TNPSC Thervupettagam

வ‌ங்​கி‌த் தொழி‌ல் வேறு கா‌ப்​பீ‌ட்​டு‌த் தொழி‌ல் வேறு

February 21 , 2022 896 days 387 0
  • பொதுவாக, மக்களின் நிதியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது வழக்கம்.
  • ஆதலால்தான் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • நம் நாட்டில் வங்கிகள் பயன்பாட்டிற்கு வந்த நாளிலிருந்தே "பேங்க் கேரண்டீஸ்' என்றழைக்கப் படும் வங்கிகளின் உத்தரவாதங்கள் வங்கிகளால் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
  • இந்த வங்கி உத்தரவாதங்கள் பலவகைப்படும். பொதுவாக இவை பைனான்ஷியல் கேரண்டீஸ், டெபர்டு பேமென்ட் கேரண்டீஸ், பர்ஃபாமன்ஸ் கேரண்டீஸ் ஆகிய வகைகளில் அடங்கும்.
  • உதாரணமாக, அரசுத்துறையில் கான்ட்ராக்ட் எடுத்த ஒருவர் சரியான முறையில் அந்த ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும்.
  • அவ்வாறு செய்யத் தவறினால் வங்கி அவர் சார்பில் அரசுக்கு கொடுத்த கியாரன்டியை உபயோகித்து தொகையை அரசு பெறும்.
  • வங்கிகள் இவ்வாறு வழங்கும் உத்தரவாதங்கள் "நான் ஃபண்டு பேஸ்டு' நிதி உதவி என்று சொல்லப்படும். ஏனெனில் முதலில் வங்கிகள் வழங்குவது வெறும் உத்தரவாதம் மட்டுமே. எந்த நிதியையும் அவை வழங்குவது கிடையாது.
  • ஆனால் பின்னர் அந்த உத்தரவாதங்களின் அடிப்படையில் பயனாளி பணம் கேட்டு கோரிக்கை விடுக்கும்போது, வங்கிகள் பணம் செலுத்துவதால் அதுவும் ஒரு கடன் கணக்காவே ஆகும்.
  • பின்னர் வங்கிகள் அந்தத் தொகையை தங்களின் வாடிக்கையாளரிடமிருந்து வசூல் செய்து கொள்ள வேண்டும்.

