- தமிழ்நாட்டில், அரசுப் பணிகளில் சேர முயற்சிக்கும் தேர்வர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் கவனம் பெறாமலேயே இருக்கின்றன. இவற்றைக் களைய, இதில் என்னென்ன பிரச்சினைகள் நிலவுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்
- வேலையில்லா நெருக்கடி அதிகரித்திருக்கிற சூழலில், மிகக் குறைவான பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு அறிவிக்கப்படுவது வேதனை. தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் துணை ஆட்சியர் தொடங்கி, அலுவலக உதவியாளர்கள் வரை 6 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை, 2023 ஆம் ஆண்டுதான் அதிகபட்சமாக 10,000 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு சரியான கால இடைவெளியில் நடைபெறுவதில்லை.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப் பணிகளுக்கு வருடாந்திரக் கால அட்டவணை வெளியிடுகிறது. அதற்கேற்பத் தேர்வர்கள் தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்வர். ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவது கிடையாது.
- தேர்வு முடிவுகளையும் மிகவும் தாமதமாக வெளியிடுகிறது. தேர்வு நடத்தி, முடிவுகள் வெளியாகிப் பணி நியமனம் வரை குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதனால், தேர்வர்களின் வயது வரம்பு உச்சத்தை அடைவதால் தேர்வை அவர்கள் தொடர்ந்து எழுத முடியாத நிலை உள்ளது.
- பள்ளிக் கல்வித் துறையில் டிஆர்பி போட்டித் தேர்வுக்கான வயது வரம்பை 40இலிருந்து 45ஆக திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசாணை (G.O 144-18/10/2021) வெளியிட்டுள்ளது. இதில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் 2023இல் பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 58 ஆகவும் 23 அக்டோபர் 2023இல் உயர்த்தப்பட்டுள்ளது.
- இதே போல் டிஎன்பிஎஸ்சி தேர்விலும் வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும். டிஆர்பி தேர்வைப் போல் தேர்வர்களின் விடைத்தாள்களின் கார்பன் நகல் (OMR சீட்) டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்வு நடத்தி ஒரு வாரக் காலத்துக்குள் தேர்வாணையம் வெளியிடும் உத்தேச விடைகளுக்கும் இறுதியாக வெளியிடப்படும் விடைகளுக்கும் ஏறக்குறைய 10 முதல் 20 கேள்விக்கான வித்தியாசம் இருப்பது தேர்வர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இப்படி நிறையப் பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றையெல்லாம் களைய, தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வு நடத்தி, வேலைவாய்ப்பற்ற 54 லட்சம் பேருக்கும் பணி வழங்கிட வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுபோல் குரூப் 1, 2, 4 ஆகிய தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துவது அவசியம்.
- குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தை 1:20 என்ற விகிதத்தில் இருந்து 1:50 என்கிற விகிதமாக மாற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். ஆணையம் நடத்தும் தேர்வுக்கான இறுதியான, உறுதியான உத்தேச விடைகளையும் இறுதிப்படுத்தப்பட்ட விடைகளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
- உறுதியான முடிவுகளை எடுத்திட டிஎன்பிஎஸ்சி ஆணையத்தில் அனைத்து உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுபோல் டிஎன்பிஎஸ்சி தேர்வும் ஆண்டுக் கால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும். பாடத்திட்டங்களை அடிக்கடி மாற்றக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 07 – 2024)