TNPSC Thervupettagam

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அறிக்கையும் நம்பிக்கையும்

October 26 , 2022 654 days 397 0
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது, மே 22 - 2018 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அக்டோபர் 18 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேருக்குப் பலத்த காயமும் 64 பேருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டன. இது தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கை 3,000 பக்கங்களுக்கு மேல் நீள்கின்றன. ‘ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மட்டுமே காவல் துறை துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிடப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • நூறாவது நாளை எட்டிய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கையாள்வதில், அதிகாரிகளுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஓடிச் சென்றவர்கள், நீண்ட தொலைவிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் சுடப்பட்டு இறந்திருப்பதாகவும் காவல் துறையினர் மறைந்திருந்து போராட்டக்காரர்களைச் சுட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இறந்தவர்களின் பிணக்கூறாய்வு அறிக்கைகளும் இந்தக் குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப் போகின்றன.
  • ஒரு நீண்ட துப்பாக்கியைச் சுமந்துகொண்டு, ஆர்வத்துடன் ஒரு காவலர் நடந்து சென்று நான்கு வெவ்வேறு இடங்களில் 17 முறை சுட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. களத்தில் இருந்த காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் கையாள்வதற்குப் பயிற்சி பெற்றிருக்கவில்லை. காலில் சுடுவதற்குப் பதிலாக அனைவரும் இடுப்புக்கு மேல் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
  • இதுபோன்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல் துறை எடுக்கும்போது தயார்நிலையில் இருக்க வேண்டிய முதலுதவி வசதிகள், ஆம்புலன்ஸ் என எதுவும் இருக்கவில்லை. அதோடு, அன்றைய தூத்துக்குடி ஆட்சியரும் மாவட்ட நிர்வாகமும் கடமை தவறியிருப்பதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் அருணா ஜெகதீசன் பரிந்துரைத்துள்ளார். ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைவிடக் கூடுதலாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
  • எல்லாவற்றுக்கும் மேலாக உள்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் அறிந்துகொண்டதாகச் சொன்னதற்கு மாறாக, அங்கு நடந்தவை குறித்து அவருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தகவல்கள் தரப்பட்டன என்று அன்றைய தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் அளித்த வாக்குமூலங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதை முன்வைத்து பழனிசாமியை விசாரணைக்கு உட்படுத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
  • நியாயம் கிடைக்குமா? - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை ஒட்டி தூத்துக்குடி ஐ.ஜி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள்மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அக்டோபர் 19 அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்று கூறினார்.
  • திமுக ஆட்சி அமைத்த பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன என்பதையும் கைது செய்யப்பட்ட 96 பேருக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
  • அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையைச் சார்ந்த மூன்று வருவாய்த் துறை அதிகாரிகள், அப்போதைய தென்மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார் ஆய்வாளர், ஏழு காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கான பணிகள் தொடங்கியிருப்பதை விவரித்தார். துப்பாக்கிச் சூட்டில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக ரூ.5 லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
  • ஆனால், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவலர்கள், உத்தரவிட்ட உயரதிகாரிகள் ஆகிய அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே உயிரிழப்புகளை எதிர்கொண்ட குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு. அருணா ஜெகதீசன் ஆணையமும் குற்றவியல் நடவடிக்கைக்கான முகாந்திரத்தை நிராகரிக்கவில்லை. ‘குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்’ என்று முதல்வர் கூறியிருப்பது நம்பிக்கை அளித்தாலும், முதல்வரோ அரசுத் தரப்பிலிருந்தோ குற்றவியல் நடவடிக்கை குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை.
  • ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் அரசு ஏற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், 13 பேரின் உயிரைப் பறித்து தமிழ்நாட்டையே கொந்தளிக்கவைத்த கொடிய சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு. இந்தப் பின்னணியில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான சாத்தியங்கள் அனைத்தையும் அரசு பரிசீலிக்க வேண்டும். துறைரீதியான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உயிரையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்தோருக்கு முழுமையான நியாயம் கிடைப்பதை உறுதிசெய்வது, திமுக அரசின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையை வலுப்படுத்தும்.

நன்றி: தி இந்து (26 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்