வேலையின்மை நிவாரண விதிகள் வேண்டும் மறுபரிசீலனை
- வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண நிதி உதவி குறித்து, இங்கு பலருக்கும் தெரியவில்லை. அந்த நிதி வழங்கப்படுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது.
- வேலையின்மை உதவித்தொகை என்பது வளர்ந்த நாடுகளில் நீண்ட காலமாகவே அமலில் இருக்கிறது. சில நாடுகளில் வேலையில் இருப்பதற்கு நிகராகவே வேலையின்மை நிவாரணமும் வழங்கப்படுகிறது. காப்பீடு, ரொக்க உதவி, கல்வி, பயிற்சி, தொழில்முனைவோர் திறன் மேம்பாடு, வீட்டு வசதி எனப் பல்வேறு பரிமாணங்கள் அதில் இருக்கும்.
- தன் குடிமக்களின், வேலையின்மைக்குத் தானே பொறுப்பு என்ற நிலையிலிருந்து இந்தப் பிரச்சினையை அரசு அணுகுவதன் பலன்கள் இவை. தமிழ்நாட்டிலும் இப்படியான உதவி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த உதவியை வழங்குவதில் அரசு முன்வைக்கும் நிபந்தனைகள்தான் விவாதத்துக்குரியவை.
நிவாரணமும் நிபந்தனைகளும்:
- ஒருவரின் வேலையின்மைக்கு, அரசின் பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், வேலையில்லாக் கால நிவாரண உதவித்தொகைத் திட்டம், 1983 இல் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அப்போது குறைந்தபட்சம் 50 ரூபாயில் தொடங்கிய வேலையின்மை நிவாரணத் தொகை, இன்று குறைந்தபட்சம் ரூ.200; அதிகபட்சமாக ரூ.600 என்ற நிலையை அடைந்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200; தேறியவர்களுக்கு ரூ.300. 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.400. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.600 என நிவாரண நிதி கிடைக்கிறது.
- மேலே குறிப்பிட்ட கல்வித் தகுதி உள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து ஐந்து ஆண்டுகள் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், சுய வேலைவாய்ப்பு என எந்த வேலை செய்துவருபவராகவும் இருக்கக் கூடாது.
- அதேபோல், அரசின் வேறு எந்த உதவித்தொகையைப் பெறுபவராகவும் இருக்கக் கூடாது. பொதுப் பிரிவினர் எனில், 40 வயதுக்குள்ளும், பட்டியல் சாதி / பழங்குடி மக்கள் எனில் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
- வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகக் கூடாது. வேலை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த நிவாரணத்தொகை உண்டு. ஆனால், அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
நடைமுறை என்ன?
- அரசு விதிகளின்படி, தமிழ்நாடு முழுவதும் வேலையின்மை நிவாரணம் பெறுவோர் சில ஆயிரம் பேர் மட்டுமே. என்ன காரணம்? படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்திருப்போர் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். இப்படிப் பதிவுசெய்து என்ன பயன் எனப் பதிவைத் தவிர்ப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
- பதிவுசெய்தவர்களில் பலர், சரியாக மூன்று ஆண்டுகளில் பதிவைப் புதுப்பிக்க மறந்துவிடுகின்றனர். மீண்டும் பதிவுசெய்வோர் எண்ணிக்கையும் குறைவு. இதன் காரணமாகப் பதிவுசெய்து வேலை இல்லாமல் இருப்பவர்களைக் காட்டிலும் பதிவுசெய்யாமல் இருக்கும் வேலைவாய்ப்பு அற்றவர்கள் அதிகம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஒருவர் பட்டப்படிப்பை முடித்து 20 வயதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து எந்த வேலையும் செய்யாமல் இருந்தால், வேலையின்மை நிவாரணம் பெறுதலுக்கான முதல் தகுதிச் சுற்றில் தேறிவிடுகிறார். ஒருவேளை, மூன்று ஆண்டுகளில் பதிவைப் புதுப்பிக்க மறந்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
- வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய முக்கியமான சான்று - குடும்ப வருமானம் ரூ.72,000ஐத் தாண்டவில்லை என்ற சான்றிதழ். வருவாய்த் துறைக்குச் சென்றால், கிராம நிர்வாக அலுவலர் ரூ.84,000க்குக் கீழ் வருமானச் சான்றிதழ் தர முடியாது என மறுத்துவிடுகிறார்.
- தமிழ்நாட்டில் வேலையின்மை நிவாரணம் அறிமுகம் செய்யப்பட்டபோது, ‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் போன்ற திட்டங்கள் இல்லை. இதில் பயன்பெறும் மகளிர் அனைவரும் வேலையின்மை நிவாரணம் பெற தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.
