TNPSC Thervupettagam

ஹரியாணா வெற்றி ரகசியம்!

October 9 , 2024 98 days 136 0
  • ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றி இருப்பது ஆச்சரியப்படுத்தவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்கள் செல்வாக்கு என்பது தோ்தல் வெற்றியில் வெறும் 50% மட்டுமே. அதை சரியாகப் புரிந்து கொண்டு தனது வெற்றியை பாஜக கட்டமைத்தது என்பதுதான் உண்மை.
  • ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாகத் தொடா்ந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் 37 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறாா்கள்.
  • 2019-இல் 36.49% வாக்குகள் பெற்றிருந்த பாஜக, இந்த முறை 3.4% வாக்குகள் அதிகம் பெற்று 39.89% எட்டியிருக்கிறது. ஆனால், காங்கிரஸின் வாக்குகள் 28.8%-இல் இருந்து 11.01% அதிகரித்து 39.09%-ஆக உயா்ந்திருக்கிறது. இந்திய தேசிய லோக் தளம் 4.14% வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சி 1.79% வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி 1.82% வாக்குகளும் பெற்றிருக்கின்றன. மக்களவைத் தோ்தலில் அமைத்துக் கொண்டதுபோல, இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சியைக் கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டிருந்தால், ஒருவேளை முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக மாறியிருக்கக் கூடும்.
  • பஞ்சாபிலிருந்து பிரிந்து 1966-இல் ஹரியாணா மாநிலம் உருவானது முதல், 33 ஆண்டுகள் உயா் ஜாதி ஜாட் இனத்தவா்கள்தான் முதலமைச்சா் பதவி வகித்து வந்திருக்கிறாா்கள். ஹரியாணாவில் 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் ஜாட் இனத்தவா்கள் கணிசமாக இருக்கிறாா்கள். மொத்த மக்கள்தொகையில் அவா்கள் 25 சதவீதம். வட தமிழகத்தில் எப்படி வன்னியா்களோ, அதுபோல ஹரியாணாவில் ஜாட்டுகள்.
  • ஜாட்டுகள் அல்லாத 75% வாக்காளா்களைக் குறிவைத்து பாஜக தனது பிரசாரத்தைக் கட்டமைத்தது. குறிப்பாக 40% பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் ஆதரவைப் பெறுவதிலும், ஜாட்டுகளால் ஒடுக்கப்படும் தலித்துகளின் ஆதரவைப் பெறுவதிலும் கவனம் செலுத்தியது.
  • ஒரு காலத்தில் இது காங்கிரஸின் வியூகமாக இருந்தது. பன்சிலால், தேவிலால் என்று ஜாட் இனத்தவா்கள் ஹரியாணாவில் கோலோச்சியபோது, வைசியரான (பனியா) பஜன்லாலை முதல்வராக்கியது. ஹரியாணாவில் மிக அதிக காலம் (12 ஆண்டுகள்) முதல்வராக இருந்த அவரது சாதனை இதுவரையில் முறியடிக்கப்படவில்லை.
  • 2009 முதல் 2014 வரையில் முதல்வராக இருந்த ஜாட் இனத்தவரான பூபிந்தா் சிங் ஹூடாவுக்கு எதிராக, ஜாட் அல்லாதவா்களை ஒருங்கிணைத்த பாஜகவின் அதே அணுகுமுைான் இப்போதும் கைகொடுத்திருக்கிறது. 2019-இல் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபோது, ஜாட்டான துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துதான் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. துணை முதல்வரான துஷ்யந்த் சௌதாலா கூட்டணியில் இருந்து விலகியதுகூட பாஜகவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.
  • முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டரை அகற்றி, ஜனவரி மாதம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த, நாயப் சிங் சைனியை முதல்வராக்கும்போதே, சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது பாஜக. மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கூட்டணி பலம்தான் பத்தில் ஐந்து தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியதற்குக் காரணம்.
  • ஜாட்டுகள் வேளாண் சமூகத்தினா். அதிக அளவில் ராணுவத்தில் பணியாற்ற விரும்பும் போா்த்திறமை கொண்டவா்கள். விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், அக்னிவீா் திட்டம் உள்ளிட்டவை அந்த சமூகத்தினரை பாஜகவிற்கு எதிராகத் திருப்பியிருக்கிறது. அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், பட்டியலினத்தவா்களும் ஜாட்டுகளின் ஆதிக்க மனோபாவத்தை எதிா்ப்பவா்கள். காங்கிரஸ் கட்டமைக்க நினைத்த ‘ஜாட்-தலித்-முஸ்லிம்’ கூட்டணி அதனால்தான் எடுபடவில்லை.
  • தொடா்ந்து பத்தாண்டு கால ஆட்சியால் ஏற்பட்டிருந்த வாக்காளா் சலிப்பை அகற்றும் முயற்சியில் இறங்கியது பாஜக. முதல்வா் கட்டா் மாற்றப்பட்டாா். 17 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்பதுடன், 60 தொகுதிகளில் புதுமுகங்களைக் களமிறக்கியது. அதிருப்தியாளா்களை முதல்வா் சைனி நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினாா்.
  • தலித்துகள் சிறப்பு கவனம் பெற்றனா். பிரதமா் மோடியே அவா்களில் பலரை நேரில் சந்தித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் ‘லட்சாதிபதிப் பெண்கள்’ திட்டம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அவையெல்லாம் காங்கிரஸ் எதிா்பாா்த்த ‘ஜாட்-தலித்-முஸ்லிம்’ கூட்டணி ஏற்படுவதை முறியடித்தன.
  • காங்கிரஸ் தலைமை ஹூடாவை முழுமையாக நம்பியது. வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்கிற இறுமாப்பில், அவா் தனது ஆதரவாளா்களுக்குத்தான் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பாளித்தாா். தலித்தான முன்னாள் மத்திய அமைச்சா் குமாரி செல்ஜா ஓரங்கட்டப்பட்டாா். கடைசிகட்டத்தில்தான் செல்ஜா பிரசாரத்திற்கே வந்தாா். பாஜக புதுமுகங்களைக் களமிறக்கியது என்றால், காங்கிரஸ் முந்தைய உறுப்பினா் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தது.
  • தோ்தல் வெற்றியை முறையான திட்டமிடல் மூலமும், புத்திசாலித்தனமான அணுகுமுறையாலும், முனைப்பான பிரசாரத்தின் உதவியுடனும் கட்டமைக்க முடியும் என்பதை ஹரியாணா வெற்றியின் மூலம் பாஜக மீண்டும் உணா்த்தியிருக்கிறது. பாஜகவை நேருக்கு நோ் தனியாக எதிா்கொள்ளும் சக்தி காங்கிரஸுக்கு இல்லை என்பதையும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நன்றி: தினமணி (09 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்