TNPSC Thervupettagam

ஹரியாணா: காங்கிரஸுக்குப் பாடம்!

October 13 , 2024 95 days 156 0

ஹரியாணா: காங்கிரஸுக்குப் பாடம்!

  • “மறந்துவிடாதீர்கள்: யாருக்கும் எதுவும் தெரியாது” என்பது அமெரிக்க வசனகர்த்தா வில்லியம் கோல்ட்மேன் ஹாலிவுட்டைப் பற்றி கூறிய மறக்க முடியாத வாசகம். ‘இந்தத் திரைப்படம் அமோகமாக ஓடி, வசூலில் கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறது’ என்று வெளியாவதற்கு முன்னால் சொல்வார்கள், அது ரசிகர்கள் ஆதரவில்லாமல் காற்று வாங்கும்.
  • இந்திய அரசியலில் சமீபத்தில் வெளியான ஹரியாணா சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுக்கும் இந்த வாசகம் நன்றாகப் பொருந்துகிறது. ‘நிச்சயம் ஆட்சி நமக்குத்தான்’ என்ற நம்பிக்கையோடு காங்கிரஸ் களம் இறங்கியது, முடிவோ தோல்வியாகிவிட்டது; இனி எதிர்காலத்தில் காங்கிரஸின் ஒவ்வொரு அரசியல் கணக்கும் பலவித பாதிப்புகளுக்கே உள்ளாகும்.
  • இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸை மட்டும் பாதித்துவிடவில்லை, பெரும்பாலான அரசியல் நிபுணர்களுக்கும் அவர்களுடைய கணிப்புகள் தவிடுபொடியானதால் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. மக்களவை பொதுத் தேர்தலின்போது ‘வாக்குக் கணிப்பு முடிவுக’ளைத் (எக்ஸிட் போல்) தவறாக வெளியிட்டு பொதுவெளியில் அவமானப்பட்ட நிபுணர்கள், இந்த முறை மிகச் சரியாக செயல்பட்டு சரியான முடிவை அளித்துத் தங்களுடைய களங்கத்தைப் போக்கிக்கொண்டுவிட வேண்டும் என்று கூடுதலாகவே உழைத்தார்கள். பாவம், மறுபடியும் தவறிவிட்டார்கள்!

தலைமை கேட்கவில்லை

  • 2024 மக்களவை பொதுத் தேர்தலின்போது தொகுதிகளை சுற்றிப் பார்த்த அரசியல் நிருபர்கள், மக்களுடைய மனநிலையில் மாற்றம் இருக்கிறது என்று தங்களுடைய ஊடகத் தலைமைக்கு தகவல்கள் அனுப்பினர். ஆனால், ஊடக உரிமையாளர்களும் செய்திக்குப் பொறுப்பான தலைமை ஆசிரியர்களும் அதை ஆதரிக்கவில்லை அல்லது அந்தத் தகவலுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை.
  • இந்த முறை ஹரியாணாவை சுற்றிவந்த நிருபர்கள், ‘தொடர்ந்து இரண்டு முறையாக பாஜகவே ஆட்சியில் இருப்பதால் மக்கள் களைத்துவிட்டார்கள், எனவே ஆட்சி மாற்றம் நிச்சயம்’ என்றே பெரும்பாலும் முடிவுக்கு வந்தனர். ‘காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வரும்’ என்று கூறாவிட்டாலும், “கடுமையான போட்டியின் இறுதியில் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துவிடும்” என்றனர்.

தலைமைக்குப் போட்டி!

