TNPSC Thervupettagam

வேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன?

January 25 , 2021 1458 days 735 0
  • டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால், ஆம் என ஒரு வார்த்தையில் பதில் சொல்ல இயலாது.
  • அதன் உண்மையான காரணங்கள், அந்தச் சட்டங்கள் பேசும் தளத்துக்கும் அப்பாற்பட்டவை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலும் வேளாண் துறை எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவை.
  • அரசின் மூன்று சட்டங்களும், ஏற்கெனவே நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினையை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்துவிட்டன.
  • வேளாண் பொருளியல் நிபுணர் தேவேந்தர் ஷர்மா, இந்திய வேளாண் துறை மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், பொருளியல் பரிவர்த்தனைகளில் பின்தங்கிவிட்டது என்கிறார்.
  • எடுத்துக்காட்டாக, 1970-ல் தொடங்கி, அடுத்த 45 ஆண்டுகளில் வேளாண் வருமானமும், மற்ற துறை வருமானங்களும் எப்படி உயர்ந்தன என்னும் ஒப்பீட்டை அவர் முன்வைக்கிறார்.
  • 1970-ல் கோதுமையின் அடிப்படை விலை குவிண்டாலுக்கு ரூ.76. 2015-ல், அது ரூ.1,450-ஆக உயர்ந்துள்ளது. இது 19 மடங்கு உயர்வாகும்.
  • இதே காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் 120-150 மடங்கு உயர்ந்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் 170 மடங்கும், பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 320 மடங்கும் உயர்ந்திருக்கின்றன.
  • 40-50 ஆண்டு கால இடைவெளியில் உழவர்கள் ஒப்பீட்டளவில் வருமானம் மிகக் குறைந்து, இன்று 80%-க்கும் அதிகமான உழவர்கள் நஷ்டத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள். இதுதான் ஆதாரப் பிரச்சினை என்கிறார் தேவேந்தர்.

பண்ணை முறை தீர்வாகுமா?

  • இந்தப் புள்ளிவிவரத்தைச் சொன்னவுடனேயே மரபார்ந்த வேளாண் பொருளியல் நிபுணர்கள் ஓடிவந்து முன்வைக்கும் தீர்வுகள் என்ன? இந்தியாவின் வேளாண் அலகுகள் மிகச் சிறியவை. அதனால் உழவர்களால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அதனால், வேளாண்மை லாபகரமாக இல்லை.
  • எனவே, வேளாண் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பெரும் வேளாண் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும். அதை அரசு செய்ய முடியாது. எனவே, தனியார் இதில் அனுமதிக்கப்பட்டு, முதலீடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும், அப்போதுதான் உற்பத்தி பெருகும். வேளாண்மை லாபகரமாக மாறும் என்பது அவர்கள் தீர்வு.
  • உலகின் மிகப் பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா இதே கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்தது. 1970-களில் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் வேளாண் துறை ஆலோசகர் எர்ல் பட்ஸ், அமெரிக்க வேளாண் பண்ணைகள் பெரியதாக வேண்டும் – ‘பெரிதாகு, இல்லையேல் வெளியேறுஎன்னும் ஒரு கருதுகோளை முன்வைத்தார்.
  • அப்போதுதான், தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருகி லாபம் பெருகும் என்பதே அந்தக் கருதுகோளின் அடிப்படை. அதன் விளைவுகளைக் காண்போம்.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 லட்சம் பண்ணைகள் இருந்தன. சராசரி வேளாண் அலகு, 200 ஏக்கராக இருந்தது. 60-களுக்குப் பின்பு, இந்த அலகுகள் பெரிதாகி, இன்று 440 ஏக்கர் என உயர்ந்திருக்கிறது. 60 லட்சம் பண்ணைகள் என்னும் எண்ணிக்கை இன்று 15 லட்சமாகக் குறைந்திருக்கிறது. வேளாண் பொருள் உற்பத்தி 4-5 மடங்கு பெருகியிருக்கிறது.
  • இன்று மக்காச்சோளம், சோயாபீன்ஸ் ஆகியவற்றின் மிகப் பெரும் உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. ஆனால், வேளாண் வருமானம் பெருகவில்லை. இன்றைய அமெரிக்க வேளாண் வருமானத்தை, பணவீக்க அளவை நீக்கிப் பார்க்கையில், 1970-களிலிருந்து தொடர்ச்சியாக வருமானம் வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. 2006-க்குப் பின் வருமானம் உயர்ந்தது என்றாலும் 1970-களின் அளவை இன்னும் அடையவில்லை.

