TNPSC Thervupettagam

வேளாண் சுற்றுலாவும் சுற்றுச்சூழலும்

June 17 , 2024 14 days 36 0
  • வேளாண் சுற்றுலாவானது சுற்றுச் சூழலை தாங்கிப்பிடித்து அழகு பார்க்கும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், இன்னும் சொல்லப்போனால் ‘யாதும் ஊரே’ எனும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு அர்த்தம் சேர்த்து யாவரும் உறவினர் என்பதை சொல்லாமல் சொல்கிறது. இங்கு யாவரும் உறவினர் என்பது ‘மொழி இல்லை மதம் இல்லை’ என சுற்றித் திரியும் குருவிகள் முதல் வானத்தையே எட்டிப் பிடிக்கும் புல் பூண்டு வரை நீக்கமற நிறைந்து இருக்கும் பல்லுயிர் பெருக்கம் ஆகும்.
  • கிராமத்து வாசலை பசுமை போர்த்திய கொடிகள் கொண்டு, கமழும் பூ வாசத்துடன் வசந்தம் வீச சுற்றுலாவாசிகளை வரவேற்பதில் கை தேர்ந்தது வேளாண் சுற்றுலா ஆகும். வேளாண் சுற்றுலா பண்ணைகள் குறிப்பாக காடுகளுக்கு அருகிலும், பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் அமைந்து இருக்கும் பட்சத்தில் பல்லுயிர் பெருக்கம் மற்றும் இயற்கை வழி முறைகள் காக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்துக்கு சில வேளாண் சுற்றுலா பண்ணைகளில் அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள் மற்றும் இன்னபிற உயிரினங்கள் காக்கப்பட்டு பராமரிப்புடன் இருப்பதையும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அத்துடன் வேளாண் சுற்றுலாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வழிகளும் உள்ளனு. அதாவது சூரிய மின்தகடுகளை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வது, சாணம் மூலம் எரிவாயு உற்பத்தி செய்வது போன்றவற்றை கூறலாம்.
  • விவசாயிகளும் அவர்களின் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளான நீர் பாதுகாப்பு, பொருட்கள் மறுசுழற்சி போன்றவற்றை அமல்படுத்துவதுடன் பண்ணையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை பண்ணையில் இருந்தே தயார் செய்து கொள்வது, பல வகை தாவரங்களை வளர்ப்பது என பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இன்றும் சில இடங்களில் இருக்கும் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் தங்குவதற்கு வெறும் மண் மூலம் உருவாக்கப்பட்ட பண்ணை வீடுகளுக்கு சுற்றுலாவாசிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
  • இவை ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் வேளாண் சுற்றுலாவானது மறைமுகமாக வேளாண் சுற்றுலா பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளை இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வழிவகை செய்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் செயல்படும் வேளாண் சுற்றுலா பண்ணைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவுக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை முறையே இருக்கிறது. அதன் மூலமே பூச்சி மேலாண்மையை விவசாயிகள் மேற்கொள்கின்றனர், அதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம், சுற்றுலாவாசிகள் பெரிதும் இயற்கை வழியில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதுடன் அதனை வாங்கிச் செல்லவும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதே ஆகும்.
  • அதேபோல் பண்ணையில் இருக்கும் விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் போன்றவற்றை பார்ப்பதிலும், அதன் செயல்பாடுகளை கவனிப்பதிலும் சுற்றுலாவாசிகள் நல்ல ஆர்வம் காட்டுவதுடன், பின்னாளில் அதனை அவர்களின் வீட்டில் வளர்க்கவும் முற்படுகின்றனர்.
  • சீனாவில் அதிக அளவில் இரசாயன உரம் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டால் நிலம் மற்றும் நீர் மாசுபட்டுள்ளது. இதை கட்டுக்குள் கொண்டுவர விவசாயிகளிடையே வேளாண்மை சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன் மூலம் பல விவசாயிகளும் இரசாயன உரம் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டை குறைத்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. அதாவது விவசாயிகளிடையே தகுந்த அளவில் இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் அதனை ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் மேற்கொள்வது போன்றவை வளர்ந்து உள்ளதாகவும் கூறுகிறது. அதேபோல் பெரு நாட்டில் இருக்கும் ஆண்டியன் அல்டிபிளேனோவில் வேளாண் சுற்றுலாவை காலநிலை மாற்றத்துக்கு உட்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் நிலையான உற்பத்தி, தகுந்த நிலப்பரப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு மூலம் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகுத்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்