  • ஊடக நிருபர்கள் மட்டுமல்ல, இந்த முறை அரசியலர்களே முடிவைத் தவறாக ஊகித்துவிட்டனர். அடுத்து நம்முடைய ஆட்சிதான் என்று முடிவுசெய்துவிட்டதால், முதல்வர் யார் என்ற போட்டியிலும் தேர்தலுக்கு முன்னதாகவே இறங்கிவிட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்! பிரச்சாரத்தின்போது ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைமையால் ஓரங்கட்டப்பட்டதற்காக குமாரி செல்ஜாவின் ஆதரவாளர்கள் வருத்தப்பட்டார்கள், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது நிச்சயம் என்றே அவர்களும் நம்பினார்கள்.
  • பாஜக தலைமையும் களத்தை கவனமாக ஆராய்ந்தது. தொடர் பத்தாண்டுகள் ஆட்சியால் சோர்வடைந்த மக்களிடம் ஆதரவை மீட்பது எப்படி என்று சிந்தித்தது. மாநில சட்டமன்ற தேர்தல்தான் என்றாலும் பிரதமர் மோடி அடிக்கடி குறுக்கும் நெடுக்கும் பயணப்பட்டு உணர்ச்சிவசமாகப் பேசி வாக்கு சேகரிப்பார்; இந்த முறை மிகக் கவனமாக அப்படிப் பேசும் பொதுக்கூட்டங்களைக் குறைத்துக்கொண்டார், பயண எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டது. மோடி ஆட்சியின் ‘மாயாஜாலம்’ குறித்து அதிகம் பேசாமல், உள்ளூர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது பாஜக. ஒரு கட்டத்தில், தோல்வியைச் சந்திக்கக்கூட தயாராகிவிட்டது, இந்தத் தேர்தல் முடிவுக்கும் பிரதமருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுவதற்காக சில செயல்களையும் செய்தது.
  • அப்படியானால் இந்த எதிர்பார்ப்புகள், கணக்குகள் எல்லாம் இருதரப்புக்குமே எப்படிப் பொய்யாகப் போனது?

கூர்மையாகப் பார்ப்போம்

  • நாமெல்லோருமே (ஊடகர்கள்) தேர்தல் முடிவு வெளியான மறுநாள், அது ஏன் என்று தெளிவாக விளக்குவதில் வல்லவர்கள்! எனவே, காங்கிரஸ் ஏன் தோற்றது என்று பக்கம் பக்கமாக இப்போது எல்லோருமே எழுதுகின்றனர்.
  • பெரும்பாலானவர்கள் பூபிந்தர் சிங் ஹூடாவை பலிகடா ஆக்குவதற்காக வசைபாடுகின்றனர். உண்மையிலேயே அவர் அவ்வளவு அகந்தைப் பிடித்தவரா? பிரச்சாரத்தில் குமாரி செல்ஜாவுக்கு முக்கிய இடம் கொடுக்காமல் விலக்கும் முடிவை அவர் மட்டும்தான் எடுத்தாரா? ஜாட் மக்களிடையேயும் மற்றவர்களிடமும் அவருக்கு அரசியல் செல்வாக்கு இல்லையா? அவர் என்ன தோற்றுப்போவதற்காகவே வேட்பாளர்களைத் தேர்வுசெய்தாரா? ஒரு தோல்விக்குப் பிறகு யாராவது ஒருவர் மீது முழுப் பழியையும் போடும் இந்தப் போக்கு எனக்கு எரிச்சலையே தருகிறது. ஹூடா மீதான குற்றச்சாட்டுகளில் சில சரியாகக்கூட இருக்கலாம், ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அதற்கு முன்னாலும் அனைவருக்கும் இவையெல்லாம் தெரியும்தானே? அதற்குப் பிறகும் எப்படிக் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றி ஆட்சியைப் பிடித்துவிடும் என்று பேசினார்கள் – எழுதினார்கள்?

நப்பாசை வெற்றியைத் தருமா?

  • காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளில் ஒன்று, கள யதார்த்தத்துக்குப் பொருந்தாத நம்பிக்கை. கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை என்றதும், ‘இனி காங்கிரஸுடைய கஷ்டமெல்லாம் நீங்கிவிடும், பாஜக தொடர்ந்து தோற்கும் – காங்கிரஸும் தோழமைக் கட்சிகளும் வெற்றி மேல் வெற்றியாக குவிக்கும்’ என்று முடிவுகட்டிவிட்டார்கள்.
  • காங்கிரஸ்காரர்களும் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகளையும் பொதுஇடங்களில் தெரிவித்த கருத்துகளையும் பார்த்தால், இனி மோடியின் செல்வாக்கு வீழும், அடுத்தடுத்து நடக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் பாஜக தோற்று, மோடியே தனது பதவிக்காலத்தை முழுமை செய்யாமல், பாதியிலேயே அரசியலைவிட்டு விலகிவிடுவார் என்ற கருத்தே தூக்கலாக இருந்தது.