நஷ்டத்தில் அமெரிக்கப் பண்ணைகள்

  • 2013-க்குப் பின்பு, 50% வேளாண் பண்ணைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. அமெரிக்காவில் வேளாண் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் 26 லட்சம் பேர் (மக்கள்தொகையில் 0.8%). அமெரிக்காவில் வேளாண்மை, அதன் பொருளாதாரத்தில் 0.6% மட்டுமே பங்களிக்கிறது.
  • அமெரிக்க உழவருக்கு வழங்கப்படும் மானியம் சராசரியாக ஆண்டொன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ.44 லட்சம். ஆனாலும் 50% வேளாண் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன.
  • இந்தியாவின் சராசரி வேளாண் அலகு 2.5 ஏக்கர். இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள்தொகை கிட்டத்தட்ட 65 கோடி (மக்கள்தொகையில் 50%). இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 15%. 1950-களில் இந்திய தானிய உற்பத்தி 5.10 கோடி டன். இந்த ஆண்டு உற்பத்தி 30 கோடி டன். சராசரி இந்திய உழவர் பெறும் மானியம் வருடம் ரூ.20 ஆயிரம். இந்திய உழவர்களில் 80% பேர் நஷ்டத்தில் இயங்கிவருகிறார்கள்.
  • அமெரிக்காவில் பெரிதாகு, இல்லையேல் வெளியேறுஎன்னும் முழக்கத்துடன் பெரும் வேளாண்/பால் பண்ணைகள் உருவாகிவந்த அதே காலகட்டத்தில், வால்மார்ட் போன்ற சில்லறை விற்பனை வணிகச் சங்கிலிகள் உருவாகிவந்தன.
  • இவை பெருமளவில் வேளாண் பொருட்களை உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும். இதனால், உற்பத்தி சரியான உணவுத் தொடர்புச் சங்கிலிகள் வழியாக நுகர்வோரை அடையும். பெருமளவிலான கொள்முதல், பெரும் பொருளியல் அலகுகள் இவை இணைய, உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்னும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெரும் சில்லறை வணிகக் குழுமங்கள், பெரும் அலகுக் கொள்முதல் என்னும் அதிகாரத்தை உபயோகித்து, கொள்முதல் விலைகளைக் குறைத்து, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொண்டன.

உற்பத்தியாளருக்குப் பயனில்லை

  • உற்பத்தியாளர் வேறு, கொள்முதலாளர் வேறு என்னும் நிலையில், யாரிடம், பொருளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு அளிக்கும் தொடர்புச் சங்கிலி உள்ளதோ, அவரே, அந்தப் பலத்தை முன்னிறுத்தி, பொருளாதார பேர மேசையில் லாபத்தை அடைவார் என்பதே உண்மை. அதுவே நடந்தது.
  • இந்தச் சமநிலையில்லா பேரக் கட்டமைப்பில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் விலையில், மிகக் குறைவான சதவீதத்தையே உற்பத்தியாளர்கள் பெற முடிந்தது.
  • இந்தியாவில் ஒப்பீட்டளவில் அரசின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்கத் தனியார் மூலமாகச் சந்தைப்படுத்தப்படும் பொருட்களில் இந்தப் பிரச்சினை உள்ளது.
  •  எடுத்துக்காட்டாக மஞ்சள் போன்ற வர்த்தகப் பொருட்களில், நுகர்வோர் வாங்கும் விலையில் 30-32% மட்டுமே உற்பத்தியாளருக்குச் செல்கிறது.
  • 1939-ல், மத்திய பிரதேசம் மற்றும் பிரார் பிராந்தியத் தொழில் துறைப் பொருளியல் ஆய்வறிக்கையில், கொள்முதல் செய்பவரிடம் இருக்கும் பணமும், உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பும் ஒரே அளவாக இருந்தாலும், பேர மேசையில், கொள்முதல் செய்பவரின் பணம், அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கிறது என்றார் குமரப்பா.
  • அவரின் இந்தக் கருதுகோள் மிக முக்கியமானது. பாரம்பரியமான பொருளியல் அறிஞர்கள், இதுபோன்ற புள்ளிகளிலிருந்து தேற்றங்களை, தொழில் திட்டங்களைப் பொதுவெளியில் விவாதிப்பதில்லை.
  • இந்தப் புள்ளியிலிருந்து, சமீபத்தில் அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்கள் வழியாகத் தனியார் துறை பெரும் நிதியின் பலத்தோடு வேளாண் தொழிற்சங்கிலியில் பங்குபெறுவதை நோக்கினால், பேர மேசையில் யார் கை ஓங்கியிருக்கும் என்பதையும், ஏன் உழவர்கள் இதைச் சந்தேகப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்