வேலை நேரம்
- ஏர்ன்ஸ்ட் அண்டு யங் (Ernst & Young) பன்னாட்டு நிறுவனத்தின் புணே அலுவலகத்தில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவால் ஜூன் மாதம் உயிரிழந்தார். அளவுக்கு அதிகமான பணிச் சுமை காரணமாகத் தன் மகள் உயிரிழந்ததாக அப்பெண்ணின் தாயார் ஏர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானிக்கு நீண்ட கடிதம் ஒன்றைச் சமீபத்தில் எழுதினார். இக்கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், இந்தியப் பணியிடங்களில் வேலை நேரம் சார்ந்த விவாதத்தையும் இந்நிகழ்வு எழுப்பியிருக்கிறது.
நீண்ட போராட்டம்:
- தொழிற்புரட்சி (1760 முதல் 1830) காலக்கட்டத்தில் தொழிலாளர்கள் நீண்ட நேரம் பணிச் சுமைக்கு உள்ளாகினர். ஒரு நாளைக்கு 14 மணி நேரத்துக்கும் மேலாகத் தொழிலாளர்கள் வேலை பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் கம்யூனிஸ்ட் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பிற தொழிலாளர் அமைப்புகள் ஆகியவை 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்னிறுத்தி மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தன.
- 1919 இல் தொடங்கப்பட்ட, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது, ‘ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை’ என்கிற நீண்ட நாள் கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது. அதன் பின்னர், உலக நாடுகள் இத்தீர்மானத்தை வழிமொழியத் தொடங்கின. தற்போது 8 மணி நேர வேலை என்பது பல நாடுகளில் சட்டமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் 10-12 மணி நேரம் வேலை பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்திய நிலை:
- இந்தியாவில் தொழிற்சாலைகள் சட்டம், 1948 (The Factories Act, 1948) உள்படச் சில சட்டங்கள் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு உலகளாவிய சந்தைகளுடன் ஒத்திசைந்து செல்லும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம் (ஐடி) போன்ற துறைகளில் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மைகள் புகுத்தப்பட்டன. ஷிஃப்ட் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விளைவாக, வேலையின் தன்மை, மாநில அரசின் சட்ட விதிகள் ஆகியவற்றைப் பொறுத்து வேலை நேரம் மாறுபடுகிறது.
- ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலையும், வாரத்துக்கு மூன்று நாள்கள் விடுப்பும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. இது தொழிலாளர்களை மேலும் சுரண்டவே வழிவகுக்கும் என்று பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. கடந்த ஆண்டு தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலைக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றும் தமிழ்நாட்டு அரசின் முயற்சி பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது. ஆனாலும் தற்போது கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 12 மணி நேர வேலைக்கும் அனுமதி அளிப்பதற்கான சட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
பெண்களின் நிலை:
- இந்திய இளம் பெண்கள் 2023இல், வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்திருக்கிறார்கள் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐடி/ ஊடகத் துறைகளில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குப் பணி நேரம் கூடுதலாக இருக்கிறது. இத்துறைகளில் பெண்கள் வாரத்துக்குச் சராசரியாக 57 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுகிறார்கள். பிற துறைகளில் பெண்களின் பணி நேரம் 55 மணி நேரமாக உள்ளது. மேலும், இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், கணக்குத் தணிக்கை போன்ற துறைகளில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரம் வாரத்துக்கு 53.2 மணி நேரமாக உள்ளது.
- உலகளவிலான தரவுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் பெண்களுக்குப் பணி நேரம் கூடுதலாக உள்ளது. உதாரணத்துக்கு, ஐடி/ ஊடகத் துறைகளில் பணியாற்றும் பெண்களின் வேலை நேரம் ஜெர்மனியில் ஒரு வாரத்துக்கு 32 மணி நேரமாகவும், ரஷ்யாவில் 40 மணி நேரமாகவும் உள்ளது. வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் வீட்டு வேலைகளிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
- வேலைக்குச் செல்லும் பெண்களின் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளக் குடும்பத்தினரிடம் இன்னமும் சுணக்கம் நிலவுகிறது. பெண்கள் பணியிடத்தில் சுமார் 9 மணி முதல் 11 மணி நேரம்வரை வேலை செய்வதுடன், 5 - 6 மணி நேரம் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள். இப்பெண்களுக்கு மற்ற விஷயங்களுக்கு 7 - 10 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. வீட்டு - வேலை நேரத்தைப் பொறுத்தவரை நகர்ப்புற - கிராமப்புறப் பெண்களிடம் பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை.
- உலகமயமாக்கலுக்குப் பிறகு, வேலைவாய்ப்பு சார்ந்த இறுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், வேலை - தனிப்பட்ட வாழ்க்கையைச் சரியான விகிதத்தில் நிர்வகிப்பது, பணியாளர்களின் உடல்நலன் சார்ந்த சவால்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. அந்த வகையில், பணியிடங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்த்து, நிறைவான பணிச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உள்ளது. அதை உறுதிப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதன் மூலமே உற்பத்தித் திறன் மேம்படும், நாட்டின் பொருளாதாரமும் தன்னிறைவைப் பெறும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)