண்டறிய முடியுமா? அங்கே நம்மாலும் செல்ல முடியுமா?
  • எனக்குத் தெரியாது என்று அறிவியல் சொல்லும்போது நான் என்ன செய்வேன் தெரியுமா? கற்பனையின் கையைப் பற்றிக்கொண்டு செல்லமே, எங்கே நீ சொல்லு பார்ப்போம் என்று கொஞ்சுவேன். அது எனக்குக் கதைகள் சொல்லத் தொடங்கும். யாருமே அறியாத கோள்களுக்கு என்னை அது அழைத்துச் சென்று காட்டும். நிஜத்தில் இல்லாத பறக்கும் தட்டை எனக்காக அது வரவழைக்கும். வேற்றுக்கிரக உயிர்களைப் பிடித்து இழுத்து வந்து இந்தா, நீயே பேசிக்கொள் என்று அறிமுகம் செய்து வைக்கும். நட்சத்திரத்தையும் சூரியனையும் நிலவையும் மின்னலையும் இடியையும் என் உள்ளங்கைக்குள் கொண்டுவந்து குவிக்கும்.
  • எனது தொலைநோக்கியில் இதுவரை எந்த வேற்றுக்கிரக உயிரினமும் சிக்கியதில்லை. என்னால் காண முடியவில்லை, எனவே அப்படி எந்த உயிரினமும் இல்லை என்று நான் சொல்லவும் மாட்டேன். அப்படிக் கதவை இழுத்து மூடும் வழக்கம் அறிவியலுக்கு இல்லை. ஆனால், வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நூறு கதைகள் என்னால் சொல்ல முடியும். அவர்களை நூறு வடிவங்களில் என்னால் கற்பனை செய்ய முடியும். அறிவியலைக் கற்பனை கட்டிப்பிடித்துக் கொள்ளும். கற்பனை இட்டுக்கட்டிச் சொல்லும் கதைகளை எல்லாம் அறிவியல் ஆர்வத்தோடு அமர்ந்து கேட்கும். எனது வானம் முழுக்கக் கற்பனையும் அறிவியலும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் வானம் ஒரு பெரும்புதிராக இருக்கிறது. அதனால்தான் வானம் எனக்குப் பிடித்திருக்கிறது.
  • என் வாழ்க்கையில் விலை மதிப்பற்ற இரண்டு விஷயங்கள் ‘கற்றல், ‘அன்பு’. ‘நான் கற்றுக் கொண்டேன்’, ‘நான் அன்பு செலுத்தினேன்’ என்று சொல்ல முடிந்தால், ‘நான் மகிழ்ச்சியாக இருந்தேன்’ என்றும் உங்களால் சொல்ல முடியும்!
  • ஆர்தர் சி கிளார்க், புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்.

நன்றி: தி இந்து (20 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்