TNPSC Thervupettagam

ஹரி​யாணா: தேசியக் கட்சிகளின் மோதல் களம்

October 4 , 2024 100 days 107 0

ஹரி​யாணா: தேசியக் கட்சிகளின் மோதல் களம்

  • பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முதன்​முதலாக அறிவிக்​கப்பட்ட மோடி, தனது முதல் பிரச்​சா​ரத்தைத் தொடங்​கியது ஹரியாணாவின் ரேவரி​யில்​தான். ஒன்றரை லட்சத்​துக்கும் அதிகமானோர் கலந்து​கொண்ட பிரம்​மாண்டமான கூட்டம் அது. ஆனால், இந்த முறை ஹரியாணா சட்டமன்றத் தேர்தலுக்கான மோடியின் பிரச்​சாரக் கூட்டங்​களில் பழைய உற்சாகம் இல்லை.
  • பிரச்​சாரக் காலம் முடிவுறு​வதற்கு 48 மணி நேரம் இருக்​கும்​போதே, தனது பிரச்​சா​ரத்தை முடித்​துக்​கொண்டு​விட்​டார். மறுபுறம், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர​மாகக் களமாடி​யிருக்​கிறார்கள். எப்படி இருக்​கிறது ஹரியாணா தேர்தல் களம்?
  • மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஹரியாணா சட்டமன்​றத்தில் பெரும்​பான்​மைக்கு 46 இடங்கள் தேவை. 2014 சட்டமன்றத் தேர்தலில், மோடி அலையால் 47 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 2019இல் 40 இடங்களில் வென்ற பாஜக, துஷ்யந்த் செளதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி​யுடன் (ஜேஜேபி) கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்கவைத்​துக்​கொண்டது. இந்த முறை பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு மிகக் குறைவு என்பதே கள நிலவரம்.

பரிதவிக்கும் பாஜக:

  • முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கும் துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலா​வுக்கும் இடையில் ஏற்கெனவே பல்வேறு விஷயங்​களில் முரண்பாடு இருந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலின்போது தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிணக்கு, கூட்டணிப் பிளவுக்கு வழிவகுத்தது. சுயேச்சை எம்.எல்​.ஏ-க்​களின் ஆதரவுடன் ஆட்சியை பாஜக தக்கவைத்​துக்​கொண்​டாலும் முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியிழக்க நேர்ந்தது. கட்டாரின் உதவியாளராக இருந்த நயப் சிங் சைனி முதல்​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். கட்டார் கர்னால் தொகுதி எம்.பி-யாகி மத்திய அமைச்​சராகி​விட்​டார்.
  • இந்தத் தேர்தலில் நயப் சிங்கே முதல்வர் வேட்பாளராக அறிவிக்​கப்​பட்​டிருந்​தா​லும், அனில் விஜ், ராவ் இந்திரஜித் சிங் போன்றோரும் தங்களை முன்னிறுத்​திக்​கொள்ள முயல்​கின்​றனர். பாஜகவில் இது புதிது என்றாலும், இவர்களின் ஆதரவாளர்கள் மூலமாவது தேர்தலில் ஏதேனும் அனுகூலம் கிடைக்​கட்டுமே என கட்சித் தலைமை அமைதி காக்கிறது. அதிருப்தி அலை நிலவுவதால் பெரும்​பாலான போஸ்டர்​களில், பாஜக ஆட்சித் திட்டங்​களின் பயனாளர்கள் எனச் சாமானியர்​களின் படங்களே முதன்​மையாக இடம்பெற்றிருக்​கின்றன.
  • 2024 மக்களவைத் தேர்தலில் ஐந்தே இடங்களில் வென்றதால் துவண்​டுபோன பாஜக, ஒரு லட்சத்​துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட​வர்​களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்பன உள்ளிட்ட நலத் திட்டங்களை அவசரஅவசர​மாகக் கொண்டு​வந்தது. இந்தத் தேர்தலில், வறுமைக்​கோட்டுக்குக் கீழ் வாழும் இல்லத்​தரசிகளுக்கு மாதம் ரூ.2,100 உதவித்​தொகை, ஒவ்வொரு நகரத்​திலும் 50,000 உள்ளூர் இளைஞர்​களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் நிறுவனங்​களுக்கு ஊக்கத்தொகை எனப் பல கவர்ச்​சிகரமான வாக்குறு​திகளை அறிவித்திருக்கிறது.

