TNPSC Thervupettagam
March 7 , 2022 882 days 425 0
  • மார்ச் 4, 2022. கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி, பல ஆண்டு களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று ஆஸ்திரேலிய அணி ஆடவிருந்த முதல் ஆட்டம், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க நாள் என கிரிக்கெட் உலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
  • கொண்டாட்டம் மிக்கதாக அந்த நாள் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னின் மறைவுச் செய்தியால், பெரும் துயரத்தைக் கொடுத்த நாளாகவே அது மாறிப்போனது.
  • 52 வயதில் நிகழ்ந்த வார்னின் மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையுமே உறைந்து போக வைத்திருக்கிறது. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • சிறு வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரபல முகத்தின் மூலமே கிரிக்கெட் அறிமுகமாகியிருக்கும். சிலருக்கு கபில்தேவ் மூலமும் சிலருக்கு சச்சின் டெண்டுல்கர் மூலமும் என அந்தந்தத் தலைமுறைக்கு ஏற்ப இந்த முகங்கள் மாறும்.
  • அவர்களைப் பற்றிய ஆச்சரியமிக்க கதைகளை மூத்தோர்கள் மூலம் கேட்டு, அந்த முகத்துக்காகவே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கி, அவர்கள் மூலம் மற்ற வீரர்களும் கிரிக்கெட்டின் நுணுக்கங்களும் நமக்கு அறிமுகமாகியிருக்கும்.
  • கிரிக்கெட் எனும் பரவச உலகத்துக்குள் நுழைவதற்கான திறவுகோல்களாக விளங்கிய இத்தகைய முகங்களில், ஷேன் வார்னின் முகமும் முக்கியமானது.
  • 90-களில் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்களின் நினைவடுக்குகளில் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதிகளை ஷேன் வார்ன் ஆக்கிரமித்திருப்பார்.
  • “இதோ ஷேன் வார்ன் இங்கிலாந்தில் தனது முதல் பந்தை வீச இருக்கிறார். ஓ... வீசிவிட்டார். அவர் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டார். மிக அற்புதமான ஒரு பந்தின் மூலம் தொடங்கினார். மைக் கேட்டிங்குக்குத் தனது விக்கெட் எப்படி வீழ்ந்ததென்றே தெரிய வில்லை. இன்னமும் என்ன நடந்ததென்பது அவருக்குப் புரியவே இல்லை.”

மந்திரச் சுழலோன்!

