TNPSC Thervupettagam

வைக்கம் போராட்டம் கற்றுத்தரும் வரலாற்றுப் பாடம்

March 31 , 2023 486 days 549 0
  • சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைவிடப் பேரவலம் எதுவும் இல்லை. சாதிப் படிநிலைகளில் ஊறிப்போன சமூகமாக அறியப்படும் இந்தியாவில், அந்த அவலம் நிறுவனரீதியாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது பெரும் துயரம்.
  • அந்த வகையில், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நடமாடக் கூடாது என 1920களில் நிலவிய தடைக்கு எதிரான போராட்டம், இந்தியாவின் சமூக நீதிப் பாதையில் மிக முக்கியமான மைல்கல். அந்தப் போராட்டத் தொடக்கத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுவது, இன்றைக்கும் சாதிப் பிரிவினைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் மிக முக்கியமானது.
  • மகாத்மா காந்தி, பெரியார், நாராயண குரு எனப் பெருந்தலைவர்களின் பங்களிப்புடன் நடந்த வைக்கம் போராட்டம், மிக முக்கியமான சமூகப் போர் என்றே சொல்ல வேண்டும். காந்தியின் ஆலோசனைப்படி போராட்டக் குழுவினர் இயங்கினர். சாதியின் அடிப்படையில் இந்து மதத்துக்குள் நிகழ்ந்த அடக்குமுறையை இந்துக்களின் மனசாட்சிக்கு முன்னர் மிகப் பெரிய கேள்வியாக முன்வைத்ததிலும், பிற மதத்தினரின் தலையீட்டால் போராட்டம் திசைதிரும்பாமல் பார்த்துக்கொண்டதிலும் காந்தியின் பங்கு மிகப் பெரியது.
  • ஒருகட்டத்தில் மக்களிடம் எழுச்சியை உருவாக்க, செயல்திறன் மிக்க ஒரு தலைவரின் தேவை எழுந்ததால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது வருகைக்குப் பின்னர் வைக்கம் போராட்டம் புதிய வடிவம் பெற்றது.
  • ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர் முன்னெடுத்த போராட்டம் பெரும் வெற்றி பெற்றது. அவரது துணைவி நாகம்மையாரும் இந்தப் போராட்டத்தில் தீரத்துடன் பங்கெடுத்தது, சமூக நீதிப் போராட்டக் களத்தில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியச் சான்று.
  • நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த பேரியக்கமான காங்கிரஸ், வைக்கம் போராட்டத்தில் முதன்மைப் பங்கெடுத்தது. மிக முக்கியமான சமூகச் சீர்திருத்தவாதியான நாராயண குருவும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தார். ராஜாஜி, வினோபா பாவே எனப் பல தலைவர்கள் இப்போராட்டத்துக்குத் துணைநின்றனர்.
  • தொடர்ச்சியான போராட்டத்துக்குப் பின்னர், மூன்று தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நடமாடலாம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. இது முழுமையான தீர்வு இல்லைதான் என்றாலும், பின்னாள்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு வைக்கம் போராட்டம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பட்டியல் சாதி மக்களின் விடுதலைக்காக உழைத்த அம்பேத்கரும் வைக்கம் போராட்டத்தால் உத்வேகம் பெற்றவர்தான்.
  • கேரளத்தில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில், இன்றைய காலகட்டத்திலும் பட்டியல் சாதியினரின் கோயில் நுழைவு நிகழ்வு அரசால் நடத்தப்பட வேண்டிய சூழல் நிலவுவதும், அதற்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுவதும் சமகால அவலங்கள். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில், இதுபோன்ற சாதிய அவலங்களுக்கு முடிவுகட்ட தமிழ்நாடு அரசும் மக்களும் உறுதியெடுக்க வேண்டும்!

நன்றி: தி இந்து (31 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்