TNPSC Thervupettagam

ஸ்வீடன் பாணி, பிரிட்டன் பாணி: எது நமக்கு வேண்டும்?

May 14 , 2020 1532 days 724 0
  • கரோனா தொடர்பான அடுத்த கட்ட விவாதத்துக்குள் நுழைந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ஸ்வீடன் பேசுபொருளாகியிருக்கிறது.
  • ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து இப்போது நாம் பேசத் தொடங்கியிருக்கும் சூழலில் ஊரடங்கே இல்லாமல் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது ஸ்வீடன்.
  • அப்படியே அதற்கு எதிர்த்திசையில் பயணித்தது பிரிட்டன். இதில் யாருடைய உத்தி சிறந்தது? இப்படி ஒரு விவாதம் உலகம் முழுக்கச் செல்கிறது.

ஸ்வீடன் வழி

  • ஸ்வீடன் தனித்து நிற்கிறது. இதற்கு முன்பு கொள்ளைநோய்கள் எப்படிப் பரவின, எப்படி அடங்கின என்பதை அது ஆராய்ந்தது. மக்களிடையே பரவும் அதே வியாதி, அவர்களில் வலுவானவர்களிடம் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கிறது, அத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால் அது அப்படியே சமூகத்துக்கு அடங்கிவிடுகிறது என்று வரலாறு சுட்டிக்காட்டியது.
  • விளைவாக, மக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை விழிப்போடு செயல்படச் சொல்லி தொடர் செயல்பாட்டை அனுமதித்தது ஸ்வீடன்.
  • பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தன; பள்ளிகள் இயங்கின; பூங்காக்களையும் உடற்பயிற்சி நிலையங்களையும் உணவகங்களையும்கூட திறந்தே வைத்தது; கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் செயல்பட்டன.
  • இயல்பு வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொன்னது. ஆனால், சுகாதாரத் துறை முழு விழிப்போடு செயல்பட்டது; மருத்துவமனைகள் எல்லா வகையிலும் தயாராக இருந்தன.
  • ஸ்வீடனின் யதார்த்தமான முடிவுக்குக் காரணம் தொற்றுநோயியல் நிபுணர் ஜோஹன் கீசெக். உலக சுகாதார நிறுவனத்துக்கே ஆலோசகர். அவர் சொன்னார்: “கணிசமானவர்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் பெருக வேண்டும். அதுவே சமூகத் தடுப்பாற்றலாக மாறும். தடுப்பூசி இல்லாத நிலையில் இதுவே நோயைத் தணிப்பதற்கான வழி. இன்னும் சில காலம் கழித்து இதே நோய்க்கிருமி இன்னும் அதிக ஆற்றலோடு திரும்பினால் அதை எதிர்கொள்ள மக்களிடையே வளர்ந்த சமூகத் தடுப்பாற்றல்தான் உதவும். எனவே, பலர் கிருமித்தொற்றுக்கு ஆளாவது அவசியம். அதேவேளையில், பாதுகாப்பான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நோயில் சிக்கினாலும் மீட்டுவிட முடியும்.”
  • பிரிட்டன் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், அந்த முடிவை எடுக்க நிறைய நாட்களை எடுத்துக்கொண்டது.