நல்லதும் அல்ல தேவையும் அல்ல

  • கியாரண்டியின் பேரில் பணம் கொடுத்த நாளிலிருந்து வசூல் செய்யும் நாள் வரையில் வங்கிகள் வட்டியையும் வசூலிக்கும்.
  • டெபாசிட்டரிடமிருந்து பெறப்பட்ட தொகையினை இதற்கு வங்கிகள் பயன்படுத்துவதால் இந்த செயல்பாடு நிதி இடைநிலை (பைனான்ஷியல் இன்டர்மீடியேஷன்) எனப்படும்.
  • எனவே கியாரண்டி வழங்கும்போது "நான் ஃபண்டு பேஸ்டு' ஆக இருந்த கணக்கு பயனாளி தொகையை கோரினால் "பண்டு பேஸ்டு' ஆக மாறும் சாத்தியக்கூறு உண்டு.
  • ஆதலால் வங்கிகள் கியாரண்டி வழங்குவதற்கு முன்னால் கடன் வழங்குவதற்கு எப்படி செயல்படுமோ அதுபோலவே வாடிக்கையாளரைப்பற்றி நன்கு அலசி ஆயார்ந்து புரிந்து கொள்ளும்.
  • மேலும் ஒரு தொகையை மார்ஜின் பணமாகவும் சரியான மதிப்புள்ள சொத்தினை பிணையாகவும் பெறும்.
  • கியாரன்டிக்கான கமிஷனையும் பெறும். வங்கிகள் "கவுன்ட்டர் கியாரண்டி' என்ற பெயரிலான ஒரு ஒப்பந்தத்தையும் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) ஷ்யூரிட்டி காப்பீட்டு ஒப்பந்தங்கள் வழிகாட்டுதல்கள், 2022, ஜனவரி 3 அன்று வெளியிட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்கள் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளால் வழங்கக் கூடிய அட்வான்ஸ் பேமென்ட் பாண்ட், பிட் பாண்ட், காண்ட்ராக்ட் பாண்ட், கஸ்டம்ஸ் மற்றும் கோர்ட் பாண்ட், பர்ஃபாமன்ஸ் பாண்ட் மற்றும் ரிடென்க்ஷன் மணி ஆகியவை தொடர்புடையது.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் கியாரண்டிக்கு பதிலாக இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் ஷ்யூரிட்டியை அரசு நிறுவனங்கள் அங்கீகரிக்கும் என்று அண்மையில் தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் பலவிதமான வங்கிகள் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை கியாரண்டி வழங்க அரசு அனுமதிப்பது என்பது புரியாத புதிராக உள்ளது.
  • இந்த கியாரண்டி வர்த்தகத்தில் உள்ள நுணுக்கங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ சரியாகப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
  • இன்றைய கியாரண்டி என்பது, நாளைய கடன் கணக்காக மாற வாய்ப்பு உள்ளதால், இந்த கியாரண்டி தொழில் வங்கிகளை சார்ந்தது. இதற்கும் இன்ஷூரன்ஸ் வர்த்தகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • அவ்வாறு இருக்கும்போது வங்கித்தொழிலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை நுழைக்க முனைவது எதற்காக? எந்த வங்கியும் இன்ஷூரன்ஸ் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப் படுவதில்லை.
  • வங்கிகள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சார்பில் மட்டுமே இன்ஷூரன்ஸ் ஸ்கீம்களை விநியோகிக்க முடியும் (டிஸ்ட்ரிபியூஷன்).
  • வங்கிகளுக்கு கியாரண்டி வழங்க ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு, பத்து வருடங்களுக்கு உட்பட்டு மட்டுமே கியாரண்டி வழங்க முடியும். அதற்கு, போதுமான மார்ஜின் தொகையையும், சொத்து பிணையையும் பெறவேண்டும்.
  • எந்த நோக்கத்திற்காக கியாரண்டி வழங்கலாம் என்பதற்கும் வழங்கக்கூடாது என்பதற்கும் வரைமுறைகள் உண்டு.
  • சொத்து ஈடு இல்லாமல் வழங்குவதற்கும் வரைமுறை உண்டு. மேலும் ஒரு கியாரண்டியின் மீது பயனாளி தொகையை கோரினால் உடனடியாக அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய கடமை வங்கிகளுக்கு உண்டு.
  • தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.ஆர்.டி.ஏ.ஐ வழிகாட்டுதல்களில் இதுபோன்று எந்த நிபந்தனைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • முக்கியமாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கியாரன்டியின் மீது பயனாளி தொகை கோரினால் அதை எப்படிக் கையாளும் என்பது குறித்தும், பின்னர் அந்த பணத்தை எப்படி வசூல் செய்யும் என்பது பற்றியும் எந்த அறிவுறுத்தலும் இல்லை.
  • வங்கிகள் கியாரண்டி வழங்குவது பெரும்பாலும் அவர்களிடம் ஏற்கனவே பல கடன் கணக்குகளை பராமரிப்பவர்களின் கோரிக்கையின் பேரிலேயே.
  • அதுபோன்ற கடன்களுக்கு வங்கிகள் முன்னதாகவே சில சொத்துகளை அடமானமாக பெற்றிருக்கும். அதே சொத்துகளை கியாரண்டிகளுக்கும் அடமானமாக நீட்டிக்கும்.
  • மேலும் வாடிக்கையாளருடன் பல வருடங்கள் தொடர்பில் உள்ளதால், வாடிக்கையாளரின் வர்த்தகப் போக்குகளை பற்றி வங்கிகள் நன்கு அறிந்திருக்கும்.
  • ஆதலால் வங்கிகள் விரைவாகவும் சிறப்பாகவும் கியாரண்டி வழங்க முடியும்; கியாரண்டியின் மீது பணம் வழங்கினால் அதை வசூல் செய்யவும் முடியும்.
  • இதுபோன்ற எந்த சிறப்பு அம்சமும் இல்லாத இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை வங்கிகளின் செயல்பாட்டுக்குள் நுழைய விடுவது நல்லதல்ல; தேவையும் அல்ல.

நன்றி: தினமணி (21 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்