TNPSC Thervupettagam

வேலையின்மை நிவாரண விதிகள் வேண்டும் மறுபரிசீலனை

August 26 , 2024 94 days 97 0

வேலையின்மை நிவாரண விதிகள் வேண்டும் மறுபரிசீலனை

  • வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண நிதி உதவி குறித்து, இங்கு பலருக்கும் தெரியவில்லை. அந்த நிதி வழங்கப்படுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது.
  • வேலையின்மை உதவித்தொகை என்பது வளர்ந்த நாடுகளில் நீண்ட காலமாகவே அமலில் இருக்​கிறது. சில நாடுகளில் வேலையில் இருப்​ப​தற்கு நிகராகவே வேலையின்மை நிவாரணமும் வழங்கப்​படு​கிறது. காப்பீடு, ரொக்க உதவி, கல்வி, பயிற்சி, தொழில்முனைவோர் திறன் மேம்பாடு, வீட்டு வசதி எனப் பல்வேறு பரிமாணங்கள் அதில் இருக்​கும்.
  • தன் குடிமக்​களின், வேலையின்​மைக்குத் தானே பொறுப்பு என்ற நிலையி​லிருந்து இந்தப் பிரச்​சினையை அரசு அணுகுவதன் பலன்கள் இவை. தமிழ்​நாட்​டிலும் இப்படியான உதவி வழங்கப்​படு​கிறது. ஆனால், இந்த உதவியை வழங்கு​வதில் அரசு முன்வைக்கும் நிபந்​தனை​கள்தான் விவாதத்​துக்கு​ரியவை.

நிவாரணமும் நிபந்​தனை​களும்:

  • ஒருவரின் வேலையின்​மைக்கு, அரசின் பொறுப்பும் கடமையும் இருக்​கிறது என்பதை உணர்த்தும் வகையில், வேலையில்லாக் கால நிவாரண உதவித்​தொகைத் திட்டம், 1983 இல் தமிழ்​நாட்டில் அறிமுகப்​படுத்​தப்​பட்டது.
  • அப்போது‌‌ குறைந்​த​பட்சம் 50 ரூபாயில் தொடங்கிய வேலையின்மை நிவாரணத் தொகை, இன்று குறைந்​த​பட்சம் ரூ.200; அதிகபட்சமாக ரூ.600 என்ற நிலையை அடைந்​துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்​களுக்கு ரூ.200; தேறிய​வர்​களுக்கு ரூ.300. 12ஆம் வகுப்பு படித்​தவர்​களுக்கு ரூ.400. பட்டப்​படிப்பு படித்​தவர்​களுக்கு ரூ.600 என நிவாரண நிதி கிடைக்​கிறது.
  • மேலே குறிப்​பிட்ட கல்வித் தகுதி உள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவல​கங்​களில் பதிவுசெய்து ஐந்து ஆண்டுகள் காத்திருப்​பவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், சுய வேலைவாய்ப்பு என எந்த வேலை செய்து​வருபவ​ராகவும் இருக்கக் கூடாது.
  • அதேபோல், அரசின் வேறு எந்த உதவித்​தொகையைப் பெறுபவ​ராகவும் இருக்கக் கூடாது. பொதுப் பிரிவினர் எனில், 40 வயதுக்​குள்​ளும், பட்டியல் சாதி / பழங்குடி மக்கள் எனில் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
  • வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைத் தொடர்ந்து புதுப்​பித்து​ வருபவராக இருக்க‌ வேண்டும். குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகக் கூடாது. வேலை இல்லாத மாற்றுத் திறனாளி​களுக்கும் இந்த நிவாரணத்தொகை உண்டு. ஆனால், அவர்கள் மாற்றுத் திறனாளி​களுக்கான உதவித்தொகை பெறாதவர்களாக இருக்க வேண்டும்.

நடைமுறை என்ன?

