ஹரியாணா: காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள்
- நடந்து முடிந்த ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் பாடங்கள் தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கின்றன. ஹரியாணாவில் போட்டியிட்ட 89 தொகுதிகளில் 37இலும், காஷ்மீரில் - போட்டியிட்ட 39 இடங்களில் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்கிறது.
- ஜம்மு - காஷ்மீரில் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி வென்றிருப்பதில் நிம்மதியடைந்திருக்கும் காங்கிரஸ், ஹரியாணா தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தேர்தல் ஆணையத்துடன் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், இண்டியா கூட்டணிக்குள்ளிருந்து காங்கிரஸுக்கு எதிரான விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அடுத்து மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விமர்சனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே, உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆறு வேட்பாளர்களைத் தன்னிச்சையாகவே அறிவித்துவிட்டது சமாஜ்வாதி கட்சி. காங்கிரஸ் ஐந்து இடங்கள் வேண்டுமென ஏற்கெனவே தெரிவித்திருந்தது; பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில தொகுதிகளில் போட்டியிடும் எண்ணத்திலும் இருந்தது. சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, கூட்டணி அப்படியே தொடர்வதாக அகிலேஷ் யாதவ் விளக்கமளித்துவிட்டார். எனினும், இந்தக் குழப்பத்தால் பாஜக குதூகலமடைந்திருக்கிறது. ஹரியாணா தோல்வி உத்தரப் பிரதேசத்திலும் தொடரும் எனப் பேசத் தொடங்கியிருக்கிறது.
- அதேபோல், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டது ஆம் ஆத்மி கட்சி. அதீத நம்பிக்கையால் காங்கிரஸ் தோல்வியடைந்திருப்பதாக அர்விந்த் கேஜ்ரிவால் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் முதன்மைக் கூட்டணிக் கட்சியான (உத்தவ் தாக்கரே தலைமையிலான) சிவசேனாவும் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
- காங்கிரஸ் தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இடதுசாரிகளும் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஹரியாணா தோல்வி குறித்து காங்கிரஸ் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என ஒமர் அப்துல்லா கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய வாய்ப்பளிக்காததால் தோல்வியடைந்த காங்கிரஸ், 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் துணையுடன்தான் பாஜக பெரும்பான்மை பெறுவதைத் தடுத்து நிறுத்தியது.
- இதைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கும் திரிணமூல் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளால்தான் பாஜகவை எதிர்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பாஜகவின் வெற்றியை மம்தா பானர்ஜி தடுத்துவருவதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாகவே சுட்டிக்காட்டுகின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பாகக் காங்கிரஸ் எழுப்பியிருக்கும் சந்தேகம் குறித்து கூட்டணிக் கட்சிகள் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.
தோல்வி தரும் பாடங்கள்:
- ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குக் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. காங்கிரஸ்தான் வெல்லும் எனப் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சொல்லிவந்தாலும், தனது அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள் நிச்சயம் பாஜகவுக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என நம்பியதாக முதல்வர் நயப் சிங் சைனி குறிப்பிட்டிருக்கிறார்.
- ஹரியாணாவில் உள்ள 17 தனித் தொகுதிகளில் எட்டு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. இது தலித் மக்களின் நலனுக்காக பாஜக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என அக்கட்சியினர் குறிப்பிடுகின்றனர். ஜம்முவில் உள்ள ஏழு தனித்தொகுதிகளிலும் பாஜக வென்றிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
- பூபேந்தர் சிங் ஹூடா ஆட்சிக் காலத்தில், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெற்றதும், தலித் தலைவரான குமாரி செல்ஜா ஓரங்கட்டப்பட்டதும் ஹரியாணாவில் காங்கிரஸுக்கான தலித்துகளின் ஆதரவைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹூடாவின் ஆதரவாளர்கள். இதனால், தேர்தல் பிரச்சாரத்தில் செல்ஜா முனைப்பே காட்டவில்லை. இறுதிக்கட்டத்தில்தான் ராகுலின் முயற்சியால் ஹூடாவும் செல்ஜாவும் ஒரே மேடையில் தோன்றினர். எனினும் காலம் கடந்துவிட்டிருந்தது.
- எல்லாவற்றையும் தாண்டி, ஏறத்தாழ பாஜகவின் வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தும்கூட காங்கிரஸ் தோற்றது, கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாததால்தான் எனப் பேசப்படுகிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளாதது வாக்குகள் பிரிய வழிவகுத்துவிட்டதாகப் பேசப்படுகிறது. அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் அதிகபட்சம் மூன்று தொகுதிகளைக் காங்கிரஸ் கூடுதலாக வென்றிருக்கக்கூடும்.
- ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் இண்டியா கூட்டணி தொடர்கிறது என்கிற வியூகம் வகுக்கப்பட்டிருந்தால் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு நிச்சயம் அதிகரித்திருக்கும். கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் போட்டியிட்டதால் 2024 மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் காங்கிரஸுக்கு 47% வாக்குகளும் ஐந்து இடங்களும் கிடைத்தன என்பதை ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வியடைந்துவரும் காங்கிரஸுக்கு 2024 தேர்தலில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்றை ஆம் ஆத்மி கட்சி ஒதுக்கியது. அந்தப் பெருந்தன்மையை ஹரியாணாவில் காங்கிரஸ் காட்டவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியினர் அங்கலாய்க்கின்றனர்.
- பல தருணங்களில், கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸ் தேசியத் தலைமை விரும்பினாலும், கட்சியின் மாநிலத் தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்காதது ஒரு பிரச்சினையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஹரியாணாவில் எந்த இடமும் இல்லை என பூபேந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபேந்தர் சிங் ஹூடா அலட்சியமாகப் பேசியது ஓர் உதாரணம். டெல்லியில், ஆம் ஆத்மி அரசை காங்கிரஸ் தலைவர்கள் சந்தீப் தீட்சித், அஜய் மாக்கன் போன்றோர் கடுமையாக விமர்சித்துவருவதும் இந்தக் கசப்புகளுக்கு ஒரு காரணம்.
- மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது அகிலேஷ் யாதவ் குறித்து கமல்நாத் அலட்சியமாகப் பேசியதை இப்போதுவரை சமாஜ்வாதி கட்சியினரால் மறக்க முடியவில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவைத் தனியாக எதிர்கொள்ளும் வலிமை இல்லாத காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளுடன் அனுசரித்துச் செல்வதன் அவசியத்தை இப்போது உணர்ந்திருக்கும் என நம்பலாம்!
பாஜகவின் ராஜபாட்டை:
- மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான மனோகர் லால் கட்டாரின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்த நிலையில், முதல்வர் பதவியிலிருந்து அவரை அகற்ற பாஜக தயங்கவில்லை. ஒருகாலத்தில் கட்டாரின் ஸ்டெனோவாகவும் ஓட்டுநராகவும் இருந்த நயப் சிங் சைனியை முதல்வராக்கியதுடன், இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தியது பாஜக.
- நயப் சிங் சைனியே இந்தத் தேர்தலை முன்னெடுத்துச் செல்வார் என அமித் ஷா பகிரங்கமாகவே அறிவித்தார். காங்கிரஸ் ஆதரவுத் தளமான ஜாட் சமூகத்தினர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அணிதிரட்டலில் பாஜக ஈடுபட்டது. ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் நயப் சிங் சைனி அதன் முகமாக முன்வைக்கப்பட்டார். அதற்கான பலனும் கிடைத்துவிட்டது.
- உண்மையில், இந்தத் தேர்தலில் மொத்தம் நான்கே பிரச்சாரக் கூட்டங்களில்தான் மோடி கலந்துகொண்டார். எனினும், ஹரியாணா ‘ஹாட்ரிக்’ வெற்றியை அம்மாநில பாஜகவினர் பிரதமர் மோடிக்குச் சமர்ப்பித்திருப்பதன் மூலம் தேசிய அரசியலில் மோடியின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்திருப்பதாகக் காட்ட முயல்கின்றனர். கூடவே, எந்தக் காலத்திலும் தேர்தல் முனைப்பிலேயே இருக்கும் பாஜக – வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பணிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டது.
- மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஒருபுறம் ஹரியாணா பாஜகவுக்குக் கிடைத்த வெற்றிக்கான காரணியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் மோடி ஆர்வம் காட்டும் நிலையில், ஹரியாணா தோல்விக்குப் பொறுப்பேற்க ராகுல் தயங்குவதும் விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
- ஒரு மாநிலத் தேர்தலின் முடிவு, மற்றொரு மாநிலத் தேர்தலின் முடிவை முழுமையாகத் தீர்மானித்துவிடும் எனச் சொல்ல முடியாது. அந்தந்த மாநிலப் பிரச்சினைகளும், ஆட்சியாளர்களின் செயல்பாடுகளும் பிற காரணிகளும்தான் அதைத் தீர்மானிக்கும். எனினும், அரசியல்ரீதியாகக் காங்கிரஸைப் பலவீனப்படுத்த பாஜகவுக்கு மட்டுமல்ல, உளவியல்ரீதியாக அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கும் ஹரியாணா தேர்தல் தோல்வி ஒரு கருவியாகியிருக்கிறது.
- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் அவரது மனைவியையும் ராகுல் சந்தித்திருப்பதன் மூலம் காங்கிரஸ் சற்றே சுதாரித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. எனினும், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களையும், மாநிலத் தலைவர்களின் பதவி ஆசையைச் சரிகட்டும் உத்திகளையும் கைக்கொள்ளாவிட்டால் காங்கிரஸுக்கு சோதனைக் காலம் தொடர்வதைத் தடுக்க முடியாது!
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 10 – 2024)