ராகுலின் சூறாவளிப் பிரச்​சாரம்:

  • 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் ஆட்சிக்கு எதிரான மனநிலையை (anti incumbency) எதிர்​கொள்வது இயல்புதான் என்றாலும், பாஜகவின் பதற்றத்​துக்கு இன்னொரு காரணியும் இருக்​கிறது. அது ராகுல் காந்தியின் சூறாவளிப் பிரச்​சாரம். 2014 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 10 இடங்கள்தான் கிடைத்தன. 2019இல் 31 இடங்கள் கைவசமாகின. 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 10 தொகுதி​களில் காங்கிரஸ் ஐந்து தொகுதி​களில் வென்றது. இந்த முறை ராகுலின் பிரச்​சா​ரத்தால் ஆட்சியையே கைப்பற்றி​விடலாம் என்று காங்கிரஸ் பெரிதும் நம்பு​கிறது.
  • இளைஞர்​களுக்கு வேலைவாய்ப்​பின்மை, அக்னிபத் திட்டம், மல்யுத்த வீராங்​கனைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம், பயிர்​களுக்குக் குறைந்​தபட்ச ஆதரவு விலை எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் தீவிரப் பிரச்​சாரம் செய்தார். “மோடி அரசு மூலம் அம்பானி, அதானிக்குச் செல்லும் பணத்தை எடுத்து நாட்டின் விவசா​யிகள், தொழிலா​ளர்கள், ஏழைகள், தலித்து​களுக்குத் தருவேன்” எனச் சூளுரைத்​திருக்​கிறார்.
  • 50க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று பெரும்​பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்​கின்றன. எனினும், 60 இடங்களுக்கு மேல் வென்றால்தான் பாஜகவின் ‘பாசவலை’யி​லிருந்து தமது எம்எல்​ஏ-க்​களைப் பாதுகாக்க முடியும் என்பதையும் காங்கிரஸ் உணர்ந்​திருக்​கிறது. இந்தச் சூழலில், இறுதிக்​கட்டப் பிரச்​சா​ரத்தில் ராகுலுடன் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் களமிறங்​கியது குறிப்​பிடத்​தக்கது.

சாதிக் கணக்குகள்:

