TNPSC Thervupettagam

வேளாண் பட்ஜெட்: இன்னும் கடக்க வேண்டிய படிகள்

April 2 , 2023 483 days 282 0
  • சிறுதானிய ஆண்டாக 2023ஆம் ஆண்டினை ஐநா அறிவித்துள்ளது. அந்த வகையில், சிறுதானியங்களின் தேவையையும், அதில் தமிழ்நாடு அடைய வேண்டிய தற்சார்பையும் உணர்ந்து பல்வேறு வகையான சிறுதானியப் பயிர்களைமுன்னெடுப்பதற்கும், எண்ணெய் வித்துக்கள்உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மை 1.5%அளவே மேற்கொள்ளப்படும் நிலையில், அதற்கான தனிக் கொள்கைக் குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. வேளாண் பரப்பளவை அதிகரித்திடும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
  • மண் வளம் காப்பது, புவிசார் குறியீடு, மல்லிகை, பலா, மிளகாய், முருங்கை, வாழை போன்ற பயிர்களுக்காகத் தனித்தனியாக மண்டலங்களை உருவாக்குகிற அறிவிப்புகள்; தக்காளி, வெங்காயம் ஆகிய எளிதில் அழுகிவிடும் பொருள்களை ஆண்டு முழுவதும் சீராக உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது; ஒருங்கிணைந்த பண்ணை முறையை ஊக்குவிக்கக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

ஆக்கபூர்வத் திட்டங்கள்

  • அரசுப் பொறியியல் துறையில் அறுவடை இயந்திரங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதால், வெளி மாவட்ட-மாநிலத் தனியார் வைத்துள்ள இயந்திரங்களையே விவசாயிகள் முழுமையாக நம்ப வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வாடகையை நிர்ணயம் செய்தாலும் கூடுதல் வாடகை கொடுக்கும் சூழல் உள்ளது.
  • இந்தச் சூழலில், நபார்டு வங்கியின் நிதியுதவி (சுமார் ரூ.500 கோடி) மூலமாக கிராமக் கூட்டுறவு வங்கிகள் வழியே அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ப வாடகைக்கு இயந்திரங்களை வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது. மேலும், தனியார் அறுவடை, நடவு நடும் இயந்திரங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில் குறைந்த வாடகைக்கு வழங்கிட அரசு முன்வர வேண்டும்.
  • நவீனத் தொழில்நுட்பங்களைத் தவிர்க்க முடியாத சூழலில், விவசாயிகளுக்கான ‘உழவன்’ செயலி போல், ‘GRAINS’ செயலி நல்ல முன்னெடுப்பு. இளம் தலைமுறையினரை வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவதற்கு ஓர் ஊக்கியாக இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் ‘பள்ளி-பண்ணை சுற்றுலா’வும் நல்ல திட்டம்.
  • கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நாகை-திருச்சி வேளாண் தொழில் பெருந்தடத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தொழில் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன; இதற்காகத் தஞ்சாவூரில் புதிய வட்டாரப் புத்தொழில் மையம் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க அம்சம்.

செய்ய வேண்டியவை

  • காவிரிப் படுகை விவசாயிகளின் வருமானம் நிரந்தரமாக இல்லை.இயற்கைப் பேரிடர்களால் வேளாண் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். விவசாயத் தொழிலாளர்கள் கூலி வேலைக்காகப் புலம்பெயரும்அவலமும் நிலவுகிறது. இந்நிலையில், வேளாண்உற்பத்திப் பொருள்களை அடிப்படையாகக்கொண்டு தொழிற்சாலைகளும், ஏற்றுமதிமண்டலங்களும் அமைந்தால் அது இப்பகுதிமக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் கொடையாக அமையும்.
  • விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாகவோ, விவசாய அமைப்புகள் மூலமாகவோ சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாகஇருக்கும். வேளாண் தொழில் பெருந்தடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலைகள், மண்ணையும் நீரையும் காக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும்என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான மாநிலக் குழு திருத்தியமைக்கப்பட்ட நிலையில்,மாவட்டக் குழுக்கள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. குழுக்களை உடனடியாக அமைத்து,இனி அமையவிருக்கும் தொழிற்சாலைகளைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • வேளாண் தொழில் பெருந்தடத் திட்டத்துக்காகத் தனியார் நிறுவனம் தயாரித்து வேளாண் அமைச்சரிடம் வழங்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைமக்கள் மன்றத்தில் வைத்து மக்களின் கருத்துகளைப் பெற வேண்டும். காவிரிப் படுகைப் பகுதிகளில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறிய மழையால் அறுவடை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
  • இதில் அரசு வழங்கியநிவாரணம் போதுமானதாக இல்லை என்கிறகருத்தும், காப்பீடு கைகொடுக்குமாஎன்கிற எதிர்பார்ப்பும் விவசாயிகளிடம் உள்ளன.விவசாயிகளின் ஏக்கத்தைப் போக்குகிற வகையில்குறைந்தபட்ச ஆதரவுவிலை குறித்த அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
  • வேளாண் நிதிநிலை அறிக்கை சில நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றாதது சற்றே ஏமாற்றம் தந்தாலும், வேறு வகைகளில் களிப்பு தருகிறது. விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இன்னும் பல படிகளைக்கடந்தாக வேண்டும். அந்தத் தேவைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என்று நம்புவோம்.

நன்றி: தி இந்து (01 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்