400 சீட்டு நப்பாசை

  • காங்கிரஸ்காரர்களின் இந்த நப்பாசை, கடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னால் பாஜகவினருக்கு இருந்த ‘400 சீட் வெற்றி’ என்ற நப்பாசைக்கு இணையானது. ‘காங்கிரஸ் கட்சியின் கதை முடிந்தது, இனி நம்முடைய ஆட்சிதான்’ என்று பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் பேசினர்.
  • அரசியல் பற்றி நம்மால் முழுதாக ஊகித்துவிட முடியாதுதான் என்றாலும் சில அம்சங்களைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும். இந்திய அரசியலின் அடிப்படையான ஒரு யதார்த்தத்தைப் பார்க்க காங்கிரஸ் தவறிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னால் மோடிக்கு இருந்த ஈர்ப்பும் ஆதரவும் மக்களிடையே குறைந்திருக்கலாம், ஆனால் கட்சித் தொண்டர்களும் கட்சி சாராத மக்களும் இன்னமும் அவரைத் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.
  • வட இந்தியாவில் ராகுல் காந்தியைவிட அவருக்குத்தான் ஆதரவு அதிகம். மோடிக்கு மக்களிடையே ஆதரவு எவ்வளவு, செல்வாக்கு எவ்வளவு என்று மட்டும் பார்த்து தேர்தல் முடிவைக் கணிப்பதும் தவறு. காரணம் பாஜக என்பது தொண்டர்களுடைய பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. வேட்பாளர்களை எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், பிரச்சாரத்தை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் அந்தக் கட்சிக்கு நன்றாகவே தெரியும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவில், தேர்தல் நாளன்று தங்களுடைய ஆதரவாளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துவந்துவிட அதனால் முடியும்.

காங்கிரஸின் புதிய வடிவம்

  • காங்கிரஸ் கட்சி இப்போது பெரிய மாற்றத்துக்கு உள்ளாகிவருகிறது. ‘அரசியல் விவரம் தெரியாதவர்’ என்ற பிம்பத்தை உடைத்து, மக்களுடைய பிரச்சினைக்காகத் துணிந்தும், தொடர்ந்தும் குரல்கொடுப்பவர் என்ற எண்ணம் ராகுலைப் பற்றி மக்களிடையே வளர்ந்துவருகிறது; ‘காங்கிரஸ் இப்போது இளைஞர்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது. வெறுப்பரசியலை முடிவுக்குக் கொண்டுவருகிறது, சமத்துவ இந்தியாவுக்காகப் பாடுபடுகிறது’ என்று மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ் முன்வைத்த இந்த மாற்றத்தை மக்களும் ஏற்று ஆதரவை அதிகப்படுத்தினர்.
  • ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலக் கிளைத் தலைவர்கள், தங்களுடைய மாநிலம் குறித்து, தேசியத் தலைமையைவிட தங்களுக்குத்தான் நன்கு தெரியும் என்ற எண்ணத்தைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். தேர்தல் நிர்வாகத்தில் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை அளித்து – உள்ளூர் நிலையில் அவர்களுக்குப் போட்டியாக இருப்பவர்களை ஓரளவுக்கு முக்கியத்துவம் குறைத்து - தேர்தல் வேலைகளைச் செய்வது காங்கிரஸ் கட்சியின் பழைய நடைமுறை. காங்கிரஸ் அடிக்கடி இந்தத் தவறைச் செய்கிறது.
  • ஹரியாணாவில் தேர்தல் பொறுப்பைப் பூபிந்தர் சிங் ஹூடாவிடமே மொத்த குத்தகைக்கு விட்டுவிட்டது தலைமை. ஏற்கெனவே ஹரியாணாவில் 2 சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸுக்குப் பெருந்தோல்வியை வாங்கித் தந்தவர் அவர். மக்களவை பொதுத் தேர்தலுக்கும் முன்னதாக ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும்கூட காங்கிரஸ் இப்படித்தான், அந்தந்த மாநிலத்தின் மூத்த தலைவர்களை நம்பியது, தோல்வியைத் தழுவியது. சமீபத்திய அந்தத் தோல்விகள்கூட தலைமைக்கு நினைவில் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தல் தரும் பாடம் இதுதான்.

