TNPSC Thervupettagam

வேவு பலூன் ஜாக்கிரதை

February 15 , 2023 544 days 296 0
  • உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு "வேவு பார்க்கும் பலூன்' ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கடந்த எட்டு நாள்களில் நான்காவது முறையாக, வானத்தில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மிதவையை அமெரிக்க ராணுவ ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. அந்த மிதவை குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
  • ஜனவரி மாத இறுதியில் ராட்சச சீன பலூன் ஒன்று அமெரிக்க வான்வெளியில் பறந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அந்த பலூன் குறித்த விசாரணையில் பென்டகன் (அமெரிக்க ராணுவத் தலைமையகம்) இறங்கியது. கடைசியில் பிப்ரவரி 4-ஆம் தேதி தென் கரோலினா கடற்கரையையொட்டி கடலின் மீது சீன பலூன் பறந்துகொண்டிருந்தபோது எஃப்-22 ராணுவ ஜெட் அதன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வீழ்த்தியது.
  • மூன்று பேருந்துகள் அளவிலான கூடை அந்தப் பலூனுடன் இணைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் தகவல் பரிமாற்றத்துக்காக பல ஆன்டெனாக்கள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் பென்டகன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அது சீனாவிலிருந்து பறக்கவிடப்பட்ட பலூன் என்பதும் உறுதியாகி இருக்கிறது. அமெரிக்காவின் மீது பறந்த பலூனுக்கும் தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறும் சீன அரசு, வானிலை ஆய்வுக்காக சீன ஆய்வாளர்களின் தன்முனைப்பு முயற்சியாக இருக்கக்கூடும் என்று விளக்கம் அளித்திருக்கிறது.
  • பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி அலாஸ்காவில் மேலும் ஒரு ராட்சத பலூன் அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அடுத்த நாளே கனடாவின் யூகான் பிரதேசத்தில் சீன பலூனைவிட சற்று சிறிய மிதவையொன்று உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் அதுவும் வீழ்த்தப்பட்டது. பயணிகள் விமானத் தேவைக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் என்று கருதி வீழ்த்தியதாக கனடா தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி 12-ஆம் தேதி மற்றொரு பறக்கும் மிதவை வீழ்த்தப்பட்டது.
  • முதலாவது ராட்சத பலூன் சீனாவுடையது என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால் ஏனைய மூன்று மிதவைகளும், அவற்றின் நோக்கமும், பயணத் திட்டமும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. தென் கரோலினா கடற்கரைப் பகுதியிலும், மெக்ஸிகன் ஏரியிலும் விழுந்திருக்கும் உதிரி பாகங்கள் தேடப்படுகின்றன.
  • பலூன்கள் மூலம் வேவு பார்ப்பது என்பது பழைய காலங்களில் வழக்கமாக இருந்தது. 1794-இல் ஆஸ்திரிய டச்சு துருப்புகளின் நடமாட்டத்தை பிரெஞ்சு ராணுவம் பலூன்களில் இணைக்கப்பட்ட கண்காணிப்புக் கருவிகளின் மூலம் வேவு பார்த்தது பதிவாகியிருக்கிறது. விமானங்கள், விண்கோள்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பலூன்கள் மூலம் வேவு பார்ப்பது கைவிடப்பட்டது.
  • வெளிநாடுகளில், குறிப்பாக, அமெரிக்க விண்வெளியிலும் வேவு பார்க்கும் பலூன்களை சீனா அனுப்புவது புதிதொன்றும் அல்ல. முந்தைய டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இதுபோல பலமுறை பலூன்கள் தென்பட்டிருக்கின்றன. 2022-இல் மட்டும் 163 பலூன்களோ, பலூன் போன்ற மிதவைகளோ தென்பட்டதாக பென்டகன் தெரிவிக்கிறது.
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் வடக்குப் பகுதியில் அடையாளம் தெரியாத மிதவையொன்று தென்பட்டது. அது சீனாவின் வேவு பார்க்கும் மிதவையாக இருக்கக்கூடும் என்று கருதி அதை வீழ்த்த முற்பட்டது ஜப்பான். அதற்குள் விண்வெளியில் அந்த மிதவை மறைந்துவிட்டது.
  • இந்தியாவின் அந்தமான் - நிகோபர் தீவுகளில் இதுபோல மிதவைகளும், பலூன்களும் அடிக்கடி காணப்படுவதாக சொல்லப்படுகிறது. போர்ட்பிளேர் அருகில் பலூன் போன்ற ஒன்று கடந்த ஆண்டு தென்பட்டது. அது வானிலை ஆய்வுக்காக ஏவப்பட்டிருக்கலாம் என்று கருதி அதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
  • வேவு பார்ப்பதும், உளவில் ஈடுபடுவதும் சீனாவுக்குப் புதிதல்ல. ஷென்ஷெனில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவின் 10,000 முக்கிய பிரமுகர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்கள் அறியாமல் சேகரித்திருப்பது 2020-இல் நடந்த விசாரணையில் தெரிய வந்தது. அந்நிய நாடுகளின் முக்கியமான தரவுகள் சீனாவால் சேகரிக்கப்படுகின்றன. அதனால் பலூன் மூலம் வேவு பார்ப்பது சீனாவின் வழிமுறைகளில் ஒன்றாக இருக்கக்கூடும்.
  • 3,400 விண்கோள்களையுடைய அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 500 விண்கோள்களுடன் உலகின் இரண்டாவது பெரிய விண்வெளி சக்தியாகத் திகழ்கிறது சீனா. நாள்தோறும் சீன விண்கோள்கள் அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது விண்கோள் வேவு நடத்தி புகைப்படங்கள் எடுப்பதும், தகவல்களைச் சேகரிப்பதும் புதிதல்ல.
  • விண்வெளியில் மட்டுமல்லாமல் கடல் வழியிலும் சீனாவின் வேவு பார்த்தல் நடக்கிறது. வியத்நாம் கடல் பகுதியில் சீனாவின் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்கள் தென்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேவு பார்க்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல் நங்கூரமிட்டது நினைவிருக்கலாம்.
  • வானிலை ஆய்வு என்கிற பெயரில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது, சீனா பலூன்களை அனுப்புகிறது என்று ஏற்கெனவே அமெரிக்கா நம்மை எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவே விதிவிலக்கல்ல எனும்போது சீனாவின் செயல்பாடுகள் குறித்து இந்தியா கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. ஏற்கெனவே சீனாவின் எல்லையோரத் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனால் சீனாவின் நிலம், நீர், காற்று வழியிலான மூன்று வகைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தாக வேண்டும்.

நன்றி: தினமணி (15 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்