பிரிட்டன் வழி

  • இது முழுமையாக பிரிட்டன் வழி என்று கூறிட முடியாது; முன்னதாக சீனாவும் இத்தாலியும் சென்ற வழிதான் என்றாலும், சுகாதாரச் செயல்பாடுகளில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றான பிரிட்டன் இந்த முடிவை எடுத்தது உலகின் வேறு பல நாடுகள் இதே முடிவை நோக்கிச் செல்ல ஒரு திசைகாட்டியானது.
  • பிரிட்டனில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கினர். ஆனாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. வேலையிழந்தவர்கள், வருமானமிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
  • லண்டனில் உள்ள இம்பீரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீல் பெர்குசன் தலைமையிலான ஆய்வுக் குழு பிரிட்டனின் முடிவில் செல்வாக்கு வகித்தது.
  • கரோனா அதுவரை ஏற்படுத்திய சேதத்தைக் கணிதவியல் நோக்கில் அந்தக் குழு ஆராய்ந்தது. நோயைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் பிரிட்டனில் 5 லட்சம் பேரும், அமெரிக்காவில் 22 லட்சம் பேரும் இறப்பார்கள் என்ற அறிக்கையை அது வெளியிட்டது. அதைப் பார்த்ததும் ஆட்சியாளர்களும் சுகாதாரத் துறையினரும் கதிகலங்கினர்.
  • எனவே, முழு ஊரடங்கை அமல்படுத்துவோம் என்று முடிவெடுத்தனர்.பெர்குசனைப் பிரதமர் ஜான்சன் பாராட்டினார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இதையே அமெரிக்காவுக்கு வழிமொழிந்தார்.
  • நோய்க்கு ஆளானவர்களைத் தவிர மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறிகளே இல்லாமல் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று பெர்குசன் அஞ்சவைத்துவிட்டார்.
  • இது பெரிய விவாதத்துக்கு வழிவகுத்தது. பெர்குசனின் ஆய்வறிக்கையை கீசெக் கண்டித்தார். அறிவியலாளர்களால் உறுதிசெய்யப்படாத தனிப்பட்ட ஆய்வை ஏற்பது தவறு என்றார். வைரஸ் நன்றாகப் பரவட்டும், ஸ்வீடனில் எல்லா கிழங்களும் சாகட்டும் என்றே கீசெக் இதை அனுமதித்திருக்கிறார் என்று பெர்குசன் சாடினார்.

நாம் எந்த வழி?

  • இன்றைக்கு ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது, அது முழு ஊரடங்கு என்பது கரோனாவுக்கான தீர்வு அல்ல! ஆனால், ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட சில நாட்கள் கழித்து கரோனா மீண்டும் மக்களைத் தாக்கக்கூடும் என்றும் கீசெக் எச்சரிக்கிறார்.
  • அதே சமயம், அதற்கு அஞ்சி முழு ஊரடங்கை வரம்பில்லாமல் மாதக்கணக்கில் தொடர முடியாது. அது எல்லா நாடுகளின் பொருளாதாரத்தையும் சூறையாடி வறுமை மூலம் கோடிக்கணக்கானவர்களைப் பலிகொண்டுவிடும். இதைப் புரிந்துகொண்டு மக்களும் நாடுகளும் செயல்பட வேண்டும்.
  • கரோனாவின் முதல் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து நாடுகளுக்குமே உற்ற வழிமுறை ஸ்வீடனுடையதுதான் என்கிறார் உலக சுகாதார நிறுவன நிபுணர் மைக் ரயான்.
  • ஸ்வீடன் அல்லது பிரிட்டன் பாணியை பிற நாடுகளுக்குப் பரிந்துரைப்பதோ பிற நாடுகளை அவற்றுடன் ஒப்பிடுவதோ தவறு என்று கூறுவோர் உண்டு. ஏனென்றால், பிரிட்டனுடன் ஒப்பிட்டால் ஸ்வீடனில் மக்கள் அடர்த்தி குறைவு. ஸ்வீடனில் குடும்பமாக வாழ்பவர்களைவிட ஒண்டிக்கட்டைகள் அதிகம். கூட்டுக் குடும்பங்களிலும் மூன்று தலைமுறைகள் என்று வெவ்வேறு வயதுகளில் அதிகம் பேர் கிடையாது.
  • இந்தியா எவ்வழி செல்வது? ஒரே இந்தியாவுக்குள் பல ஸ்வீடன்கள், பல பிரிட்டன்கள் இருப்பதுதான் இந்தியாவின் அனுகூலம்.
  • இந்தியா இரு வழிகளிலிருந்தும் பாடம் படிக்கலாம். ஆனால், ஒரே முடிவு ஒட்டுமொத்த நாட்டுக்குமானது என்றால் அது ஆபத்தானதாக அமையும். நம்முடைய மாநிலங்களை - ஏன் மாவட்டங்கள், நகரங்கள் அளவிலும்கூட - தனித்தனி விவரங்கள் வழியே ஆராய வேண்டும்.
  • வயதானவர்கள், இளைஞர்கள், பருவநிலை, சுகாதாரக் கட்டமைப்பு, தொழில் சூழல் இவற்றை ஆராய்வதன் அடிப்படையில் பகுக்க வேண்டும்.
  • அதன் அடிப்படையிலான முடிவெடுப்பதை உள்ளாட்சி நிர்வாகங்களின் வழி மாநிலங்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்!

நன்றி தி இந்து (14-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்