  • ஹரியாணா மக்கள்​தொகையில் 20% தலித்துகள். வழக்கமாக, ஜாட் சமூகத்​தினர், முஸ்லிம்கள் ஆகியோர்தான் காங்கிரஸின் முதன்மை வாக்கு வங்கிகள். இந்த முறை தலித் சமூகத்​தினரின் வாக்கு​களையும் திரட்டு​வதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டு​கிறது. காங்கிரஸின் தலித் முகமாக அறியப்​படும் குமாரி செல்ஜாவுக்கும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த புபேந்திர சிங் ஹூடாவுக்கும் இடையில் எப்போதும் முரண்கள் உண்டு.
  • இந்த முறை வேட்பாளர் தேர்வில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்​ட​தால், கட்சி​யை​விட்டு செல்ஜா வெளியேறுவார் என்று தகவல்கள் பரவின. சூழலைப் பயன்படுத்​திக்​கொள்ள நினைத்த கட்டார், பாஜகவுக்கு வருமாறு செல்ஜாவுக்கு அழைப்பு​விடுத்​தார்; ஆனால், அதை ஏற்க மறுத்த செல்ஜா, இறுதிவரை காங்கிரஸ்தான் என்று சொல்லி​விட்​டார். இதில் பாஜகவுக்குக் கடும் ஏமாற்றம் என்பதைச் சொல்ல வேண்டிய​தில்லை.
  • செல்ஜா விவகாரம் ஒரு பின்னடைவாகி​விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்திய ராகுல் காந்தி, பிரச்சார மேடைகளில் செல்ஜாவுக்கும் ஹூடாவுக்கும் சரிசமமாக முக்கி​யத்துவம் கொடுத்​தார். எனினும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தலித்து​களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெற்​ற​தாக பாஜக தலைவர்கள் சுட்டிக்​காட்​டி​யிருப்பது கவனிக்​கத்​தக்கது.
  • மறுபுறம், விவசா​யிகள் போராட்டம், மல்யுத்த வீராங்​கனைகள் விவகாரம் உள்ளிட்ட பிரச்​சினைகளை முன்வைத்து ஜாட் சமூகத்​தினர் பாஜக மீது அதிருப்​தியில் இருப்​ப​தாகக் கருதப்​படு​கிறது. இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்​தினர் நடத்திய போராட்​டத்தை கட்டார் அரசு எதிர்​கொண்ட விதமும் பாஜகவுக்குக் கரும்​புள்​ளியாகி இருக்​கிறது. ஹரியாணா அரசியல் களத்தில் கோலோச்​சுபவர்கள் ஜாட் சமூகத்​தினர் என்பதை இத்துடன் பொருத்திப் பார்க்​கலாம்!
  • ஹரியாணா விளையாட்டு வீரர்​களுடன் உரையாடி ராகுல் காந்தி வெளியிட்​டிருக்கும் காணொளி முக்கி​யத்துவம் வாய்ந்​த​தாகக் கருதப்​படு​கிறது. மோஹித் குரோவர், வர்த்தன் யாதவ் போன்ற இளம் வேட்பாளர்​களைக் களமிறக்கி​யிருக்கும் காங்கிரஸ், ராஜ் பப்பர், முகேஷ் ரிஷி போன்ற சினிமா நட்சத்​திரங்​களைப் பிரச்​சா​ரத்தில் ஈடுபடுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க முயல்​கிறது.
  • “அக்னிபத் திட்டத்தின் பெயரை ‘அதானி திட்டம்’ என்றே மாற்றி​விடலாம்; அந்த அளவுக்கு அக்னி வீரர்​களுக்குப் பாதகத்​தை​யும், அதானி குழுமத்​துக்குப் பலன்களையும் தரும் திட்டம்” என்று ராகுல் முன்வைக்கும் கடும் விமர்​சனங்​களால் பாஜகவினர் பதற்றமடைந்​திருக்​கின்​றனர். அக்னி வீரர்​களுக்கு ஓய்வூ​தியம், அரசுப் பணி வழங்கப்​படும் என்று அமித் ஷா, ராஜ்நாத் சிங் தொடர்ந்து விளக்​கமளித்து​வருவது இதற்குச் சான்று.
  • காங்கிரஸைப் பொறுத்​தவரை, முதல்வர் வேட்பாளர் என யாரையும் முன்னிறுத்​தவில்லை. எனினும், ஹூடாதான் முதல்வர் வேட்பாளர் என மல்லி​கார்ஜுன கார்கே மேடையில் சூசகமாகச் சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறார்.

திருப்பு​முனைகள்:

  • கொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்​சாட்டு​களில் தண்டனை பெற்று ரோஹ்தக் சிறையில் அடைக்​கப்​பட்​டிருந்த பாபா குர்மீத் ராம் ரஹீம் 20 நாள்கள் பரோலில் வெளிவந்​திருப்பது இந்தத் தேர்தலில் புதிய பேசுபொருளாகி​யிருக்​கிறது. இதற்கு முன்பும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், ஹரியாணா உள்ளாட்சித் தேர்தல், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் போன்ற தருணங்​களில் அவருக்குப் பரோல் வழங்கப்​பட்டது சர்ச்​சைகளுக்கு வழிவகுத்தது.
  • குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் அவர் 50 நாள்கள் பரோலில் வெளியில் இருந்​தார். இதன் பின்னணியில் பாஜக அரசு இருப்​ப​தாகவே கருதப்​படு​கிறது. அவரது ‘டேரா’ அமைப்பின் அரசியல் பிரிவு பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் பணியில் மறைமுகமாக ஈடுபடு​வ​தாகக் கருதப்​படுகிறது.
  • மாயாவ​தியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை இந்திய தேசிய லோக் தளம் கட்சி​யுடன் கூட்டணி அமைத்​திருக்​கிறது. ஜனநாயக் ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி​யுடன் கைகோத்​திருக்​கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி​யிடு​கிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகளில் சீட் வழங்கப்படாத அதிருப்​தியில் சுயேச்​சை​யாகப் பலர்
  • போட்டி​யிடு​கின்​றனர். உள்ளூர் செல்வாக்கு கொண்ட அவர்களின் வெற்றி - தோல்வி​களும் இந்தத் தேர்தலில் மிகுந்த கவனத்​துக்​குரியவை. ஹரியாணா சிறிய மாநிலம் என்றாலும் பல்வேறு வகைகளில் முக்கி​யத்துவம் வாய்ந்தது என்பதால், இந்தத் தேர்தலின் முடிவுகள் தேசிய அளவில் அதிர்​வுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்