மோடி இல்லாமலேயே

  • மோடி முக்கிய பிரச்சாரகராக இல்லாவிட்டாலும் பாஜக வெற்றிபெறும் என்பதை ஹரியாணா உணர்த்துகிறது. மோடி இல்லாவிட்டாலும், சொந்த வலிமையாலேயே பாஜகவால் வெற்றிபெற முடியும். மோடி என்ற பெயருக்குக் கவர்ச்சி மங்கினால்கூட, நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு கொண்ட கட்சி என்பதாலும் ஆர்வமாக வந்து உழைக்கும் தொண்டர்களைக் கொண்டிருப்பதாலும் தொடர்ந்து வெற்றிபெற முடியும். ‘மோடிக்கு கவர்ச்சி குறைந்துவருகிறது, வெற்றிக்கனி இனி தானாக வந்து மடியில் விழும்’ என்று காங்கிரஸ் நினைத்தால் அது பெருந்தவறு.

அரசியலில் எதுவும் நிச்சயம் இல்லை

  • ஹரியாணா தேர்தலையும் அடுத்து நடக்கவிருக்கும் மஹாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் ஒப்பிட முடியாதுதான்; ஹரியாணாவைப் போல காங்கிரஸும் பாஜகவும் மட்டும் ‘ஒண்டிக்கு ஒண்டி’ மோதும் களம் இதுவல்ல. மஹாராஷ்டிரத்தில் காங்கிரஸுக்குத் தலைமை தாங்கவும் தன்னுடைய வேட்பாளர்களைத் திணிக்கவும் செல்வாக்குள்ள மாநிலத் தலைவர் என்று ஒருவரும் இல்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸும் அதன் வேட்பாளர்களும் வெற்றிபெற தோழமைக் கட்சித் தலைவர்கள்தான் அதிகம் பொறுப்பைச் சுமக்க வேண்டியிருக்கும்.

எப்போதும் மறக்காதீர்கள்: யாருக்கும் எதுவும் தெரியாது!

  • அரசியலில் நிச்சயத்தன்மை என்று எதுவும் கிடையாது. எதைப் பற்றியும் யாரும் அதீத தன்னம்பிக்கை கொண்டுவிட முடியாது.
  • ஒன்றிய அரசை ஆளும் பாஜக ஆட்சி விரைவிலேயே உள்நொறுங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் தவறு; ஆனால், காங்கிரஸ் கட்சி தன்னுடைய புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் அதைத் தொடர்ந்து காயப்படுத்த முடியும். ‘பலமுறை மக்களால் நிராகரிக்கப்பட்ட - பழைய தலைமுறைத் தலைவர்களை நம்பி காங்கிரஸால் இனி வெற்றிபெற முடியாது’. அதேசமயம், பழைய தலைமுறை எல்லாம் வேண்டாம், புதிய தலைமுறையை வைத்தே வெற்றிபெற்றுவிடலாம் என்று செயலற்றுக்கிடந்தாலும் வெற்றி வசமாகிவிடாது.
  • இந்திய வரலாற்றிலேயே, எல்லாவிதமான தேர்தல்களிலும் இடைவிடாமல் வேலை செய்யும் ‘அசுர இயந்திரம்’ பாஜகவுக்கு எதிராக அரசியல் களத்தில் அப்படி எளிதாக வெற்றிபெறுவது சாத்தியமே அல்ல.

நன்றி: அருஞ்சொல் (13 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்