  • அரசு விதிகளின்படி, தமிழ்நாடு முழுவதும் வேலையின்மை நிவாரணம் பெறுவோர் சில ஆயிரம் பேர் மட்டுமே. என்ன காரணம்? படித்து​விட்டு வேலைவாய்ப்பு அலுவல​கத்தில் பதிவுசெய்திருப்போர் பல லட்சம் பேர் இருக்​கிறார்கள். இப்படிப் பதிவுசெய்து என்ன பயன் எனப் பதிவைத் தவிர்ப்போர் நாளுக்​கு நாள் அதிகரித்து வருகின்​றனர்.
  • பதிவுசெய்​தவர்​களில் பலர், சரியாக மூன்று ஆண்டு​களில் பதிவைப் புதுப்​பிக்க மறந்து​விடு​கின்​றனர். மீண்டும் பதிவுசெய்வோர் எண்ணிக்கையும் குறைவு. இதன் காரணமாகப் பதிவுசெய்து வேலை இல்லாமல் இருப்​பவர்​களைக் காட்டிலும் பதிவுசெய்​யாமல் இருக்கும் வேலைவாய்ப்பு அற்றவர்கள் அதிகம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • ஒருவர் பட்டப்​படிப்பை முடித்து 20 வயதில் வேலைவாய்ப்பு அலுவல​கத்தில் பதிவுசெய்​து​கொள்​கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து எந்த வேலையும் செய்யாமல் இருந்​தால், வேலையின்மை நிவாரணம் பெறுதலுக்கான முதல் தகுதிச் சுற்றில் தேறிவிடு​கிறார். ஒருவேளை, மூன்று ஆண்டு​களில் பதிவைப் புதுப்​பிக்க மறந்து​விட்​டால், மீண்டும் பதிவுசெய்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
  • வேலையின்மை உதவித்​தொகைக்கான விண்ணப்​பத்தில் இணைக்க வேண்டிய முக்கியமான சான்று - குடும்ப வருமானம் ரூ.72,000ஐத் தாண்ட​வில்லை என்ற சான்றிதழ். வருவாய்த் துறைக்குச் சென்றால், கிராம நிர்வாக அலுவலர் ரூ.84,000க்குக் கீழ் வருமானச் சான்றிதழ் தர முடியாது என மறுத்து​விடு​கிறார்.
  • தமிழ்​நாட்டில் வேலையின்மை நிவாரணம் அறிமுகம் செய்யப்​பட்​ட​போது, ‘மகளிர் உரிமைத்​தொகை’ திட்டம் போன்ற திட்டங்கள் இல்லை. இதில் பயன்பெறும் மகளிர் அனைவரும் வேலையின்மை நிவாரணம் பெற தகுதிநீக்கம் செய்யப்​பட்டு​விட்​டனர்.
  • வேலையில்லாத மாற்றுத் திறனாளி​களும் இந்த உதவித்தொகை பெறத் தகுதி உடையவர்களே. ஆனால், மாற்றுத்​திறனாளி​களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஏதேனும் நிதி உதவி கிடைத்​தால், அவர்களும் வேலையின்மை நிவாரணம் பெற இயலாது. தனியார் துறையில் ஏதேனும் ஒரு வேலை, ஏதேனும் ஒரு சம்பளத்தில் ஒருவர் வேலை செய்தா​லும், வேலையின்மை நிவாரண நிதி பெற முடியாது. முன்பெல்லாம் இதைக் கண்டு​கொள்​ளாமல் நிவாரணத் தொகை கொடுக்​கப்​பட்டு ​வந்தது.
  • இப்போது எல்லாம் ஆதார் அட்டைகள் வழியாக இணைக்​கப்பட்ட பிறகு, தனியார் நிறுவனங்​களில் செய்யும் வேலைக்கு, சிறு தொகை வருங்கால வைப்பு நிதியாகப் பிடித்தம் செய்தா​லும்கூட, அவர் வேலையில் இருப்​ப​தாகக் கருதி வேலையின்மை நிவாரணம் மறுக்​கப்​படு​கிறது.
  • முனைவர் பட்டம் படித்து ரூ.10,000 சம்பளத்தில் சுயநிதிக் கல்லூரி​களில் காலம் தள்ளு​பவர்கள் பலர். இவர்களுக்குச் செய்யும் பிஎஃப் பிடித்தம், வேலையில் உள்ளதற்குச் சான்று பகன்று​விடும். வேலையின்மை நிவாரணம் கிடைப்பது நின்று​விடும். மிகக் குறைந்த அளவிலான நிவாரணத்​தொகைக்கு எதற்கு இத்தனை விதிமுறைகள் என்ற கேள்வி இயல்பாகவே எழும். இந்த விதிமுறை​களைப் படித்துப் பார்த்​தால், யாரும் இதைப் பெறக் கூடாது என்பதற்காக உருவாக்​கப்​பட்​டது​போலத் தோன்றும்.

என்னதான் தீர்வு?

  • 2020இல் 15 முதல் 29 வயது வரை வேலை தேடும் படலத்தில் இணைந்​திருந்​தவர்கள் 34.4%. 10ஆம் வகுப்புடன் வேலை தேடுபவர்கள் 44.8%. இதில், சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலையின்மை நிவாரணம் என்பது எப்படி ஏற்கத்​தக்கது? படித்து முடித்​தவர்கள், ஓர் அளவுக்கு மேல் படிக்க முடியாமல் போனவர்கள் ஏதேனும் ஒரு வேலையைச் செய்து பிழைக்​கிறார்கள், ஏதோ ஒரு வருமானம் ஈட்டு​கிறார்கள்.
  • இதில் எவ்வளவோ இன்னல்களை அவர்கள் எதிர்​கொள்​கிறார்கள். விலைவாசியோ பல மடங்கு ஏறிவிட்டது. வளர்ந்த நாடுகளில் உள்ள அளவு வேலையின்மை நிவாரணம் தர முடியாது என்கிற வாதம் தர்க்​கரீ​தியாக ஏற்கத்​தக்​கது​தான். எனினும், தமிழ்​நாட்டில் வேலையின்மை நிவாரணத்தொகை ரூ.200தான் என்பது எப்படிச் சரியாக இருக்​கும்? அதை உயர்த்து​வதில் அரசுக்கு ஏன் அக்கறை இல்லை? எல்லா நிபந்​தனை​களும் பொருந்​தி வந்து, அரசு கேட்கும் எல்லா சான்றிதழ்​களையும் வாங்கிக்​கொடுத்​தாலும் 40 வயது வரைதான் இந்த நிவாரணத் தொகை கிடைக்​கும். அதன் பின்னர் அவர் என்ன செய்வார், ஏன் 40 வயதுக்கு மேல் தரக் கூடாது என்ற கேள்வி​களுக்கு முறையான பதில்கள் இல்லை.
  • உரிய சட்டதிட்​டங்கள், விதிமுறைகள், பணிப் பாதுகாப்புடன் கூடிய வேலையில்லாத எல்லோருக்கும் ஒரு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசு ஒரு கொள்கை முடிவாகக் கொள்ளலாம். கௌரவமான ஊதியம், கௌரவமான வேலை இல்லாத பணிகள் அனைத்தையும் முழுமையான வேலையாகக் கருதக் கூடாது. எவ்வளவு உழைத்​தாலும் கண்ணியமான வாழ்வு வாழ முடியாத குடிமக்​களுக்கு, அரசு தன் பொறுப்பை உணர்ந்து, இத்திட்​டத்தை விரிவாக்கம் செய்ய வேண்​டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்