TNPSC Thervupettagam

ஸ்டெர்லைட் ஆலை : வரவேற்கத்தக்க தீர்ப்பு

March 5 , 2024 140 days 123 0
  • தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் தொடங்குவதற்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவு சுற்றுச்சூழல் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுகளிலிருந்து மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
  • எனவே, ஆலையை மூட வலியுறுத்தி 2018இல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 28 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடி, சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.
  • இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என 2020இல் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  • இந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு, வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
  • இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஆலையால் விளைந்த சுற்றுச்சூழல் மாசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் கிடைத்த நீதியும்கூட.
  • ஸ்டெர்லைட் ஆலை மேற்கொண்ட விதிமீறல்களின் அடிப்படையில் இந்த முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கழிவுகளைக் கையாண்ட விதம் குறித்த அதிருப்தியையும் நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்தியாவின் தாமிரத் தேவைக்கு அந்நிய நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதைவிட ஆலையைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதாரமே மிகவும் முக்கியமானது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமைகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
  • ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எப்படியெல்லாம் பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்த தமிழ்நாடு அரசும், அரசு சார்பில் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
  • அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் விஷயத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது கடமையை முழுமையாகச் செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது, கவனிக்கத்தக்கது. இனிமேலாவது சுற்றுச் சூழல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பணிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதை உணர்ந்து, தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும், ஆலைக் கழிவுகளைக் கையாள்வதில் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்