  • 1993-ல் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மைக் கேட்டிங்குக்கு எதிராக 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்தை ஷேன் வார்ன் வீசியபோது, வர்ணனைப் பெட்டியில் ஒலித்த ரிச்சி பெனாடின் குரல் இது. மைக் கேட்டிங்குக்கு மட்டுமில்லை...
  • ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆலன் பார்டர், ஆஸ்திரேலிய வீரர்கள், மான்செஸ்டரில் கூடியிருந்த ரசிகர்கள் என யாருக்குமே என்ன நடந்ததென்று புரியவில்லை.
  • அப்படி ஒரு மாயாஜாலத்தை அந்தப் பந்து நிகழ்த்தியிருந்தது. லெக் ஸ்டம்புக்கு வெளியே தள்ளி பிட்ச் ஆன பந்து அசாத்தியமானதொரு விதத்தில் திரும்பி ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது.
  • மட்டையாளர்களுக்கு மட்டுமே சாதகமாகிப்போன இன்றைய கிரிக்கெட் சூழலில் நவயுக வீரர்கள் நினைத்துக்கூடப் பார்த்திட முடியாத சுழல் அது.
  • அந்த ஒரு பந்து ஷேன் வார்னின் கிரிக்கெட் பயணத்திலுமே பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியின் நிரந்த ஸ்பின்னராக ஷேன் வார்ன் மாறிப் போனார்.
  • மாயவித்தைக்காரர்கள் பார்வையாளர்களை ஏமாற்றுவதற்கே பயன்படுத்தும் மந்திரக் கோலைப் போல ஷேன் வார்ன் தன்னுடைய மணிக்கட்டைப் பயன்படுத்தினார்.
  • மைக் கேட்டிங் விழுந்த அதே வலையில் ஒட்டுமொத்தமாக 708 மட்டையாளர்கள் வீழ்ந்தனர். டெஸ்ட் மட்டுமில்லை, ஒருநாள் போட்டியிலும் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
  • குறிப்பாக, 1996 மற்றும் 1999 உலகக்கோப்பைத் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் ஷேன் வார்ன் வீசிய பந்துகள் ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தன.
  • 1999 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபோது இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஷேன் வார்னுக்கே சென்றிருந்தது. அந்தத் தொடரிலும் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக வார்ன்தான் இருந்தார்.
  • கிரிக்கெட் உலகைக் கட்டி ஆண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது பிடியை மெதுவாக இழக்கத் தொடங்க, அந்த இடத்தை ஆஸ்திரேலிய அணி நிரப்பத் தொடங்கியது.
  • எந்த அணியாலும் வீழ்த்த முடியாத ஒரு அணியாக ஆஸ்திரேலியா உயர்ந்தது. அந்த ஆதிக்கத்துக்கு ஷேன் வார்னும் மிக முக்கியக் காரணம்.
  • 2003-06 காலகட்டத்தில் ஷேன் வார்ன் எடுத்த விக்கெட்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் இது புரியும்.
  • லெக் ஸ்பின்னில் அவர் காட்டிய ஒழுங்கு அவரது செயல்பாடுகளில் அவ்வளவாக வெளிப்பட்டதில்லை. சூதாட்டக்காரர்களுடனான தொடர்பு, தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்ட விவகாரம் என எக்கச்சக்கச் சர்ச்சைகளில் சிக்கினார்.
  • பயிற்சியாளர் ஜான் பியூக்கானன் மற்றும் அணித் தலைவர் ஸ்டீவ் வா இருவரின் காலத்திலும் ஆஸ்திரேலியா ஆகச் சிறந்த வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்தது.
  • ஆனால், இந்த இருவருடனுமே வார்னுக்கு நல்ல உறவு இருந்ததில்லை. ஓய்வுக்குப் பிறகுமே இருவரின் மீதும் அடுக்கடுக்காக விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருந்தார்.
  • ஆனால், தன்னிடம் எக்காலத்துக்குமான ஒரு அணியைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அதில் ஸ்டீவ் வா கட்டாயம் இடம்பெறுவார் என்றும் பேசுவார். அதுதான் ஷேன் வார்ன்.
  • அவரின் சுழலைப் போலவே அவரின் மனதைப் படிப்பதும் கடினமான காரியமே. சச்சின் Vs வார்ன், லாரா Vs வார்ன் என கிரிக்கெட் பயணம் முழுவதும் எதிரெதிர் துருவங்களில் வைத்துப் பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் இருவருடனுமே ஷேன் வார்ன் நல்ல நட்பிலேயே இருந்தார்.
  • தன்னுடைய தலைமுறையில் தான் பார்த்து வியந்த இரண்டு வீரர்கள் என சச்சினையும் லாராவையுமே வார்ன் குறிப்பிடுவார். “உங்கள் மனதில் இந்தியாவுக்கென்று தனி இடம் உண்டு. அதேமாதிரி, இந்தியர்களின் மனதிலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு” எனத் தனது இரங்கல் குறிப்பில் வார்ன் குறித்து சச்சின் குறிப்பிட்டிருந்தார்.
  • சச்சினின் பாசமிக்க எதிரியாக மட்டுமில்லாமல், ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனில் இளம் வீரர்களால் சூழப்பட்டிருந்த ராஜஸ்தான் ராயல் அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்த அணித் தலைவராகவும் இந்திய ரசிகர்களின் மனதை ஷேன் வார்ன் கொள்ளை கொண்டார்.
  • கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஒதுங்கிய பிறகும் வர்ணனையாளராக, தொகுப்பாளராக, பயிற்சியாளராக, ஆலோசகராக என கிரிக்கெட் சார்ந்த விஷயங்களிலேயே அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
  • வழக்கமான பணியிலிருந்து ஓய்வெடுப்பதற்காக தாய்லாந்து சென்ற இடத்தில் இறப்பை எட்டியிருக்கிறார்.
  • ஜீரணிக்கவே முடியாத துயரம் இது. ஷேன் வார்னின் அசாத்தியமான சுழலும் எதையும் சாதிக்க முடியும் என்கிற உடல்மொழியும் என்றைக்கும் நினைவுகளில் சுழன்றுகொண்டே இருக்கும்!

நன்றி: தி இந்து (07 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்