- வேலையில்லாத மாற்றுத் திறனாளிகளும் இந்த உதவித்தொகை பெறத் தகுதி உடையவர்களே. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஏதேனும் நிதி உதவி கிடைத்தால், அவர்களும் வேலையின்மை நிவாரணம் பெற இயலாது. தனியார் துறையில் ஏதேனும் ஒரு வேலை, ஏதேனும் ஒரு சம்பளத்தில் ஒருவர் வேலை செய்தாலும், வேலையின்மை நிவாரண நிதி பெற முடியாது. முன்பெல்லாம் இதைக் கண்டுகொள்ளாமல் நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டு வந்தது.
- இப்போது எல்லாம் ஆதார் அட்டைகள் வழியாக இணைக்கப்பட்ட பிறகு, தனியார் நிறுவனங்களில் செய்யும் வேலைக்கு, சிறு தொகை வருங்கால வைப்பு நிதியாகப் பிடித்தம் செய்தாலும்கூட, அவர் வேலையில் இருப்பதாகக் கருதி வேலையின்மை நிவாரணம் மறுக்கப்படுகிறது.
- முனைவர் பட்டம் படித்து ரூ.10,000 சம்பளத்தில் சுயநிதிக் கல்லூரிகளில் காலம் தள்ளுபவர்கள் பலர். இவர்களுக்குச் செய்யும் பிஎஃப் பிடித்தம், வேலையில் உள்ளதற்குச் சான்று பகன்றுவிடும். வேலையின்மை நிவாரணம் கிடைப்பது நின்றுவிடும். மிகக் குறைந்த அளவிலான நிவாரணத்தொகைக்கு எதற்கு இத்தனை விதிமுறைகள் என்ற கேள்வி இயல்பாகவே எழும். இந்த விதிமுறைகளைப் படித்துப் பார்த்தால், யாரும் இதைப் பெறக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுபோலத் தோன்றும்.
என்னதான் தீர்வு?
- 2020இல் 15 முதல் 29 வயது வரை வேலை தேடும் படலத்தில் இணைந்திருந்தவர்கள் 34.4%. 10ஆம் வகுப்புடன் வேலை தேடுபவர்கள் 44.8%. இதில், சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலையின்மை நிவாரணம் என்பது எப்படி ஏற்கத்தக்கது? படித்து முடித்தவர்கள், ஓர் அளவுக்கு மேல் படிக்க முடியாமல் போனவர்கள் ஏதேனும் ஒரு வேலையைச் செய்து பிழைக்கிறார்கள், ஏதோ ஒரு வருமானம் ஈட்டுகிறார்கள்.
- இதில் எவ்வளவோ இன்னல்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். விலைவாசியோ பல மடங்கு ஏறிவிட்டது. வளர்ந்த நாடுகளில் உள்ள அளவு வேலையின்மை நிவாரணம் தர முடியாது என்கிற வாதம் தர்க்கரீதியாக ஏற்கத்தக்கதுதான். எனினும், தமிழ்நாட்டில் வேலையின்மை நிவாரணத்தொகை ரூ.200தான் என்பது எப்படிச் சரியாக இருக்கும்? அதை உயர்த்துவதில் அரசுக்கு ஏன் அக்கறை இல்லை? எல்லா நிபந்தனைகளும் பொருந்தி வந்து, அரசு கேட்கும் எல்லா சான்றிதழ்களையும் வாங்கிக்கொடுத்தாலும் 40 வயது வரைதான் இந்த நிவாரணத் தொகை கிடைக்கும். அதன் பின்னர் அவர் என்ன செய்வார், ஏன் 40 வயதுக்கு மேல் தரக் கூடாது என்ற கேள்விகளுக்கு முறையான பதில்கள் இல்லை.
- உரிய சட்டதிட்டங்கள், விதிமுறைகள், பணிப் பாதுகாப்புடன் கூடிய வேலையில்லாத எல்லோருக்கும் ஒரு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசு ஒரு கொள்கை முடிவாகக் கொள்ளலாம். கௌரவமான ஊதியம், கௌரவமான வேலை இல்லாத பணிகள் அனைத்தையும் முழுமையான வேலையாகக் கருதக் கூடாது. எவ்வளவு உழைத்தாலும் கண்ணியமான வாழ்வு வாழ முடியாத குடிமக்களுக்கு, அரசு தன் பொறுப்பை உணர்ந்து, இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 08 – 2024)